பலன்தரும் பரிகாரத் தலம்: அதிகாரமுள்ள பதவி கிடைக்கும்!
படைப்புத் தொழிலை மேற்கொண்டிருந்த பிரம்மதேவர் ஒரு முறை, சிவபெருமானை காண்பதற்காக கைலாயத்துக்குச் சென்றார். அங்கே, சிறுவனாக முருகப் பெருமான் விளையாடிக் கொண்டிருந்தார். என்னதான் பிரம்மாவாகவே இருந்தாலும்,
படைப்புத் தொழிலை மேற்கொண்டிருந்த பிரம்மதேவர் ஒரு முறை, சிவபெருமானை காண்பதற்காக கைலாயத்துக்குச் சென்றார். அங்கே, சிறுவனாக முருகப் பெருமான் விளையாடிக் கொண்டிருந்தார். என்னதான் பிரம்மாவாகவே இருந்தாலும், சிறுவனைக் கடந்து சென்றபோது, கவனியாமல் அலட்சியப்படுத்திச் செல்லலாமோ! பிரம்மாவுக்கு தான் ஒரு படைப்பாளி என்ற கர்வம். எனவே அலட்சியமாய்க் கடந்து சென்றார். அவரைத் தடுத்த முருகன், "நீங்கள் யார்?' எனக் கேட்டார். அவரோ, "நான்தான் படைப்புத் தொழிலை மேற்கொண்டிருக்கும் பிரம்மதேவன்' என்றார்.
அவரது தோரணையும், அகந்தையுடன் பதிலளித்த முறையும் முருகனை யோசிக்க வைத்தது. பிரம்மனின் அகந்தையை அழிக்க எண்ணிய முருகன், "ஓஹோ... நீர் எதை வைத்து படைப்புத் தொழிலை மேற்கொள்வீர்... எது உமக்கு அடிப்படை?' என்று கேட்டார். அதற்கு பிரம்மதேவர், "ஓம் எனும் ஓங்காரம்தான் அடிப்படை' என்றார்.
"அப்படியெனில் அதன் பொருளை விளக்கிச் சொல்லுமே' என்று முருகப்பெருமான் வினவ, அதன் பொருளை விளக்கிச் சொல்லத் தெரியாமல் பிரம்மதேவர் விழித்தார். எனவே முருகப் பெருமான் அவரைச் சிறைவைத்தார்.
கேள்வி கேட்பவன் உயர்ந்தவன் என்பதால், முருகப் பெருமான் இங்கே மேலானவராக, உயர்ந்தவராக இருக்கிறார். மேலான பொறுப்புள்ளவன் தானே பிறரிடம் கேள்வி கேட்க முடியும்? எனவே, பிரம்மாவின் முன் அதிகார தோரணையில் தனது இரு கைகளையும் இடுப்பில் வைத்தபடி, கேள்வி கேட்கிறார் முருகப் பெருமான்...
முருகப் பெருமானின் அபூர்வமான இந்த அற்புதக் கோலத்தை தரிசிக்க நாம் ஆண்டார் குப்பம் செல்ல வேண்டும்.
சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்டுச் சாலையில் இருந்து பொன்னேரி செல்லும் வழியில் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆண்டார்குப்பம் எனும் அழகிய தலம். வயல் வெளிகள் சூழ்ந்த அழகிய கிராமம். இங்கேதான் முருகப் பெருமான் அழகுக் கோலம் காட்டும் இந்தக் கோயில் உள்ளது.
அது என்ன ஆண்டார்குப்பம்? ஆண்டியாகக் கோலம் காட்டி பழனியிலே நின்றதாலா? இல்லை... பிரம்மதேவனையே தடுத்தாட் கொண்டதால், அடக்கி ஆண்டதால் இந்தப் பெயரா?
இங்கே கோயில் கொண்ட முருகப் பெருமானை பிற்காலத்தில் ஆண்டிகள் சிலர் வழிபட்டு வந்தனராம். ஒரு முறை தலயாத்திரை மேற்கொண்டிருந்த பக்தர் ஒருவர், இந்தத் தலத்தில் தங்கினார். மாலை நேரம்... புனிதத் தீர்த்தத்தில் நீராடி பிறகு முருகனை வழிபட எண்ணிய அவர், அங்கேயிருந்த ஆண்டிகளிடம், "நீராடும் துறை ஏதேனும் இங்கு உண்டோ?' என்று வினவினாராம். அதற்கு அவர்கள், "இங்கே அப்படி தீர்த்தம் ஏதுமில்லை' என்றனராம். அப்போது, ஆண்டிக் கோலத்தில் சிறுவன் ஒருவன் அங்கே எழுந்தருளி, அந்த பக்தரிடம் தானே அந்த தெப்பத்தைக் காட்டுவதாகக் கூறி அழைத்துச் சென்றான். ஓரிடத்தில் தான் கையில் வைத்திருந்த வேலால் நிலத்தைக் குத்திட, அங்கே தீர்த்தம் பொங்கிப் பிரவாகமெடுத்தது. பக்தருக்கோ ஆச்சரியம். அதில் நீராடி, நிமிர்ந்து பார்த்தால், கையில் வேல் கொண்ட வேலனாக, முருகப்பெருமான் காட்சி அளித்தார். அதனால் மகிழ்ந்த பக்தர், தான் கண்ட அழகுக் கோலத்தை தினமும் காண ஆசைப்பட்டார். முருகப் பெருமான் இங்கே பாலசுப்ரமணியராக எழுந்தருளினார்.
