முற்காலச் சோழ வேந்தன் பெருங்கிள்ளி, திருச்சிராப்பள்ளி- உறையூரை தலைநகராகக் கொண்டு, கி.பி. 2ஆம் நூற்றாண்டில் ஆண்ட கால கட்டம்.... கோவலன் மனைவி கண்ணகி, தன் கணவன் கோவலன் வீண்பழியால் படுகொலை செய்யப் பெற்றதால் வெகுண்டெழுந்தாள். கோபக் கனலால் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆட்சி புரிந்த மதுரை மாநகரையே எரித்தாள்! இதனை இளங்கோ அடிகள் படைத்த சிலப்பதிகாரம் விவரிக்கின்றது.
சோழன் அமைத்த பத்தினிக் கோட்டம்
கோபக் கனலுடன் காட்சி அளித்த பத்தினி தெய்வமாம் கண்ணகி தேவிக்கு முதன் முதலாக ஒரு கோயிலை, தன் தலைநகர் உறையூரிலேயே அமைத்தான் பெருங்கிள்ளிச் சோழன். கண்ணகி கோபக் கனலுடன், உக்கிரத்துடன் காணப்பட்டதால் கூரையோ, கோபுரமோ, விமானமோ இன்றி வெட்ட வெளியிலேயே கோயில் அமைத்தான் அரசன். ஆம்! உறையூரில் வெட்ட வெளியிலேயே பெருங்கிள்ளிச் சோழன் அமைத்த பத்தினிக் கோட்டமே, பின்னாளில் வெட்ட வெளி வெக்காளி அம்மன் கோவிலாக விரிவாக்கம் பெற்றது என்றொரு கருத்து நிலவுகின்றது.
சோழன் பெருங்கிள்ளி அமைத்த பத்தினிக் கோட்டம், முதன் முதலாக அமைக்கப் பெற்ற வரலாற்றை, நெஞ்சையள்ளும் செஞ்சொல் சிலப்பதிகாரம் சிறப்பாகவே எடுத்துக் காட்டுகின்றது.
"அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி
கோழியகத்து எத்திறத்தானும்
வரம் தரும் இவளோர் பத்தினிக்
கடவுள் ஆகுமென, நங்கைக்குப்
பத்தினிக் கோட்டமும் அமைத்து நித்தம் விழா அணி நிகழ்வித்தோனே!' என்கிறார் இளங்கோவடிகள்.
இதன் பொருள், "பாண்டியன் வெற்றிவேல் செழியன், கொங்கிளங் கோசர், இலங்கை வேந்தன் கயவாகு ஆகியோர் பத்தினித் தெய்வமாம் கண்ணகி தேவியை வழிபட்டு நலம் பெற்றனர் என்பதைக் கேள்விப்பட்டான் சோழன் பெருங்கிள்ளி. அப்போது உறையூரைத் தலை நகரமாகக் கொண்டு ஆண்டவன் அவ்வரசன்.
பாடலில் இடம் பெறும் "கோழியகத்து' என்பது உறையூரையே குறிப்பிடும். உறையூருக்குக் கோழியூர், உறந்தை என வேறு பெயர்களும் உண்டு.
இதனடிப்படையில் "வெக்காளி' அம்மனை கண்ணகியாகவும் சிலர் கருதுகின்றனர். எது எவ்வாறாயினும் தமிழகத்தில் "மாரியம்மன் வழிபாடு' தொன்று தொட்டு நிகழ்ந்து வருகிறது என்பதில் ஐயம் ஏதும் இல்லை. உத்தம பத்தினிகளும், ஊரைக் காக்க உயிர் கொடுத்த வீர நங்கையரும்கூட அம்மனாகியிருப்பதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆயின் புராண அடிப்படையில், பரசுராமரின் தாய் ரேணுகா தேவியே முதலில் தோன்றிய மாரியம்மன் ஆவார்.
தமிழ்நாட்டில், சமயத்தில் வரம் தந்து சங்கடம் தீர்த்திடும் சமயபுரம் மாரியம்மன் ஆலயம், அங்காள மாரியம்மன் ஆலயங்களான அன்பில் மாரியம்மன், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை மாரியம்மன், சென்னை தேவி உடுமாரியம்மன், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், சேலம் செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன், திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன், விருதுநகர் மாரியம்மன், திருமெய்யம் இளஞ்சாரா மாரியம்மன், கொன்னையூர் மாரியம்மன், கோவை கோணியம்மன், மாசாணி அம்மன், பண்ணாரி அம்மன், பொள்ளாச்சி மாரியம்மன், திருவண்ணாமலை மாவட்டத்து படை வீட்டு அம்மன், மேல் மலையனூர் அம்மன், வேலூர் அங்காள பரமேஸ்வரி அம்மன், பிள்ளையார்பட்டி கொங்கு நாச்சியார் அம்மன், இருக்கண்குடி மாரியம்மன், தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன், மதுரைத் தெப்பக்குள மாரியம்மன், திருச்சி தெப்பக்குள மாரியம்மன், குழுமாயி அம்மன், திருப்பூர் மாரியம்மன், சிறுவாச்சுர் மதுரகாளியம்மன் என மாரியம்மன் ஆலயங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.
இவை தவிர கிராமங்கள் தோறும் மாரியம்மன் ஆலயங்கள் உண்டு. "கிராம தேவதை' வழிபாடே பின்னாளில் மாரியம்மன் ஆலயங்களாக மலர்ந்தன என்பார் "கவியரசு' கண்ணதாசன்.
தொன்மை மிகு நாரத்தாமலை அம்மன்
தமிழக வரலாற்றைத் துல்லியமாகவும், தெளிவாகவும் அறிந்திடப் பெரிதும் அகச்சான்றாக விளங்கும் தன்மை, புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகளுக்குப் பெரிதும் உண்டு என நீலகண்ட சாஸ்திரிகள், சதாசிவப் பண்டாரத்தார் உள்ளிட்ட பெரியோர்கள் சிலர் கூறியுள்ளனர்.
புதுகை மாவட்டத்திலேயே தொன்மையான மாரியம்மன் ஆலயம், நார்த்தாமலைஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயமே என்கின்றனர். இந்த அம்மன் ஆலயத்தை, திருவண்ணாமலை ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த மலையம்மாள் என்ற பெண்மணி விரிவாக்கம் செய்து, விழாக்களும் நடத்தியதாகத் தகவல் உண்டு.
வெள்ளையர்களும் அம்மன் வழிபாடு செய்துள்ளனர் என்பதற்கு, "பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்' உள்படப் பல சான்றுகள் உள்ளன. ராபர்ட் கிளைவ், தான் போரில் வெற்றி பெற்றிட சமயபுரம் மாரியம்மனை வழிபட்டதாகக் கூறுவர்.
இது தவிர சைவ-வைணவ இணைப்புப் பாலமாகவும் மாரியம்மன் திகழ்கிறார். திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாதரின் சகோதரியே சமயபுரம் மாரியம்மன் எனத் தலப் புராணம் கூறும். எனவே தீபாவளி நாளிலும், பொங்கல் நாளிலும் தன் சகோதரி மாரியம்மனுக்குச் சீர்வரிசை (பட்டுப் புடவை முதலானவை) வழங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. கொடிய அம்மை நோய் நீக்கும் தெய்வமாக மாரியம்மன் கருதப்படுகிறார்.
விநோத விழாக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், திருமெய்யம் மாரியம்மனுக்கு நிகழும் திருவிழாவில், குடத்து விளம்பில் கூரிய கத்தி நிற்கும் அதிசய நிகழ்வு நடைபெறுகிறது. சயனக் கோலத்தில் காட்சி தரும் கோவை மாவட்டம் மாகாளி அம்மனுக்கு மிளகாய் அரைத்துப் பூசி, தன் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவர்.
மாவிளக்கு வழிபாடு, தலை கை, கால் கண் வடிவங்களை உண்டியிலும் போடுதல் முதலான நம்பிக்கைகள், பல மாரியம்மன் தலங்களில் நிகழ்கின்றன. வடக்கே, "சீதளா தேவி' என்ற பெயரில் மாரியம்மனை வழிபடுகின்றனர். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலுமே வெவ்வேறு பெயர், வடிவங்களில் மாரியம்மன் வழிபாடு நடைபெறுகிறது. ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் மாரியம்மன், ஏராளமான குடும்பங்களின் குல தெய்வமாக விளங்குகிறார். மாரியை வழிபடின் மாதம் மும்மாரி பொழியும். வாழ்வில் நலமும் வளமும் விளையும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.