வாரம் ஒருபாடல்
தமிழ்ச் சொல்லும் வட சொல்லுமாகிய ஒலிகள் எல்லாம் அவன் தாளில் ஒடுங்கி மாலையாகின்றன' என்று
ஒலிகள் தோன்றலும் ஒடுங்கலும் அவன் தாளில்...
தமிழ்ச் சொல்லும் வட சொல்லுமாகிய ஒலிகள் எல்லாம் அவன் தாளில் ஒடுங்கி மாலையாகின்றன' என்று சிவபெருமானின் சிறப்பைப் பாடுகிறார் திருஞானசம்பந்தர். முதல் திருமுறையில் வரும் அச்சிறுபாக்கம் தலம் குறித்த பாடலில், சிவபெருமானின் தன்மைகளை அவன் அடியவர் எவ்வாறு போற்றித் துதிக்கிறார்கள் என்பதைக்
காட்டுகிறார்.
""மைம்மலர்க் கோதை மார்பினர் எனவும்,
மலைமகள் அவளொடு மருவினர் எனவும்,
செம்மலர்ப் பிறையும் சிறை அணி புனலும்
சென்னிமேல் உடையர், எம் சென்னிமேல் உறைவார்
தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ,
தமிழ்ச்சொலும் வடசொலும் தாள் நிழல் சேர,
அம் மலர்க் கொன்றை அணிந்த எம் அடிகள்
அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே''-
அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவன், குவளை மலர்களால் ஆன மாலையைச் சூடிய மார்பினர் எனவும், மலைமகளாகிய பார்வதி தேவியை இடப் பாகமாகக் கொண்டுள்ளவர் எனவும், சிவந்த மலர் போன்ற பிறையையும், தேங்கியுள்ள கங்கை நீரையும் தம் சடைமுடி மீது உடையவர் எனவும் போற்றித் துதித்து வழிபடுகிறார்கள் அடியவர்கள். எம் சென்னி மேல் உறைபவர் அவர், மலர் போன்ற அவரின் திருவடிகளை மனத்தால் துதித்து, மனம் ஒன்றி நின்று அடியவர்கள் அவரைப் பரவுகிறார்கள்.
அவ்வாறு அடியவர் துதித்துப் போற்றும் தமிழ்ச்சொல், வடசொற்களால் ஆன தோத்திரங்கள் அனைத்தும் அவரின் திருவடியில் சேர்கின்றன. அத்தகைய சிறப்பு மிக்க பெருமான், அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவராய் விளங்குகிறார் என்கிறார் இறைவனின் தன்மையைப் பாடப் புகுந்த திருஞான சம்பந்தப் பெருமான். இறைவனின் பெருமைகளை, தமிழ்ச் சொல்லும் வடசொல்லும் கலந்து தம் திருவடியைச் சார இருக்கும் அடிகளாவார் சிவபெருமான் என்பது உணரத் தக்கது. ஒலி வடிவான சொற்கள் யாவும் இறைவனிடமிருந்தே தோன்றின, அவை அடையும் இடமும் அவன் அடியே ஆயிற்று என்பது சம்பந்தரால் கூறப்படுகிறது.