காந்தி ஜெயந்தி வரும்போதெல்லாம், அஞ்சலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சென்னை தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள தனது இல்லத்துக்குத் திரும்பிய காமராஜர் அமைதியாக பூவுலகிலிருந்து விடைபெற்றது நினைவுக்கு வரும்.
களைப்பாக வந்தவர், உணவருந்திவிட்டுப் படுத்ததுதான் தெரியும். அநாயாசமாக உறக்கத்திலேயே விடைபெற்றார் காமராஜர். இதுபோன்ற அமைதியான மரணம் யாருக்கு வாய்க்கிறதோ, அவர்கள் புனிதர்கள் என்பது நமது முன்னோர்களின் வாக்கு. அவர் மறைந்தபோது துக்ளக் இதழின் நிறுவன ஆசிரியர் சோ.ராமசாமி எழுதியிருந்ததை இங்கே பதிவு செய்கிறேன்-
"ஒரு சரித்திரம் முடிந்தது என்று சொல்வார்கள்; ஒரு சகாப்தம் முடிந்தது என்று சொல்வார்கள்; ஒரு தியாகப் பரம்பரை முடிந்தது என்று சொல்வார்கள்; எல்லாமே முடிந்துவிட்டது என்று சொல்வதுதான் உண்மையோ என்ற சஞ்சலம் வாட்டுகிறது. இனி நம்மால் அவரை வேதனைப்படுத்த முடியாது; இனி நம்மால் அவரை அவமானப்படுத்த முடியாது; பட்டது போதும் என்று போய்விட்டார் அந்த நல்ல மனிதர். பட வேண்டியது இனி நாம்தான்.''
காமராஜர் குறித்த நினைவு வந்தபோது சோ சார் எப்போதோ 'துக்ளக்'கில் எழுதிய 'காமராஜை சந்தித்தேன்' கட்டுரை நினைவுக்கு வந்தது. காமராஜரின் பேட்டி உள்பட அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் சிலரின் பதிவுகளுடன் 'காமராஜை சந்தித்தேன்' புத்தக வடிவம் பெற்று, பல பதிப்புகளையும் கண்டுவிட்டது.
காமராஜர் பதவியில் இருக்கும்போதும், செல்வாக்குடன் வலம் வந்தபோதும் அவருடன் நெருங்கி பழகியவர் அல்ல சோ சார் என்பது பலருக்கும் தெரியாது. 1971 தேர்தலில் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸை ஆதரித்து தமிழகமெங்கும் பிரசாரத்தில் ஈடுபட்ட கவிஞர் கண்ணதாசன், எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோருடன் சோ சாரும் இணைந்தார். அப்போதும்கூட, நெருங்கிப் பழகவில்லை.
"தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் அவரை சந்தித்தேன். 1971 தேர்தல் முடிந்து ஸ்தாபன காங்கிரஸின் தோல்விக்குப் பிறகு அவரைப் பார்ப்பதற்காக முதல்முறையாக அவர் வீட்டிற்குச் சென்றேன்'' என்று தொடங்குகிறது 'காமராஜை சந்தித்தேன்' என்கிற சோ சாரின் பதிவு. அதுமுதல் காமராஜரின் மறைவு வரை அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் சோ சார்.
இதெல்லாம் இப்போது எதற்கு என்று நீங்கள் கேட்கக் கூடும். காமராஜரை சோ சார் நினைத்து வியந்ததைப் போலவே, சோ சாரை எப்பொழுதும் நினைத்து வியப்பவன் நான். அவரது பிறந்த தினம் அக்டோபர் 5. இப்போது மீண்டும் 'காமராஜை சந்தித்தேன்' புத்தகத்தைப் படித்துப் பார்க்கும்போது, அந்த இரண்டு ஆளுமைகளின் உயரம் என்னை மலைப்பில் ஆழ்த்துகிறது.
------------------------------------
நான் ஒவ்வொரு முறை நெல்லைக்கு, குறிப்பாக திருவள்ளுவர் கழக நிகழ்ச்சிக்குத் தென்காசிக்குப் போகும்போதெல்லாம், ஒரு மனிதரை சந்திக்க வேண்டும் என விழைவேன். பல முறை சென்றுவிட்டேன்; ஆனால் அவரை சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. அவர்தான் 'ஸோஹோ' மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு.
இப்படியெல்லாம்கூட ஒரு மனிதரால் இருக்க முடியுமா என்கிற வியப்புதான் அவரை சந்திக்க வேண்டும் என்கிற எனது ஆர்வத்துக்குக் காரணம்.
