தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 25-05-2025

மூன்று நாள் பயணமாகக் கொழும்பு சென்றிருந்தேன். மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயாவின் தொடர்பு என்பது இலங்கைப் பயணத்துக்கு எனக்குக் கிடைத்த அடையாள அட்டை என்றுதான் கூற வேண்டும்.

கலாரசிகன்

மூன்று நாள் பயணமாகக் கொழும்பு சென்றிருந்தேன். மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயாவின் தொடர்பு என்பது இலங்கைப் பயணத்துக்கு எனக்குக் கிடைத்த அடையாள அட்டை என்றுதான் கூற வேண்டும்.

அவரது பரிந்துரையின் பேரில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்த மருத்துவர்.மருதினி, அவரது உறவினர் ஈஸ்வரன் சகோதரர்கள் நிறுவனத்தின் சுப்பிரமணியன் என்று நான் கேட்கும் முன்பே உதவி செய்தவர்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை.

ரணில் விக்ரமசிங்கேயின் ஊடகத் தொடர்பாளராக இருந்த பத்திரிகையாளர் விக்ரமசிங்கே எனக்கு அறிமுகப்படுத்திவைத்த பெரியவர் தேவி வர்த்தகக் குழுமத்தின் மேலாண் இயக்குநர் வெங்கடாசலம் ஐயா. நெல்லையைச் சேர்ந்த அவரது குடும்பம் யாழ்ப்பாணத்துக்குப் புலம் பெயர்ந்து, வர்த்தகத்தில் இப்போது கொழும்பில் கொடிகட்டிப் பறக்கிறது.

கம்பன் விழாக்களிலும், பல்வேறு இலக்கிய நிகழ்வுகளிலும் 'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜை சந்திக்கும் போதெல்லாம், ஒருமுறை அவரை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க வேண்டும் என்கிற எனது ஆசையை வெளிப்படுத்துவது வழக்கம். இந்தமுறை அந்த வாய்ப்பு கைகூடியது.

இலங்கை ஜெயராஜின் வீட்டைப் பார்த்ததும் எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சி. அது வீடாகக் காட்சியளிக்கவில்லை; ஒரு கோயிலாகத்தான் எனக்குத் தெரிந்தது. விருந்தோம்பல் என்றால் அப்படியொரு விருந்தோம்பல். 'குணநலம் சான்றோர் நலனே' என்கிற வள்ளுவப் பேராசானின் வாக்குகள் எனது காதுகளில் ரீங்கரித்தன. அவருடைய இல்லம் குறித்தும், அதில் அவர் வழிபடும் தெய்வங்கள் குறித்தும், அவர் பூஜை செய்யும் விக்ரகங்கள் குறித்தும் தனியாக ஒரு கட்டுரையே எழுத வேண்டும்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது, யாழ்ப்பாணத்தில் இருந்து எப்பாடுபட்டாவது தப்பியோட நினைத்தவர்கள்தான் பெரும்பாலானோர். ''கொழும்பில் சென்று வாழ வேண்டுமென்று, ஒரு காலமும் நினைக்காதவர்கள் நாங்கள். யாழில் குண்டுமழை பொழிந்தபோதெல்லாம் அசையாது அங்கு நின்று பிழைத்தவர்கள். அந்தப் போர்ச் சூழலுக்குள்ளும், கம்பன் விழாக்களைச் சிறப்புடன் நடத்தி வந்தோம். ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் அதில் ஒரு சுகம் இருந்தது'' என்று பதிவு செய்கிறார் கம்பவாரிதி.

குண்டுமழைக்கிடையில் யாழ்ப்பாணத்தில் இருந்தது; பிறகு விடுதலைப்புலிகளின் வேண்டுகோளின் பேரில் அங்கிருந்து வெளியேறியது; கொழும்புக்கு வந்து கம்பன் கழகத்தையும், சமயப் பணிகளையும் தொடங்கியது என்று நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தோம். கம்பன் குறித்து மட்டுமல்ல, வள்ளுவம் குறித்து, இன்றைய தமிழ்ச் சூழல் குறித்து என்று நாங்கள் பேசாத பொருள் இல்லை.

கம்பவாரிதி குறித்து ஊரன் அடிகள் தெரிவித்த கருத்து இது - ''சைவத்துக்கு ஒரு நாவலரைத் தந்த இலங்கை, கம்பனுக்கு ஒரு கம்பவாரிதி ஜெயராஜை தந்து சிறந்தது. தமிழகத்தில் கம்பனடிப்பொடி. இலங்கையில் கம்பவாரிதி.'' இதற்குமேல் என்ன சொல்லிவிட முடியும்?

