முகப்பு
வெள்ளிமணி

தலைநகரில் அருளும் கணபதி!

 த்லைநகரான தில்லியில் ஆங்காங்கே தென்னிந்திய மக்கள் கோயில் எழுப்பி ஆன்மிக மணம் பரப்பி வருகின்றனர். அதில், மயூர்விஹார் ஃபேஸ் 2-ல் இருக்கும் ஸ்ரீ காருண்ய மகா கணபதி ஆலயமும் ஒன்று.  ஐந்து நிலை கோபுரத்துடன்

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:01 PM
பகிர்:

 த்லைநகரான தில்லியில் ஆங்காங்கே தென்னிந்திய மக்கள் கோயில் எழுப்பி ஆன்மிக மணம் பரப்பி வருகின்றனர். அதில், மயூர்விஹார் ஃபேஸ் 2-ல் இருக்கும் ஸ்ரீ காருண்ய மகா கணபதி ஆலயமும் ஒன்று.

 ஐந்து நிலை கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி தரும் இக்கோயில், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் பேசும் மக்கள் மட்டுமின்றி வட இந்தியரும் வணங்கிச் செல்லும் அற்புதத் தலம்.

 25 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் சிலர் இணைந்து மயூர்விஹார் ஏரிக் கரையோரம் ஒரு விநாயகர் சிலையை அமைத்தனர். அதன்பிறகு, கோயில் அமைக்க "ஸ்ரீ கணபதி சேவா சமாஜம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினர். தொடக்கமாக ஸ்ரீ காருண்ய மகா கணபதி சிலை மட்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பரிவார கோஷ்ட தெய்வங்களான லட்சுமி நாராயணர், வைத்தியநாதர், பாலாம்பிகா, கார்த்திகேயன், அனுமன், ஐயப்பன், நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதையடுத்து ராஜகோபுரம் அமைக்கப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் 2004ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.

 தஞ்சை மாவட்டத்தில் சிறப்புக்குரிய தலமாக விளங்கும் அருள்மிகு வைத்தீஸ்வரன் கோயில் அமைப்பில் இக்கோயிலிலும் வைத்தியநாதர் சுவாமி சந்நிதியும், பாலாம்பிகா சந்நிதியும் அமைக்கப்பட்டுள்ளன. வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் இருந்தே மண், நீர் எடுத்து வரப்பட்டு இந்த சந்நிதிகள் அமைக்கப்பட்டதாம். இங்கு பாண லிங்க வடிவில் வைத்தீஸ்வரன் அருள்பாலிக்கிறார். இந்த லிங்கத்தின் பாகத்தில் சில மெல்லிய ரேகைகள் உள்ளது சிறப்பு.

 இக்கோயில் கோபுரம் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் மூலவரான ஸ்ரீ காருண்ய கணபதி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

 விசேஷம்: வழக்கமான விசேஷங்கள் தவிர, ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை நவகிரக ஹோமம் நடத்தப்படுகிறது.

 திருப்பணி: இத்தகைய சிறப்புக்குரிய இக்கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. வரும் ஜூன் 29ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிய விரும்புவோர்

 09818929777, 011-22783682 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

 அமைவிடம்: புது தில்லி அக்ஷர்தாம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இக்கோயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.