ஆண்டிக்கோல சிறுவனாக வந்து முருகன் அருள்புரிந்த தலம் என்பதால் ஆண்டியர்குப்பம் எனப்பட்டது. பின்னாளில், ஆண்டார்குப்பம் என மருவியது. இங்கே பெருமான் பிரம்மனை ஆண்ட கோலத்தில் இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர்.
ஆண்டார் குப்பம் தலத்தின் சிறப்பு, அதிகாரக் கோலத்தில் காட்சி தரும் முருகப் பெருமான்தான். அழகான ராஜ கோபுரத்தோடு திகழும் சிறிய ஆலயம். ஆலயத்தை நாம் வலம் வரும்போது, வரசித்தி விநாயகரை தரிசிக்கிறோம். முன் மண்டபத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நடராஜர் சந்நிதிகள் உள்ளன.
கருவறையில் காட்சி தரும் பாலசுப்பிரமணியர் தனது கைகளில் வேல், வஜ்ரம், சக்திஆயுதம் முதலிய முருகனின் கோலத்துக்கே உரிய எந்தவிதமான ஆயுதங்களையும் தாங்கியிராமல், இரு கைகளையும் இடுப்பிலே வைத்தபடி காட்சி தருகிறார். பெருமானுக்கு அருகில் வெள்ளியில் செய்யப்பட்ட வேலாயுதம் மற்றும் சேவற்கொடியை வைத்திருக்கிறார்கள். பெருமான் கவசம் சார்த்தப்பட்டு அழகுறக் காட்சி தருகிறார். நெடிய வேலனாக மூலவர் நின்ற கோலத்தில் காட்சி தர, அவர் காலடிக்குக் கீழ் இரு புறமும் இரண்டு யானைகள் வாகனம் போல் அமைந்துள்ளன. பெருமானை அதிகார முருகன் என்கிறார்கள். அருணகிரிநாதர் இந்தப் பெருமானைப் பாடியுள்ளார்.
அதிகாரப் பதவி கிடைக்க...
இங்கே முருகப் பெருமான், பிரம்மனின் முன் தன் இரு கைகளையும் இடுப்பில் வைத்தபடி, அதிகார தோரணையில் இருக்கிறார். இவரை வணங்குபவர்களுக்கு அதிகாரமுள்ள பதவி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தங்கள் பணி சிறக்க, பொறுப்பான பதவி கிடைக்க, புத்திசாலிகளான குழந்தைகள் பிறக்க என்று தங்கள் வேண்டுதல்களை முன்வைத்து இங்கே முருகப் பெருமானுக்கு அபிஷேகம், சந்தனக் காப்பு முதலியவை செய்வதாக வேண்டிக் கொள்கிறார்கள்.
இந்த முருகப் பெருமானின் சிறப்பு, இவர் காலையில் குழந்தை போன்றும், உச்சி வேளையில் இளைஞராகவும், மாலையில் முதியவர் போலவும் தோற்றமளிக்கிறார். இது இந்தத் தலத்தின் சிறப்பானதும் வித்தியாசமானதுமான தரிசனம்தான்.
இந்தத் தலத்தில் முருகப் பெருமானுக்கு மயிலுடன், சிம்ம வாகனமும் உள்ளது. அம்பிகைக்குரிய வாகனம் சிம்மம். தன் அன்னைக்கு உரிய வாகனத்துடன், இங்கே முருகன் அருளுகிறார். இந்த சிம்ம வாகனமும், மயிலைத் தாங்கியபடி உள்ளது சிறப்பம்சம்.
விழாக்கள்:
சித்திரை பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில் தெய்வானை திருமணம், 9ம் நாளில் வள்ளி திருமணம் ஆகியவை நடக்கின்றன. கார்த்திகை மாத குமார சஷ்டியின்போது லட்சார்ச்சனை நடக்கிறது. வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, கந்த சஷ்டி, தைப் பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றது.
கோயில் திறக்கும் நேரம்: காலை 6- 12.30 மாலை 4- 8.30 மணி வரை.
இருப்பிடம்: சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்டுச் சாலையில் இருந்து பொன்னேரி செல்லும் வழியில் 3 கிலோ மீட்டர் தொலைவில்.