வெள்ளிமணி

கோயில் குடி கொண்ட கோட்டை காளி

நாகை மாவட்டத்தில் உள்ளது சங்கமங்கலம். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இறையன்பர் ஒருவர், வியாபார நிமித்தமாக சங்கமங்கலத்திலிருந்து சில கிராமங்கள் வழியாக நாகப்பட்டினம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்

எஸ். காளிதாஸ்

நாகை மாவட்டத்தில் உள்ளது சங்கமங்கலம். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இறையன்பர் ஒருவர், வியாபார நிமித்தமாக சங்கமங்கலத்திலிருந்து சில கிராமங்கள் வழியாக நாகப்பட்டினம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படியொருநாள் செல்லும்போது களைப்பு மேலிட, "சடைச்சி' என்னும் கிராமத்தில் இளைப்பாறுவதற்காக அமர்ந்தார். களைப்பால் உறக்கம் தழுவ, துயிலத் தொடங்கினார். அப்போது அவருடைய கனவில் தோன்றிய காளியம்மன், ""உனக்கு அருகே உள்ள திரிசூலத்தில் நான் எழுந்தருளியுள்ளேன். அந்தத் திரிசூலத்தை நீ வாழும் சங்கமங்கலம் கிராமத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுக'' என்று அருளினாளாம்.

கனவு கலைந்து எழுந்த அந்த இறையன்பர், அம்மனின் உத்தரவை எண்ணி மனம் உருகினார். அருகில் அந்தத் திரிசூலத்தைக் கண்டு சிலிர்த்தவர், சங்கமங்கலத்தில் அதை முறைப்படி பிரதிஷ்டை செய்துள்ளார். கூடவே அவ்வூரில் இருந்த புராதன காளியம்மனையும் அங்கு குடியமர்த்தி, அழகானதொரு கோயிலும் எழுப்பியுள்ளார். "சடைச்சி' என்னும் ஊரில் திரிசூலத்தைக் கண்டதால் சங்கமங்கலத்தில் எழுந்தருளியுள்ள காளியம்மன் ""ஸ்ரீ சடைச்சி முத்து காளியம்மன்'' என்றே அழைக்கப்படுகிறாள்.

மாங்கல்யம் காத்த அன்னை!

ஈஸ்வரனிடம் வரம் பெற்ற "வல்லான்' என்ற அரக்கன், அந்த வரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சோழ தேசத்தில் பல தீய செயல்களைச் செய்து வந்தான். அச்சமயத்தில் அரசாட்சி புரிந்த சோழ மன்னர், அரக்கனின் கொட்டத்தை அடக்குவது குறித்து தனது மந்திரியிடம் ஆலோசனை கேட்டார். அதற்கு மந்திரி, ""நமது தேசத்தில் "வீர நாராயணர்கள்' என்ற குழுவினர் உள்ளனர். அவர்கள் போர்த் தொழில் வித்தகர்கள்; அரக்கனை வீழ்த்த வல்லவர்கள்'' என்று கூறினார். அதன்படி வீரநாராயணர்களை அழைத்த அரசர், வல்லானை அழிக்குமாறு உத்தரவிட்டார். அந்த வீரர்களும், ""ஐந்தே நாட்களுக்குள் வல்லானை வீழ்த்துவோம்'' என்று மன்னர் முன்பு சபதம் ஏற்றனர். அரசரும் அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

இதையடுத்து வல்லானின் கோட்டைக்குச் சென்றனர் வீரர்கள். அப்போது கோட்டைக்கு முன்னால் காளியின் உருவத்தைக் கண்டவர்கள், அவளை வணங்கிவிட்டுக் கோட்டைக்குள் நுழைந்தனர். அப்போது அரக்கன் வல்லான், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவன் விழிக்கும் வரை காத்திருந்தனர் வீர நாராயணர்கள். அசுரன் உறக்கத்திலிருந்து விழித்த பிறகு அவனோடு கடுமையான யுத்தம் நடத்தி அவனது தலையைக் கொய்தனர்; அவனுடைய கோட்டையையும் தகர்த்தனர்; கோட்டை காளிக்கு நன்றி தெரிவித்தனர்!