பிறவிப் பயன் அடைந்த இன்பம் பெற்றேன்!

கொழும்பு செல்வதற்குப் பயணச்சீட்டு எடுத்தபோதே, மறக்காமல் உ.வே.சாமிநாத ஐயர் எழுதிய 'புத்த சரிதம்' என்கிற புத்தகத்தை எனது பெட்டியில் பத்திரப்படுத்திக் கொண்டேன். நிறுத்தற் புள்ளியே இல்லாமல் 14 வரிகள், 20 வரிகள் எழுதும் உ.வே.சாவின் அந்தக்கால எழுத்து பாணியை, சிறு சிறு வாக்கியங்களாகப் பிரித்து மறுபதிப்பு செய்திருக்கிறார் பி.ஆர்.

மகாதேவன்.

''மகாபண்டிதர் உ.வே.சாமிநாத ஐயருடைய மொழிநடையின் அழகு இந்த எளிமைப்படுத்தலில் போய் விடுகிறது. மொழிநடையின் அழகை ரசிக்க விரும்புபவர்கள் தயவுசெய்து அதையே படியுங்கள்'' என்கிற மகாதேவனின் வேண்டுகோள், அவர் மீதான மரியாதையைப் பலமடங்கு அதிகரிக்கிறது.

புத்தருடைய வரலாறு; அவருடைய போதனைகள்; அவர் நிறுவிய சங்கம் ஆகியவற்றை மூன்று பகுதிகளாக உ.வே.சா. இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார். பௌத்த நூல்களின் அடிப்படையிலும், மேலைநாட்டு அறிஞர்கள் பலரின் ஆய்வுகளின் பின்புலத்திலும் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. இதுவரையில் பொதுவெளியிலும், இடதுசாரி மற்றும் தலித் அறிவுஜீவுகளின் மட்டத்திலும் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் பல்வேறு பிம்பங்களை இந்த நூல் தகர்க்கிறது.

அதற்கு எண்ணற்ற பௌத்த நூல்களை 'தமிழ்த் தாத்தா' உ.வே.சா. ஆதாரமாகக் காட்டுகிறார். 'புத்தர் சநாதன தர்மத்தை எதிர்க்கிறாரா? ஆன்மாவின் இருப்பை ஏற்கிறாரா, மறுக்கிறாரா? மறுபிறவியை ஏற்றுக் கொள்கிறாரா? உபநிடதங்கள், வேதங்களுக்கும் பௌத்த தம்மத்துக்கும் இடையில் தொடர்புள்ளதா?' - உள்ளிட்ட கேள்விகளுக்கு வித்தியாசமான பதிலை தருகிறது இந்த நூல்.

''வழிவழியாக வந்துள்ள ஹிந்துமத தரிசனங்களில் இல்லாதது எதுவுமே புதிதாக பௌத்த தத்துவ சாஸ்திரத்திலும், மானஸ சாஸ்திரத்திலும் இல்லை. அவர் தமக்கு முன்பாக சொல்லப்பட்டிருந்ததை செழுமைப்படுத்திச் சொல்லி இருக்கிறார் '' என்கிற ஐரோப்பிய ஆய்வாளர் ரைஸ் டேவிஸ் கூற்றும்,

''என் அறிவுக்கு எட்டியவரை உபநிடதங்களே புத்த மதத்தின் அடிப்படை. அதுவே பௌத்தக் கோட்பாடுகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. பௌத்தர்கள் சொல்லும் 'சம்யக்சம்போதி' என்பது வேதாந்தம் சொல்லும் ஆத்ம தத்துவ ஞானமே'' என்றும், ''ஆசாரங்களின் அடிப்படையில் சொல்வதாக இருந்தால் ஹிந்துத் துறவிக்கான வழிமுறைகளையே பௌத்த பிக்குகளும் பின்பற்றினார்கள்'' என்கிற மாக்ஸ் முல்லரின் கூற்றும்,

உ.வே.சாமிநாத ஐயரால் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பௌத்தம் குறித்த விவாதங்கள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் இந்தப் புத்தகம் புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும்கூட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத் தீவு, வவுனியா அடங்கிய வட மாகாணப் பகுதிகளில் ஒருவித மயான அமைதி நிலவுவதாகக் கூறப்படுகிறது. கெட்ட போரிடும் உலகம் எப்போதுதான் வேரோடு சாயுமோ? அமீர் அப்பாஸ் எழுதிய கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன-

குழந்தைகளின் தலையில்

குண்டுவீசிச் செல்லும்

போர்விமானங்கள் பறக்கும்வரை

உலகம்

நாகரிகம் அடைந்துவிட்டதாக

நம்புகிறவர்கள்

காட்டுமிராண்டிகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT