திருப்பூர் கிருஷ்ணன்
மரபுக் கவிதை பல நூற்றாண்டுப் பாரம்பரியத்தை உடையது. பல்லாண்டு காலமாக இலக்கணக் கட்டுக்குள் நின்று கவிதை புனைந்து அதில் படைப்பின் முழுச் சுதந்திரத்தையும் அனுபவிப்பவர்கள் மரபுக் கவிஞர்கள்.
ஏழே ஏழு சீர்களில் வள்ளுவன் புனைந்த குறள் வெண்பாக்களும் எண்ணற்ற சந்தங்களில் கம்பன் புனைந்த விருத்தப்பாக்களும் தமிழின் பொக்கிஷங்கள். இந்த இருவரையும் விஞ்சிய கவிஞர்கள் தமிழில் யார் உண்டு?
இந்த இருவருமே இலக்கணக் கட்டுக்குள் நின்றுதான் தங்களின் மாபெரும் சாதனைப் படைப்புகளை உருவாக்கினார்கள். கவித்துவத்தின் உயர்நிலை வெளிப்பாட்டுக்கு இலக்கணம் தடையல்ல. அது அத்தகைய வெளிப்பாட்டை கைகொடுத்து ஊக்குவிக்கிறது.
நடனத்துக்கு ஒரு மேடை உதவுவதைப் போல, கவிதைக்கு இலக்கணம் கருத்துகளை அழகாகவும் தெளிவாகவும் சொல்ல ஒரு களமாக அமைகிறது.
நேரசையில் தொடங்கினால் பதினாறு என்றும், நிரையசையில் தொடங்கினால் பதினேழு என்றும் ஒரு வரிக்கு இத்தனை எழுத்துகள் என எழுத்தெண்ணிப் பாடப்பட்ட கட்டளைக் கலித்துறை வகையில்கூட, பிள்ளை பெருமாள் ஐயங்காரின் திருவேங்கடத்து அந்தாதி போன்ற உயர்ந்த இலக்கிய சிறப்புமிக்க கவிதை நூல்கள் படைக்கப்பட்டுள்ளன.
பாரதியார் முப்பெரும் பாடல்களையும் தேச பக்தி பாடல்களையும் மரபுக் கவிதைகளாகத்தான் படைத்தார். தாயுமானவர், பட்டினத்தார், வள்ளலார்,
சித்தர்கள் போன்றோரின் தத்துவச் செறிவு நிறைந்த ஒப்பற்ற சிந்தனை மலர்களெல்லாம் இலக்கண நாரில் அவிழாமல் கட்டப்பட்டு நம் நெஞ்சை அள்ளுகின்றன.
புதுக்கவிதை மிக மிக அண்மைக் காலத்தில் தோன்றியது. அது மரபுக் கவிதைக்கு விரோதியல்ல.
தமிழில் கவிதை சார்ந்த இன்னொரு வகை முயற்சி அது என்பதே சரி.
இன்றைய நவீன சிந்தனைகளை வெளிப்படுத்த புதுக்கவிதை உதவுகிறது என்றொரு படைப்பாளி எண்ணினால், அவர் அந்த வகையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் தடையேதும் இல்லை.
மரபுக் கவிதையின் எதுகை மோனை நயம் நிறைந்த இலக்கண ஓசைக்கட்டு, அதை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளும் வாய்ப்பை வாசகர்களுக்கு அளிக்கிறது.
புதுக்கவிதையில் உள்ள கற்பனைகளையும் கருத்து
களையும் நாம் நினைவுகூரலாமே அன்றி, மரபுக் கவிதையைப்போல் புதுக்கவிதையை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நினைவில் வைத்துக்கொள்வது கடினம். தான் இயற்றப்பட்ட காலம் கடந்தும் பன்னெடுங்காலம் தாண்டி வழிவழியாகப் பயிலப்பட்டு வருவதற்கு மரபுக் கவிதையின் ஓசைநயம் பெரிதும் உதவியுள்ளது.
பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்திருக்கும் மரபுக் கவிதை இன்றல்ல, என்றும் அழியாது. அழியவும் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.