தனது கணவன் மாண்டு போனதை அறிந்த வல்லானின் மனைவி அழுது புரண்டாள். கற்புக்கரசியான அவளது துன்பப் புயல் கண்டு நிலைகுலைந்த வீர நாராயணர்கள், கோட்டையின் முன்பிருந்த காளியன்னையை மீண்டும் மிகுந்த பக்திப் பெருக்கோடு வணங்கி, ""நல்லோனாய் வல்லானை மாற்றி, இப்பெண்ணுக்கு மாங்கல்ய பிச்சை அருள வேண்டும்'' என்று வேண்டினர். அவர்களது அன்புக்கும் பக்திக்கும் வசமான அன்னை, வல்லானின் அசுரத் தன்மையை நீக்கி, நல்லவனாய்த் திகழும்படி ஆசிர்வதித்து, அவனை உயிர்ப்பித்தருளினாள். வல்லானும், அவனது மனைவியும் வீரநாராயணர்களையும், காளி தேவியையும் வணங்கி புது வாழ்வு தொடங்கினர். மன்னரும் இது கேட்டு மனம் மகிழ்ந்தார்.

வல்லானின் கோட்டை முன்பிருந்த காளியம்மனையே சூலத்தை பிரதிஷ்டை செய்த அன்பர், தான் கட்டிய ஆலயத்தில் குடியமர்த்தியதாகக் கூறுகின்றனர்.

சித்திரை திருவிழா:

சடைச்சி முத்து காளியம்மன் கோயிலில், ஒரு குறிப்பிட்ட மரபைச் சார்ந்த ஆண்கள் விரதம் இருந்து, கோயில் திருவிழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். சித்திரை மாதம், கடைசி வெள்ளிக்கிழமை அன்று விக்னேஸ்வரர் வழிபாடு, பூச்சொரிதலுடன் இவ்விழா தொடங்குகிறது. மேலும் ஈசனை தியானித்து வெள்ளை ஆடையில் காட்சி தரும் அன்னையின் தவத்தை உணர்த்தும் விதமாக திருவிழா சமயத்தில் வருகின்ற வியாழன் இரவன்று வெள்ளை ஆடை அணிந்து ஆலயத்திற்குள் அம்மன் பிரவேசிப்பது பக்தர்களைப் பரவசப்படுத்தும். அப்போது விநியோகிக்கப்படும் மஞ்சள் கலந்த திருப்பாலை பருகுவதையும், வெள்ளாடை அணிந்த உற்சவ காளியை தரிசிப்பதையும் பக்தர்கள் தங்களின் பிறவிப் பயனாகக் கருதுகின்றனர்.

இப்படிப்பட்ட திருவிழா, கஞ்சி தானம் வழங்கிய பின்னர் தொடரும் "விடாயாற்றி' விழாவுடன் இனிதே நிறைவு பெறுகிறது. இத்திருவிழா நிகழும் காலங்களில் தமிழகத்திலுள்ள புகழ் பெற்ற நாகஸ்வரக் கலைஞர்கள் பலர், எவ்வித சன்மானமும் பெறாமல் ஒன்று கூடி அம்பாளை இசையால் குளிர்விப்பது கண்கொள்ளாக் காட்சி.

அந்த வகையில் வருகிற சித்திரை 23ஆம் தேதி, அதாவது மே மாதம் 6ஆம் நாள் "சடைச்சிமுத்து காளியம்மன் கோயில் திருவிழா' மிகச் சிறப்பாகத் தொடங்க இருக்கிறது. மே 10ஆம் தேதி காளியம்மன் வீதியுலா புறப்பாடும், 12ஆம் தேதி காளியம்மன் வெள்ளையாடை அணிந்து ஆலயம் செல்லும் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக அரங்கேற இருக்கின்றன. அன்பர்கள் தரிசித்து அன்னையின் அருள் பெறலாம்.

இந்த அன்னையை வணங்குவதால் "மாங்கல்ய பாக்கியம்' நிலைக்குமென்பதால் இன்றும் ஏராளமான மகளிர், முத்து காளியன்னையை முனைப்போடு வணங்கி மகிழ்கின்றனர். வல்லானின் மனைவிக்கு வர தானம் தந்த அன்னை, நல்லோர்கள் அனைவர்க்கும் நலமருள்கிறாள்!

ஆலய அமைவிடம்:

நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயிலுக்கு வடக்கே 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சங்கமங்கலம் சடைச்சிமுத்து காளியம்மன் திருக்கோயில். அனைவரும் அன்னையை தரிசிக்க வருமாறு வேண்டுகிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனம்! முதல்வா் தொடங்கி வைத்தாா்!

போலி மருந்துகளின் புழக்கத்தை தடுக்க சிறப்புக் குழு! தில்லி அரசு நடவடிக்கை!

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - தனியரசு

மூளை சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

குற்றாலத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

SCROLL FOR NEXT