ஸ்ரீதர் வேம்பு இந்தியப் பணக்காரர்கள் வரிசையில் 46-ஆவது நபராக இருப்பதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.40,000 கோடி. 2023-ஆம் ஆண்டின் 'ஸோஹோ' நிறுவன இயக்க வருவாய் (டர்ன்ஓவர்) ரூ.8,700 கோடி. லாபம் மட்டுமே ரூ.2,800 கோடி. அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர், ஜப்பான், சீனா என்று உலகின் 180 நாடுகளில் கிளை பரப்பி செயல்படுகிறது 'ஸோஹோ' நிறுவனம்.
அதனால் எல்லாம் நான் அவரை சந்திக்க விழையவில்லை. காரணத்தைச் சொன்னால், நீங்களும் ஒருவேளை என்னைப்போல விழையக் கூடும்.
தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் இருக்கிறது கோவிந்தபேரி என்கிற கிராமம். பொதிகை மலையின் அடிவாரத்தில் உள்ள அந்த கிராமத்தில்தான் ஆண்டொன்றுக்கு ரூ.8,500 கோடி வருவாய் ஈட்டும் 'ஸோஹோ' நிறுவன அதிபர் வசிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
அது மட்டுமல்ல, தென்காசியை அடுத்த மத்தளம்பாறையில் 2011-இல் தலைமை அலுவலகம் அமைத்து அதில் 700-க்கும் அதிகமானோர் பணிபுரிகிறார்கள் என்று கேள்விப்படும்போது, அந்த மனிதரை சந்திக்க வேண்டும் என்று விழையாமல் இருப்பது எங்ஙனம்?
'ஸ்ரீதர் வேம்புவின் சாதனை வாழ்க்கை' என்கிற புத்தகம் விமர்சனத்துக்கு வந்திருந்தது. சற்றும் தாமதிக்காமல், வேறு வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் படிக்கத் தொடங்கிவிட்டேன்.
சென்னை ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்று, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர் வேம்பு. கலிஃபோர்னியாவில் உள்ள குவால்காம் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவத்துடன் அவர் தொடங்கியதுதான் 'ஸோஹோ' என்கிற மென்பொருள் நிறுவனம்.
2005-இல் இணையதளம் மூலம் வீட்டில் இருந்தபடி பணிபுரிவதற்கான மென்பொருளை உருவாக்கியதில் தொடங்குகிறது 'ஸோஹோ' நிறுவனத்தின் வெற்றிப் பயணம். ஸோஹோ டாட்காம் என்கிற இணையதளம் தொடங்கப்பட்டு, 'ஸோஹோ மென்பொருள் மூலம் வர்த்தகம் நடத்தலாம்' என்கிற கருத்தாக்கம் முன்மொழியப்பட்டது.
கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின்போது பணியாளர்கள் அவரவர் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை பிரபலமானதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே, 'ஸோஹோ' அதற்கான கருத்தாக்கத்தை (கான்செப்ட்) முன்னெடுத்தது என்பதுதான், ஸ்ரீதர் வேம்புவின் தொலைநோக்குப் பார்வைக்கு எடுத்துக்காட்டு.
ஸ்ரீதர் வேம்பு குறித்தும், அவரது சாதனைகள் குறித்தும், 'ஸோஹோ' நிறுவனத்தின் உருவாக்கம், வளர்ச்சி குறித்தும் விவரமாகப் பதிவு செய்திருப்பதற்கு ஆசிரியர் ஜி.எஸ்.சிவகுமாருக்குப் பாராட்டுக்கள். அந்த நிறுவனத்தின் தொழில் போட்டிகள் குறித்தும், ஸ்ரீதர் வேம்புவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துமான பதிவுகளைத் தவிர்த்திருக்கலாம்.
------------------------------------
புத்தக விமர்சனத்திற்கு வந்திருந்தது
மீ.யூசுப் ஜாகிரின்
'நீ உதிர்த்த சிறகின் பறவை' என்கிற கவிதைத் தொகுப்பு. அதில் இருக்கிறது இந்தக் கவிதை.
இரவையும், பகலையும்
போலவேனும் இருப்போம்...
எப்போதும் சந்தித்துக்கொள்ள
முடியவில்லையென்றாலும்...
அந்தியாய், வைகறையாய்
சில நிமிடங்கள் சந்தித்து
விடை பெறலாம்..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.