தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 25-01-2026

இந்த வாரம் (28.01.26) குமுதம் வார இதழ் படித்தீர்களா? இல்லையென்றால் தேடிப்பிடித்து வாங்கிப் படியுங்கள்.

கலாரசிகன்

இந்த வாரம் (28.01.26) குமுதம் வார இதழ் படித்தீர்களா? இல்லையென்றால் தேடிப்பிடித்து வாங்கிப் படியுங்கள். அதில் புன்னகை ஜெயக்குமார் என்பவர் எழுதிய 'உத்தமர் வீதி' என்கிற

சிறுகதையைக் கட்டாயம் படியுங்கள். சமீபத்தில் நான் படித்து, மனதை உலுக்கிய மிகச் சிறந்த சிறுகதை அதுவாகத்தான் இருக்கும்.

அப்படி என்ன இருக்கிறது அந்தச் சிறுகதையில் என்றுதானே கேட்கிறீர்கள்? இருக்கிறது. சமூகத்தின் போக்கை எதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டும் வித்தகம் இருக்கிறது. ஒரு சிறுகதைக்கு என்னவெல்லாம் அடிப்படை இலக்கணமோ அவையெல்லாம் இருக்கின்றன.

இன்றைய சிறுகதை எழுத்தாளர்களில் பெரும்பாலானோர், சிறுகதை என்கிற பெயரில் குறுநாவல்கள்தான் எழுதுகிறார்கள். கதையமைப்பைவிட விலாவாரியான வர்ணனைகள்தான் அதிகம். அதுமட்டுமல்ல, சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னால் இருந்த கதை சொல்லும் பாணியில் இன்றும்

எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நடப்பு சமுதாயத்தை, அதன் இயல்பை, இன்றைய மாந்தர்களின் மனநிலையை, வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பதாக வெளிவரும் சிறுகதைகளை விரல்விட்டு எண்ணி விடலாம்.

அப்படி இல்லையென்றால், மேலைநாட்டு, குறிப்பாக ஆங்கில எழுத்தாளர்களின் பாணியைப் பின்பற்றி முன், பின்நவீனத்துவ பாணியில் அறிவுஜீவித்தனமாக சிறுகதைகள் எழுதப்படுகின்றன. இவற்றையெல்லாம் படித்து சலித்துப் போயிருந்த எனக்கு, மின்னல் கீற்றாகக் கண்ணில் பட்டது 'உத்தமர் வீதி'. கதை மாந்தர்களுடன் நம்மை ஒன்ற வைப்பதுடன், அவர்களது வாழ்க்கையை நினைத்து விழிகளில் ஈரம் கசிய வைத்துவிடுகிறார் புன்னகை ஜெயக்குமார்.

நல்லதொரு சிறுகதையினைத் தமிழுக்குத் தந்ததற்கு அவருக்கு நன்றி. அதை நிராகரித்துவிடாமல், தேர்ந்தெடுத்துப் பிரசுரித்ததற்கு 'குமுதம்' வார இதழ் ஆசிரியர் குழுவுக்கும் நன்றி!

சிறுகதைகள் குறித்து சொல்லும்போது இன்னொன்றையும் நான் சொல்ல ஆசைப்படுகிறேன். முன்பெல்லாம் சிறுகதைகளை வெளியிடப் பல பருவ இதழ்களும், அதை ஆர்வத்துடன் படிக்கப் பல வாசகர்களும் இருந்தார்கள். இப்போது இணையதளத்தில் அவரவர்களே தங்களது படைப்புகளைப் பதிவேற்றம் செய்து கொள்கிறார்கள். எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை. நிச்சயமாகப் படிப்பவர்களைவிட எழுதுபவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அப்படியானால் நல்ல சிறுகதைகளைப் படிக்கவும், வெளியிடவும் யாருமில்லையா என்று கேட்பீர்கள். ஏன் இல்லை? வெகுஜன பருவ இதழ்கள் அருகிவிட்ட நிலையிலும், அந்த இடத்தை நிரப்பப் பல சிற்றிதழ்கள் வருகின்றன. இலக்கிய ஆர்வம் மட்டுமே ஒரே குறிக்கோள் என்று இயங்கும் அந்த சிற்றிதழ்கள்தான், வித்தியாசமாக எழுதத் துடிக்கும் எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் இருக்கும் வடிகால். விற்பனை எண்ணிக்கை அதிகம் இல்லாவிட்டாலும், ஆர்வத்துடன் படிக்கும் வாசகர் வட்டம் அந்த சிற்றிதழ்களுக்கு இருக்கிறது.

எஸ்.மைக்கேல் ஜீவநேசனின் சிறுகதைத் தொகுப்பு 'இரும்பு மனிதர்கள்'. இதில் உள்ள அனைத்து சிறுகதைகளும் பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்தவை. எதை எதையெல்லாமோ தொகுத்து வெளியிடுபவர்கள் சிற்றிதழ்களில் வெளிவரும் சிறுகதைகளில், சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்தால் என்ன? புதிய பல எழுத்தாளர்களை அடையாளம் காண அது வழிகோலும் என்பது எனது யோசனை.

கவிஞர் ஜெயபாஸ்கரனின் 'கானுயிர் கருவூலம்' என்கிற கட்டுரைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. அதில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள் 'தினமணி' நடுப்பக்கத்தில் வெளிவந்தவை. அச்சு வாகனம் ஏறுவதற்கு முன்னால், என்னால் படித்து, ரசித்து, குறைத்து நீட்டி நாளிதழில் பார்ப்பதற்கும், தொகுப்பாகப் புத்தக வடிவில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முன்னது தனி மரம் என்றால், பின்னது தோப்பு.

முன்பு டெண்டுல்கர், பிறகு தோனி, இப்போது கோலி என்று கிரிக்கெட் மைதானத்தில் மட்டையுடன் களமிறங்கிப் பந்துகளை சிக்ஸர், பௌண்டரி என்று நாலாபுறமும் அடித்து விளாசுவது போல, கவிஞர் ஜெயபாஸ்கரனும் பல்வேறு நடப்புகள் குறித்தும், நிகழ்காலச் சூழல் குறித்தும், சமுதாயத்தின் போக்கு குறித்தும், வருங்காலத்தின் மீதான அக்கறையுடன் தனது அறச்சீற்றத்தை எழுத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

''கட்டுரைகளை எழுத மிகவும் அதிகமாக மெனக்கெட்டாக வேண்டியிருக்கிறது. உண்மையான தரவுகளைத் தேடிப்பிடித்து சான்றுகாட்டி எழுதுகையில் சமூகத்தின் முன் நின்று உரத்தும்

உண்மையாகவும் வாதாடுகின்ற ஒரு வழக்குரைஞரின் மனநிலையை நான் அடைகிறேன்' என்கிற அவரது 'என்னுரை' வாக்குமூலத்தை ஒவ்வொரு கட்டுரையும் உறுதிப்படுத்துகின்றன.

சூழலியல், சமூகம், மொழி, இனம், ஊடகம் என்று அவர் இப்போதைய சமுதாயம் விடை தெரியாமல் எதிர்கொள்ளும் பல பிரச்னைகளைத் தனது கட்டுரைகளில் அலசுகிறார். சூழலியல் குறித்தும், தமிழ் மொழியின் எதிர்காலம் குறித்தும் அவருக்கு இருக்கும் நியாயமான கவலைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. நுகர்வுக் கலாசாரத்தில் பகட்டுப் படாடோபங்களில் மயங்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையினருக்கு, நாளைய பொழுதைப் பற்றியே கூடக் கவலை இல்லை எனும்போது வருங்காலம் குறித்த கவலை எப்படி இருக்கும்? சமூக அக்கறை கொள்பவர்களின் இந்த மனக்குமுறலை, ஜெயபாஸ்கரனின் பேனா வெளிப்படுத்துகிறது.

இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் பல முக்கியமான தரவுகளை உள்ளடக்கியவை.

அரசுப் பணித் தேர்வுக்கு தங்களைத் தயார் செய்து கொள்பவர்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் வைத்திருக்க வேண்டிய கையேடு என்று கூறவேண்டும்.

புதுவைத் திருக்குறள் மன்றம் (புதிமம்) அமைப்பின் 14}ஆம் ஆண்டுத் தொடக்க விழாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தபோது, என்னைச் சந்திக்க வந்திருந்தார் நண்பர் கிருங்கை சேதுபதி. வழக்கம்போல, அவர் வெளிக்கொணர்ந்திருக்கும் புதிய படைப்பொன்றை என்னிடம் வழங்கினார். இந்த முறைதந்தது, 'பெயரில் நிறைகிறது முகம்' என்கிற கவிதைத் தொகுப்பு. அதில் இடம் பெற்றிருக்கும் கவிதை இது}

பூட்டுக்குத் தெரியும்

தன் சாவி எதுவென்று

சாவிகளுக்குத்தான்

பூட்டுகள் தெரிவதில்லை

பூட்டுக்குப் பின்தான்

சாவியின் பிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு19 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபாரம்!

இந்தியத் தயாரிப்பு பொருள்களுக்கு உயா் தரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: மோடி வலியுறுத்தல்

ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கௌருக்கு பத்ம ஸ்ரீ விருது!

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு - புகைப்படங்கள்

நடிகர் மம்மூட்டி பத்ம பூஷண், மாதவனுக்கு பத்ம ஸ்ரீ!

SCROLL FOR NEXT