தமிழ்மணி

காதா சப்த சதியும் கலிங்கத்துப் பரணியும்...

காதா சப்த சதி என்ற நூல் பிராகிருத மொழியின் கிளைப் பிரிவுகளில் ஒன்றான மகாராஷ்டிரீ மொழியில் இயற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

முனைவர் கி.சிவா

காதா சப்த சதி என்ற நூல் பிராகிருத மொழியின் கிளைப் பிரிவுகளில் ஒன்றான மகாராஷ்டிரீ மொழியில் இயற்றப்பட்டுள்ளது. சங்க அக இலக்கிய நூல்களுக்கும் இதற்குமான ஒப்புமைகள் குறித்து அறிஞர் ஜார்ஜ் எல்.ஹார்ட் விரிவாக எழுதியுள்ளார்.

கா(ஹா)தா எனில் நான்கு அடிகளாலான பாடத்தகுந்த யாப்பு வகை என்றும், சப்த சதி எனில் 700 பாடல்கள் என்றும் பொருள். இந்நூல் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சாதவாகன மன்னன் ஹாலனால் தொகுக்கப்பட்டது என்கிறார் இரா.மதிவாணன். ஆனால், கி.பி. 200-க்கும் 450-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

மொழிபெயர்ப்பியல் அறிஞர் த.நா. குமாரஸ்வாமி இந்நூலின் சில பாடல்களை சாலிவாஹனம் என்ற பெயரில் முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்தார். பன்மொழிப்புலவர் இரா.மதிவாணன் பிராகிருத மூலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நானூறு அகப்பாடல்களை மொழிபெயர்த்து, ஆந்திர நாட்டு அகநானூறு (1978) என்று வெளியிட்டார்.

இந்த நூலிலுள்ள ஐந்நூறு செய்யுள்களை அகவற்பா வடிவில் பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாத ராஜா தமிழில் மொழிபெயர்த்து காதா சப்த சதி (1981) என்ற நூலாக்கினார். பேராசிரியர் சுந்தர் காளி, அவருடைய மனைவி பரிமளம் ஆகியோர் இணைந்து 251 கவிதைகளை மொழி

பெயர்த்து 'காஹா சத்தசஈ' தேர்ந்தெடுக்கப்பட்ட பிராகிருதக் கவிதைகள் அறிமுகமும் மொழிபெயர்ப்பும் (2018) என்ற தலைப்பில் நூலாக்கியுள்ளனர்.

சப்த சதியிலிருந்து ஒரு பாடல்...

சுடுவெயிற்கு ஆற்றா தலைந்து மலையின்

கான்யாறு என்றே கருதிப் பாந்தளை

எருமை நக்கிட, அதன்வாய் ஊறலைக்

கருங்கல் ஊற்றெனக் கருதிப் பருகும்

(6-51)

ஹாலன் எழுதிய இப்பாடல் (நூல்- மு.கு.ஜகந்நாதராஜா - தமிழும் பிராகிருதமும்) பாலைநிலப் பெருவெளியில் வெயிலின் கொடுமை தாங்கவில்லை. தாகத்தால் அலைந்த எருமை மலைப்பாம்பொன்று (பாந்தள் - பெரும்பாம்பு) படுத்துக் கிடந்ததைப் பார்த்தது. காட்டாறுதான் வெயிலால் இவ்வாறு வறண்டு கிடக்கிறது என்று நினைத்து அதை நக்கியது. பாம்பும் தாகத்தால் தவித்துக்கொண்டிருந்தது. ஆகவே, எருமையின் வாய் எச்சிலைக் கருங்கல்லில் வடியும் ஊற்றெனக் கருதிப் பருகியது. அந்தளவுக்கு பாலைநிலத்தில் நீர் வறட்சி காணப்பட்டது என்பதை எடுத்துரைத்துள்ளது.

முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கலிங்க (இன்றைய ஒடிஸா) நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றி கண்டதை விளக்கி பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி. இதன் ஆசிரியர் பரணிக்கோர் செயங்கொண்டார் எனப் புகழப்பட்டார்.

இந்நூலில் 'காடு (பாலை நிலத்தைப்) பாடியது' என்ற பகுதி பாலை நிலத்தின் கொடுமையையும் செயங்கொண்டாரின் புலமைத் திறத்தையும் ஒருங்கே காட்டுகிறது. அதிலொரு பாடல்...

தீயின் வாயில்நீர் பெறினும் உண்பதோர்

சிந்தைகூர வாய்வெந் துலர்ந்துசெந்

நாயின் வாயின்நீர் தன்னை நீர்எனா

நவ்வி நாவினால் நக்கி விக்குமே (83)

மானொன்று (நவ்வி) கடுமையான தாகத்தால் தவித்துக் கொண்டிருக்கிறது. தீயின் வாயில் நீர் சுரக்குமென்றால் அதைப் பருகியாவது உயிர் வாழலாம் என்று அது நினைக்கிறது. தீயின் வாயில் நீர் பிறக்குமா? இயலாதே. அதன் கண்ணில் செந்நாயொன்று வெயிலில் வாடிப்போய் நாக்கைத் தொங்கவிட்டு இளைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. செந்நாய் தன்னைக் கொன்றுவிடுமெனத் தெரிந்தும், அதனருகில் சென்று நாக்கில் வடிகின்ற எச்சிலை நீரென்று நினைத்து நக்குகிறது.

நீர் போதாமையால் விக்குகிறது. செந்நாயோ தனது கொலைத் தொழிலைச் செய்யாது அமைதி காக்கிறது. செந்நாய்க்கு வேட்டையாட உடம்பிலே வலுவில்லை. ஓடுவதற்கு மானுக்கும் வலுவில்லை. வெயிலின் கடுமையால் அவை இரண்டும் தத்தம் இயல்புகளை மறந்து களைத்திருந்தன என்கிறார் செயங்கொண்டார். இக்காட்சியும் மேலே காட்டிய ஆந்திர நாட்டு அகநானூற்றுக் காட்சியும் ஒத்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாமிரவருணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தல்

டிச.15-இல் முக்கிய முடிவு: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

கரூர் சம்பவம்: 10 மணிநேரம் நடந்த சிபிஐ விசாரணை!

மகளிர் உலகக் கோப்பை கபடி: இந்தியா மீண்டும் சாம்பியன்

இரவில் சென்னை, 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT