இந்த வாரம் கலாரசிகன் - 22-06-25 
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 22-06-25

எனது நண்பரும் பட்டயக் கணக்காளருமான சந்தானகோபாலனின் மணிவிழா (சஷ்டியப்தபூர்த்தி) நிகழ்வுக்கு திருவிடந்தை சென்றிருந்தேன்.

DIN

எனது நண்பரும் பட்டயக் கணக்காளருமான சந்தானகோபாலனின் மணிவிழா (சஷ்டியப்தபூர்த்தி) நிகழ்வுக்கு திருவிடந்தை சென்றிருந்தேன். காரைக்குடிக்காரரான சந்தானகோபாலனின் கல்லூரித் தோழரும் எங்கள் இணையாசிரியருமான ஜே.ரங்கராஜன் என்னுடன் வந்திருந்தார். காரைக்குடியிலிருந்து நண்பர்கள், உறவினர்கள், கல்லூரித்

தோழர்கள் என்று உற்றமும் சுற்றமுமாக அந்த மண்டபமே கோலாகலமாக இருந்தது.

காரைக்குடியிலிருந்து நண்பர் சுந்தரராமன் வராமல் இருந்திருந்தால்தான் நான் வியப்படைந்திருப்பேன். உச்சநீதிமன்ற நீதிபதிகளிலிருந்து உள்ளூர் தமிழறிஞர்வரை சுந்தரராமனுக்குத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. காரைக்குடி தமிழிசைச் சங்கத்தின் செயலராக இருக்கும் சுந்தரராமன் எனக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கு அரிய பொக்கிஷமொன்றைக் கொண்டுவந்திருந்தார்.

பொக்கிஷம் என்றால் அது நிஜமாகவே ஒரு பொக்கிஷம்தான்.1972-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான புத்தகம் அது.காரைக்குடியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்ட தமிழியக்கப் பாசறை வெளியீடு.

காரைக்குடி வள்ளுவர் அச்சகம், தங்கபஸ்பம் புகையிலை, அருணகிரிவிலாஸ் சீயக்காய்த்தூள், சரஸ்வதி கபே உள்ளிட்ட பல விளம்பரதாரர்கள் இப்போதும் இருக்கிறார்களா என்று தெரியாது. ஆனால் அவர்கள் இருந்ததை தமிழியக்கப் பாசறை வெளியிட்ட புத்தக விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. அரைநூற்றாண்டுக்கு முன்பு லட்சிய வெறியுடன் 'எமையியக்கித் தானியங்கும் செந்தமிழ் வாழ அமைவாகக் காப்போம் தமிழ்!' என்கிற முழக்கத்துடன் உருவாக்கப்பட்ட இயக்கம்தான் காரைக்குடி தமிழியக்கப் பாசறை.

தமிழியக்கப் பாசறையின் முயற்சியாக 'கலைச்சொற் பட்டி-க'- என்கிற பெயரில் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் சொற்கள் வழங்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் தொகுப்புதான் அந்த நூல். புதிய வார்த்தைகளால் தமிழை செம்மைப்படுத்த ஆ. தமிழரசன், சி.நாச்சியப்பன் அ.முத்தழகன், இரா.ப.அருளரசு,வெ.தமிழன்பன், துரை.மாணிக்கம், சுப்பையா உள்ளிட்டோர் இணைந்தும் முனைந்தும் கலைச்சொற் பட்டி-க தயாரித்து அச்சிட்டிருக்கிறார்கள். காரைக்குடியில் அப்போது இயங்கிய பல நிறுவனங்கள் விளம்பரப் புரவலர்களாக இருந்து அதை வெளிக்கொணர உதவி இருக்கின்றன.

புதிய சொற்களால் தமிழை வளப்படுத்தும் முயற்சிகள் கடந்த நூற்றாண்டில் பலராலும் முன்னெடுக்கப்பட்டன. அந்த முயற்சி சுதந்திர இந்தியாவில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியாரால் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகம் எஸ்.வையாபுரிபிள்ளை தலைமையில் தமிழ் லெக்ஸிகன் (கலைக்களஞ்சியம்) வெளிக்கொணர்ந்தது. தற்போது தமிழக அரசால் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் தலைமையில் 'தமிழ் வளர்ச்சிக் கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

காரைக்குடி தமிழியக்கப் பாசறையின் 'கலைச்சொற் பட்டி-க'-நூலைத் தேடிப்பிடித்து என்னிடம் சேர்த்த நண்பர் சுந்தரராமனுக்கு நன்றி. அதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த 'மணிவிழா' நாயகர் நண்பர் சந்தானகோபாலனுக்கும் நன்றி.

