சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால், மதுரை திருநகரில் பேட்டி எடுப்பதற்காக ஏற்பட்ட சந்திப்பு குடும்ப நட்பாக மாறி கஷ்ட நஷ்டம், நல்லது கெட்டதுகளைப் பகிர்ந்து கொள்ளும் நெருக்கமாக மாறியதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் வியப்பாக இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் எனக்கிருந்த இன்னொரு தொடர்பும் முடிவுக்கு வந்தது.
காமராஜர் முதல்வராக இருந்தபோது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர் கிருஷ்ணசாமி நாயுடு. அவருடைய சகோதரர் மகன் விலங்கியல் மருத்துவர் டாக்டர் சுபாஷ் சந்திரன். இதய நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற சுபாஷ் சந்திரன் அந்த வாய்ப்பை வீணாக்காமல் அங்கே தனது விலங்கியல் மருத்துவ மேற்படிப்பையும் மேற்கொண்டார். அவரது பேராசிரியராக இருந்தவர்தான் டாக்டர் பாதூன்.
இந்தியா திரும்பி சில காலம் விலங்கியல் மருத்துவராகப் பணியாற்றி, அதற்குப் பிறகு விலங்குகளுக்கான மருந்துத் தயாரிப்பில் இறங்கினார் அவர். மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் அவர் நிறுவிய பாதூன் ஃபார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தில் தயாரான விலங்கியல் மருந்துகள் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்புப் பெற்றன.
மனிதர்களுக்கான மருந்துகளுக்கு இருப்பது போன்ற தரக்கட்டுப்பாடு முனைப்பு விலங்குகளுக்கான மருந்துகளுக்கு அப்போது தரப்படவில்லை. சித்த, ஆயுர்வேதத் தயாரிப்புகள் என்கிற பெயரில் தரமற்ற பல மருந்துகள் விலங்குகளுக்கு அப்போது சந்தைப்படுத்தப்பட்டு வந்தன. அதற்கும் தரக்கட்டுப்பாடு வேண்டும் என்கிற முதல் குரல் டாக்டர் சுபாஷ் சந்திரனால்தான் எழுப்பப்பட்டது. உச்சநீதிமன்றம் வரை தனி மனிதனாகப் போராடி வெற்றியும் பெற்றார்.
தமிழகத்தின் முன்னணி பருவ இதழ்களில் டாக்டர் சுபாஷ் சந்திரன் குறித்தும் அவரது சாதனைகள் குறித்தும் அப்போது நான் பதிவு செய்திருக்கிறேன். அப்படி ஏற்பட்ட தொடர்பு, குடும்ப ரீதியிலான உறவாக மாறிவிட்டது. நான் மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தினர் பலரும் மதுரைக்குப் போனால், டாக்டர் சுபாஷ் சந்திரன் வீட்டில்தான் தங்குவோம். அவர்களும் எங்கள் வீட்டுக்கு வராமல் இருக்க மாட்டார்கள்.
அவரது மூன்று பெண் குழந்தைகளும் பள்ளிச் சிறுமிகளாக, கல்லூரி மாணவிகளாக, திருமணமான பெண்களாக வளர்ந்ததை எல்லாம் உடனிருந்து பார்த்தவன் நான். அமெரிக்காவில் குடியேறினாலும் பேபியும், சாந்தியும் அடிக்கடி என்னைத் தொடர்பு கொள்ளாமல் இருந்ததில்லை.
எனது தாயாருக்கும், டாக்டரின் மனைவி கிருஷ்ணா ராஜத்துக்கும் இடையே இருந்த நெருக்கத்தை வார்த்தையில் வர்ணிக்க முடியாது. அம்மாவுக்கு திருநகரில் டாக்டர் வீட்டுக்குப்போய், அவரது மனைவியுடன் தங்கியிருப்பது போன்ற மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது.
டாக்டர். சுபாஷ் சந்திரன் பத்தாண்டுகளுக்கு முன்னால் மறைந்தார். ஞாயிறன்று அவரது மனைவி கிருஷ்ணா ராஜமும் மறைந்து விட்டார். அந்த மூன்று குழந்தைகளும் இப்போது பெரியவர்கள். ஆனாலும்கூட, அவர்களுக்கு ஆறுதல் சொல்ல நான் போகாமல் இருந்தால் எப்படி? விரைந்து விட்டேன்.
