தொன்மக் கதைகளைத் தொடராகவோ, முழுமையாகவோ எடுத்தாளுவதில் வல்லவர் மகாகவி பாரதி. அவற்றை அப்படியே புராணப் பிரசங்கமாகவோ, கதை சொல்லலாகவோ மீளப் பயன்படுத்தாமல், தன் கதைகளில், கட்டுரைகளில், கவிதைகளில், சொற்பொழிவுகளில் கூட, காலத் தேவைக்கேற்பப் பயன்படுத்தியிருக்கிறார் அவர்.
மக்களுக்குத் தேச விடுதலை உணர்வை ஊட்டுதற்கும் அரசியல் விழிப்புணர்வைக் கூட்டுதற்கும் அவ்வாறு மீட்டுருவாக்கம் செய்வதே அவரது நோக்கமாக இருந்தது. 'இரணியன் போல் அரசாண்டான் ஜார் அரசன்' என்பதில் பிரகலாதனின் பெருஞ்சரித்திரம் நவீனத் தோற்றம் கொள்ளும்.
'முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடை வில்?' எனும் கேள்வியில் இராமாயணமும், 'காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது' என வரும் தொடரில் மகாபாரதமும் சித்திரமாகிவிடுகின்றன. அந்த வகையில் அவர்தம் படைப்பின் உச்சம், 'பாஞ்சாலி சபத'த்தில் வரும் ஒரு தொடர், 'முன்னம் ஒரு வேனன் முடிந்த கதை கேட்டிலையோ?' என்பது.
இந்தக் கேள்வியை எழுப்பி, அதற்கு விடையையும் பின்வருமாறு பாரதி சொல்லி முடிக்கிறார்.
நல்லோர் தமது உள்ளம் நையச்
செயல் செய்தான்
பொல்லாத வேனன்
புழுவைப் போல் மாய்ந்திட்டான்
சூது தீது என்பதுபோல், 'ஆயிரங்களான நீதி அவை உணர்ந்த தருமன்', மாமன் சகுனியுடன் மாயச் சூதாடி, யாவும் தோற்று, பாஞ்சாலியையும் பணயப் பொருளாக்கி, வைத்து இழந்துவிட்டான். அதுகண்டு கெக்கலித்த துரியோதனன், 'விதுரனே நீ சென்று அடிமை பாஞ்சாலியை நடந்ததெல்லாம் சொல்லி இங்கு கொண்டு வா' என்று ஆணையிடுகிறான்.
அதுகேட்டுச் சீற்றம் கொண்டபோதும் அடக்கியபடியே, துரியோதனனின் சிற்றப்பாவான விதுரன் சொல்லுகிறான்:
மூட மகனே, மொழியொணா
வார்த்தையினைக்
கேடுவரஅறியாய், கீழ்மையினால்
சொல்லிவிட்டாய்.
புள்ளிச் சிறுமான் புலியைப்போய்ப்
பாய்வதுபோல்,
பிள்ளைத் தவளை பெரும்பாம்பை
மோதுதல்போல்,
ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய்.
தெய்வத் தவத்தியைச் சீர்குலையப்
பேசுகின்றாய்;
நின்னுடைய நன்மைக்குஇந் நீதியெலாம்
சொல்கிறேன்.
என்னுடைய சொல்வேறு
எவர்பொருட்டும் இல்லையடா!
இவ்வாறு சொல்லிவரும்போது விதுரன் சொன்ன கதைதான், 'வேனன் முடிந்த கதை'. இது விஷ்ணு புராணத்தில் இடம்பெறும் கதை.
முன்னொரு காலத்தில் வேனன் எனும் மன்னன் இப்பூவுலகை ஆண்டு வந்தான். இரணியன்போல் அரசாண்ட இவனால் மக்கள் பெருந்துயர் எய்தினர். கொடுங்கோலனாகிய இவன், தன் ஆட்சிப்பரப்பில் எங்கும் வேள்விகள் நடத்தக் கூடாதென்று தடை விதித்தான்; மீறிச் செய்வோரைக் கொன்று குவித்தான். நாட்டில் பசியும் பஞ்சமுமே மிஞ்சின. முனிவர்கள் கோபமுற்று, வேனனைக் கொன்றுவிட்டனர்.
அவசரப்பட்டு அரசனைக் கொன்றுவிட்ட அவர்களால், அரசாட்சி முறையை நிலைநாட்ட முடியவில்லை. அவரவர் விரும்பியவாறு ஆடத் தலைப்பட்டதனால், தலைமை இல்லாத நாடு தறிகெட்டுப் போனது; தருமம் நிலைகுலைந்தது. நாடு நலிவடைந்து அழியும் தறுவாயில், முனிவர்கள் மீளவும் கூடி புதிய மன்னனை உருவாக்குவது குறித்து விவாதித்தனர்; இறந்த வேனனின் உடலில் இருந்து புதிய அரசனைத் தோற்றுவிக்க முடிவு செய்தனர்.