நாமக்கல்லில் கவியரசு கண்ணதாசன் கவிதைத் திருவிழாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டேன். இந்த ஆண்டு கவியரசு கண்ணதாசன் விருது பெற்றவர் தமிழருவி மணியன். பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் ஒருங்கிணைத்திருந்த அந்த நிகழ்ச்சியில் நாமக்கல் கம்பன் கழகத் தலைவர் வ.சத்தியமூர்த்தி, நாமக்கல் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.குழந்தைவேல், என் இனிய நண்பர் மருத்துவர் செழியன் உள்ளிட்டோர் முன்னிலையில் தமிழருவி மணியனுக்கு விருது வழங்கும் பேறு எனக்கு கிட்டியது.

கவியரசு கண்ணதாசன் குறித்து நூற்றுக்கணக்கில் புத்தகங்கள் வெளிவந்து விட்டன. ஆயிரக்கணக்கான மேடைகளில் உரைகள் நிகழ்த்தப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான செய்திகள் கேள்வி ஞானத்தின் அடிப்படையிலானவை. கவியரசு கண்ணதாசனை நேரில் சந்தித்துப் பழகி எழுதியவர்களின் படைப்புகள் மிகவும் குறைவு.

கவியரசு கண்ணதாசனுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டவர் என்பது மட்டுமல்லாமல் அவரை வாசித்தும், சுவாசித்தும் நேசிப்பவர் தமிழருவி மணியன். காந்திய சிந்தனையாளராகவும், காமராஜரை தனது தலைவராக பூஜிப்பவருமான தமிழருவி மணியன் கவியரசர் குறித்து உரையாற்றத் தொடங்கினால் நேரம் போவது அவருக்கும் தெரியாது; கேட்பவர்களுக்கும் தெரியாது. அப்படியே நம் கண்முன்னே கண்ணதாசனை உயிர்ப்பித்து நிறுத்திவிடுவார்.

அந்த நிகழ்ச்சியின்போது கையொப்பமிட்டு தமிழருவி மணியன் எனக்கு அளித்த நூல், 'காலத்தை வென்ற கண்ணதாசன்'. கவியரசு கண்ணதாசனின் ஆகச்சிறந்த 17 திரைப்பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவை குறித்து தமிழருவி மணியன் எழுதிய தொகுப்புதான் 'காலத்தை வென்ற கண்ணதாசன்'. நாமக்கல்லிலிருந்து திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை என்று பயணித்தபோது 'காலத்தை வென்ற கண்ணதாசன்'கட்டுரைகளை மட்டுமல்ல பாடல்களையும், கேட்டு ரசித்தேன்.

தஞ்சையில் மறைந்த தினமணியின் புகைப்படக்காரர் தேனாரமுதனின் படத்திறப்புக்குச் சென்ற போது, நண்பர் மணவை பொன்.மாணிக்கம் அறிமுகப்படுத்திய இளைஞர் கவிஞர் ப.விஜய். அவரது கவிதைத் தொகுப்பு 'மக்கும் குப்பையில் எழுதிய மக்காக் குப்பை'. அதிலிருந்து எடுத்த கவிதை வரிகள் இவை.

கொலைசெய்த குற்றவாளியும்

ஜனாதிபதியின் கருணைமனுவால்

விடுதலையாவான்

ஜோஸியக்கிளியோ

அகப்பட்டது முதல்

அடைபட்டுக்கிடக்கிறது

செய்த குற்றம் தெரியாமல்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

தருமபுரியில் பல்வேறு நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

திமுக தோல்வி பயத்தில் துவண்டுள்ளது

தமிழக முதல்வா் இன்று தருமபுரிக்கு வருகை

கரடிவாவி அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழா

SCROLL FOR NEXT