நான் 'தினமணி' ஆசிரியரானபோது டாக்டரும், அவரது மனைவியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர்களது சகோதரனாகவே என்னைப் பார்த்தார்கள். பூர்வஜென்ம விட்ட குறை தொட்ட குறை என்பார்கள். முற்பிறவி விட்ட குறை தொட்ட குறைதான் அந்தக் குடும்பத்தினருடனான எனது உறவு.
சிலர் மறைந்தாலும் அந்த உறவும் நினைவும் மறைந்துவிடாது. அதை நான் அனுபவபூர்வமாக உணர்கிறேன்.
சிவாலயம் மோகன் குறித்தும் அவரது தமிழ்ப் பணி குறித்தும் இதற்கு முன்பும் நான் பதிவு செய்திருக்கிறேன். 125 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த வடிவேல் செட்டியாரின் திருக்குறள் உரை விளக்கமும், 100 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கிருஷ்ணாம்பேட்டை குப்புசாமி முதலியாரின் திருக்குறள் உரை விளக்கமும், 50 ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் சுந்தரராஜனால் தொகுக்கப்பட்ட கம்ப ராமாயண அகராதியும் அவரது முயற்சியினால்தான் இப்போது மறுபதிப்புக் கண்டிருக்கின்றன.
தருமை ஆதீனத்தின் சார்பில் இயங்கும் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனமும், எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் தமிழ்ப் பேராயமும் இணைந்து 6-ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டைக் கடந்த வாரம் சிறப்பாக நடத்தின. அந்த மாநாட்டில் குருமகா சந்நிதானத்தின் திருக்கட்டளைப்படி, உச்சநீதிமன்ற நீதியரசர் அரங்க. மகாதேவனுடன் நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.
'தணிகைமணி' வ.சு.செங்கல்வராய பிள்ளை என்னும் தமிழறிஞர் 1932-1971 காலகட்டத்தில் தனது 40 ஆண்டு இடைவிடாத உழைப்பில் தேவாரத்தைப் பகுப்பாய்வு செய்து 15 தொகுதிகளாகப் பதிப்பித்தார். அரசின் பதிவுத் துறையில் பணியாற்றிய பிள்ளையவர்கள் ஆவணப் பதிவின் அருமை உணர்ந்து, தனி ஒருவராக 'ஒளிநெறி' என்னும் தலைப்பில் சொல், பொருள், விளக்கங்களுடன் அந்தத் தொகுப்பை வெளியிட்டார்.
தேவாரம் முதல் திருவிசைப்பா ஈறாக ஒன்பது திருமுறைகட்குச் சொற்பொருள் அடைவான 'ஒளிநெறி, ஒளிநெறிக் கட்டுரைகள்' சமயத் தமிழுக்குக் கிடைத்திருக்கும் அற்புதப் பொக்கிஷம். குன்றக்குடி ஆதீனகர்த்தர் தவத்திரு பொன்னம்பல அடிகளார் தனது ஆசியுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல, 'பல பெரும்புலவர்களைக் கூட்டி பல நூறாயிரம் ரூபாய் செலவிட்டாலும் எந்தப் பல்கலைக்கழகமும் செய்ய இயலாத ஒப்பில்லாப் பெருஞ்செயல்' என்பதில் சந்தேகம் இல்லை.
பழந்தமிழ் இலக்கியங்களுக்குப் புத்துயிர் தரும் 'செம்பதிப்புச் செம்மல்' சிவாலயம் மோகன் வெளிக்கொணர்ந்திருக்கும் 8,000 பக்கங்கள் கொண்ட 15 தொகுதிகள் நீதியரசர் அரங்க. மகாதேவனால் வெளியிடப்பட்டது என்பதுடன் இன்னொரு சிறப்பும் உண்டு. தருமபுரம் ஆதீனமடத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளின் மணி விழா ஆண்டில் 365 நாள்களும் தினமும் ஒரு திருநூல் வெளியிடப்படுகிறது என்பதும், அதில் இதுவும் ஒன்று என்பதும் தனிச்சிறப்பு!
மனிதர்கள் - விலங்கினங்களுக்கு இடையேயான மோதல்கள் குறித்த கட்டுரை ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது நூர்தீன் எழுதிய கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன -
காட்டை ஆக்கிரமிக்க
சாலை போட்டார்கள்
மனிதர்கள்
ஊருக்குள் புகுந்து
துவம்சம் செய்தன
யானைகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.