முதலில் அவனது இடக்கை பற்றிக் கடைந்தனர். அதில் இருந்து பூதம் தோன்றியது. அதனை விரட்டியடித்த முனிவர்கள், வேனனின் வலக்கையைக் கடைந்தனர். அவர்கள் விரும்பிய வண்ணமே, அதிலிருந்து ஓர் அழகிய ஆண்மகன் தோன்றினான். பிருது என்று பெயர் தந்து அவனுக்கே முடிசூட்டினர். ஆனாலும், நிலைமை மாறவில்லை. அதுவரையில் மனம் போனபடி வாழ்ந்த மக்கள் மறுபடி உழைக்கத் தயாராக இல்லை; உற்பத்தி இல்லை.
மீளவும் வறட்சி. சினமுற்ற பிருது மிரட்டியது கண்டு அஞ்சிய பூமி, பசு உருக்கொண்டு பிரம்ம லோகத்தில் ஓடி ஒளிந்தது. பின்தொடர்ந்து சென்ற பிருது, பூமியிடம் பணிந்து வேண்ட, மனம் இரங்கிய பசு பால்மாரி பொழிந்ததாம். மீளவும் பசுமை பூத்துக் குலுங்கியது. பசியும் பஞ்சமும் தொலைந்தன. வளம் மிகுந்ததாய் இப்பூமி ஆனதால், இதற்கு, 'பிருத்வீ' என்ற பெயரும் வந்தது.
இந்தக் கதையை, விதுரனைக் கொண்டு சொன்ன செய்தி மிக நல்ல செய்தி.
முன்னம் ஒரு வேனன் முடிந்த
கதை கேட்டிலையோ
நல்லோர் தமது உள்ளம் நையச்
செயல் செய்தான்
பொல்லாத வேனன் புழுவைப் போல்
மாய்ந்திட்டான் (பாஞ்சாலி சபதம்)
என்று மூன்று வரிகளில் சொல்லி முடிக்கிற பாரதி, நீள விரிக்காமல் உணர்த்துகிற செய்தி இதுதான்}
நல்லவனாய் இருக்கும் வரை மன்னன் மக்களின் தலைவன்; அறம் தவறி அதிகாரம் செலுத்தினால், அவன் கொடுங்கோலன்; அற்பப் புழுவுக்கு நேரும் முடிவுதான் அவனுக்கும். அதற்காக, அரசன் இன்றி ஆட்சி நடத்த முடியுமா? அழிக்கிற முனிவர்களே ஆக்கத்திற்கான வழியும் தேடுகிறார்கள்.
முயற்சி எடுத்தவுடன் கனிவதில்லை; தொடர்ந்து செயல்படுவதில்தான் சிறக்கும் என்பதை, இடக்கை } வலக்கை என்ற புனைவுகளில் விளக்கிச் சொல்லும்
இக்கதை, பிருதுவின் தோற்றத்தில் உயிர்க்கிறது. ஆனாலும், மனம் போன போக்கில் வாழ்ந்த மக்களை ஒருநிலைப்படுத்த அவன் எடுத்த முயற்சி தோற்கிறது. பயந்த பூமி பசு உருக் கொண்டு பிரம்ம லோகம் போய் ஒளிந்து கொண்டதாகச்
சொல்லப் பெறுவது குறியீட்டுத் தன்மை உடையது.
அரசனின் ஆட்சி அதிகாரத்திற்குக் கட்டுப்படாத மக்களின் புலப்பெயர்வு அது. மக்கள் இல்லாமல் மன்னன் ஆள்வது எப்படி? அவன் பயந்து பெயர்ந்த மக்களின் மனம் மகிழும்படியான வாக்குறுதிகள் தந்து அவற்றைக் காப்பாற்றியதனால், மீளவும் பூமி பூத்துக் குலுங்குகிறது. மன்னன் பெயரே மண்ணுக்கும் நிலைக்கிறது.
எனவே, பார்வைத் திறன் அற்ற திருதராட்டிரனால், அறம் தலைநிறுத்த வழியில்லை. அவன் பெற்ற நூற்றுவரும் மனம் போன போக்கின்படி போவதனால், ஐவராலும் அழிவது உறுதி. அதற்கு பாஞ்சாலிக்கு இழைக்கும் இன்னலே இறுதி. அதனால்தான்,
நின்னுடைய நன்மைக்கு இந் நீதி
எலாம் சொல்லுகிறேன்
என்னுடைய சொல் வேறு
எவர்பொருட்டும் இல்லையடா
பாண்டவர்தாம் நாளைப் பழி
இதனைத் தீர்த்திடுவார்
மாண்டு தரை மேல் மகனே கிடப்பாய் நீ
தன் அழிவு நாடும் தறுகண்மை
என்னேடா?
என்று விதுரன் துரியனுக்கு நீதி உரைக்கும் நேரத்தில் வேனன் கதையினை முன்னெடுத்து உரைப்பதாய் பாரதி பாடுகிறார். 'மன்னனும் மக்களும் இணைந்து பணி செய்தால் இப்பூவுலகு தழைக்கும். அந்த அரசே என்றும் நிலைக்கும்' என்பது உணரத் தரும் செய்தி.
இக்கதை, துரியோதனின் செவி ஏறாது என்பது தெரிந்த கதை; கேட்கும் மக்கள் உணர்வார்கள் அல்லவா? அதனால்தான், விதுரன் வாயிலாக மக்களிடம், பாரதி கேட்கிறார்: 'முன்னம் ஒரு வேனன் முடிந்த கதை கேட்டிலையோ?'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.