கல்வி அறிவில் சிறக்கலாம்!
அசுரன் சோமுகன். அவனுக்கு ஓர் எண்ணம். தேவாசுரப் போர்களில் ஒவ்வொரு முறையும் தேவர்கள் வெல்வதும், பின்னர் அசுரர்கள் தங்கள் பலத்தை ஏதாவது வரம் வாங்கி வந்து அதிகரித்து போர் புரிவதுமாக இருப்பதற்குக் காரணம் வ
அசுரன் சோமுகன். அவனுக்கு ஓர் எண்ணம். தேவாசுரப் போர்களில் ஒவ்வொரு முறையும் தேவர்கள் வெல்வதும், பின்னர் அசுரர்கள் தங்கள் பலத்தை ஏதாவது வரம் வாங்கி வந்து அதிகரித்து போர் புரிவதுமாக இருப்பதற்குக் காரணம் வேதங்களே என்று எண்ணினான். வேதங்களின் துணை கொண்டே தேவர்கள் பலத்தைப் பெறுகிறார்கள், மனிதர்கள் அறிவைப் பெற்று மேலோங்குகிறார்கள் என்று எண்ணினான் சோமுகன். அதனால் எப்படியாவது வேதங்களை பறித்துக்கொண்டு போய் சிறை வைக்க எண்ணம் கொண்டான்.
ஒருமுறை பிரமன் அசந்திருந்த சந்தர்ப்பத்தில் வேதங்களை ஏமாற்றி அவற்றைக் கொண்டுபோய் தன் பாதாள உலகில் சிறைவைத்தான். வேதங்கள் இல்லாமையால் தேவருலகும் மனிதவுலகும் ஒளி இழந்தன. அறிவு மயக்கம் பரவியது. எல்லாரும் ஸ்ரீவிஷ்ணுவை சரணடைந்து வேதங்களை எப்படியாவது மீட்டுத் தாருங்கள் என்று வேண்டி நின்றார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்ற பரமன், பாதாள உலகு சென்று கடலுக்கு அடியில் ஒளிந்திருந்த சோமுகனை வதம் செய்து, வேதங்களை மீட்டு வந்தார்.
அவ்வாறு பூவுலகு வந்த பெருமான், வேதங்களை பிரமனிடம் ஒப்படைத்து பிரமனுக்கு உபதேசமும் செய்தார். அவ்வாறு இழந்த வேதங்கள் மீண்ட தலம் பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள இந்தத் தலமாம்.
ச்ருதகீர்த்தி என்ற அரசன். தர்ம நெறிப்படி செங்கோல் நடத்திய அவனுக்கு செல்வங்கள் எல்லாம் இருந்தும், புத்திரச் செல்வம் இல்லாததால் வருத்தம் மிகக் கொண்டான். அவனுடைய நிலை அறிந்து வருந்திய நாரதர், ஆதி திருவரங்கத்தில் கோயில்கொண்ட பெருமானை வழிபடும்படி அறிவுறுத்தினார். நாரதரின் அறிவுரையை ஏற்ற அரசன் இங்கே அரசியாருடன் வந்து பெருமானை வணங்கி அருள் பெற்றான். அவர்க்கு நான்கு குமாரர்கள் உதித்தனர் என்பது தலபுராணம்.
நட்சத்திர மனைவியர் புடை சூழ வலம் வந்த சந்திரன், ஒரு முறை தனது மனைவியரின் சாபத்துக்கு ஆளானான். அவனது கலைகள் குறைந்து பொலிவு இழந்தான். முகம் ஒளியிழந்து வந்தது. இதற்காக மிகவும் வருத்தம் கொண்ட சந்திரன், தன் சாபத்துக்கு விமோசனம் தேடினான். தேவர்கள் அவனைத் தேற்றி, வேதங்கள் மீண்டு பொலிவு பெற்ற இந்தத் தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்தால் இழந்த ஒளி மீண்டும் கிடைக்கும் என்றனர். அதனை மனதில் கொண்டு சந்திரன் இங்கே தவம் செய்தான். அவனது தவத்துக்கு மெச்சிய பெருமான், சந்திரனுக்கு அருள் புரிந்தார்.
தலத்துக்கு அருகில் தென்கிழக்கே இருந்த தீர்த்தத்தில் தினந்தோறும் நீராடி, நித்தியக் கடன் முடித்து தவம் செய்தான் சந்திரன். அந்த தீர்த்தமே சந்திர புஷ்கரிணி ஆனது. சந்திரன் சாப விமோசனம் பெற்றதும், அவனுக்கு உபாயம் கூறிய தேவர்கள் அங்கே தோன்றி, தாங்களும் பெருமானின் அருள் பெற, ஸ்ரீவிஷ்ணு அங்கே எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். அவர்களின் பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய பெருமான், தேவ தச்சன் விஸ்வகர்மாவை பணித்தார். தன் சயனக் கோலத்தை அங்கே எழுந்தருளச் செய்ய உத்தரவிட்டார். அதன்படி, விஸ்வகர்மாவும் பெருமானின் பாற்கடல் சயன வாசத்தை மனத்தில் இருத்தி அங்கே பெரிய திருமேனியுடன் பெருமானை எழுந்தருளச் செய்தார். பெருமானுக்கு சிறிய அளவில் அழகிய ஆலயமும் அமைத்தாராம். பெருமானும் அங்கே மனமுவந்து கோயில் கொண்டு தேவர்களுக்கு அருள் புரிந்தார். வேதங்களின் தெய்வீக ஒளியால் மனித குலமும் பயன்பெற வேண்டுகோள் விடுத்த தேவர்களின் ஆசையை நிறைவேற்றுவதாக வரம் தந்தார் பெருமான்.
இந்தத் தலம் "ஆதி அரங்கம்' என்ற பெயருடன் திகழ்கிறது. அருமையான கோயில். பெண்ணை ஆற்றின் பாசனப் பரப்பில் சுற்றிலும் பச்சைப் பசேல் வயல்வெளி. திருக்கோவிலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் பயணித்து, பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் செல்லும் கிராமச் சாலையில் சென்றால் இந்தக் கோயிலை அடையலாம்.
பழைமையான கோயில். அந்தக் கால நெற்குதிர்கள் ஆலயத்தின் பழைமையை எடுத்துரைக்கின்றன. ஆலயத்துக்கு வெளியே தல தீர்த்தம். சிறிய கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் பழங்காலத் தூண்களைத் தாங்கிய மண்டபம். இங்கே ஆஞ்சநேயர் தனியாக சந்நிதி கொண்டுள்ளார். பலிபீடம், த்வஜஸ்தம்பம் தாண்டி உள்ளே செல்கிறோம். தல விருட்சத்தில் அங்கங்கே துணி முடிச்சுகள். பக்தர்கள் இங்கே பிரார்த்தனை செய்துகொண்டு மரத்தில் வஸ்திரங்களைச் சாற்றியிருக்கிறார்கள்.
வித்தியாசமாக பெருமானின் சந்நிதி இடப்புறம் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள். சங்கு சக்கரம் தாங்கிய இவளை வணங்க, தீராத துன்பம் எல்லாம் பறந்தோடும். பயம் தொலையும். இங்குள்ள சக்கரத்தாழ்வார், வெண்ணெய்க் கண்ணன் விக்ரஹங்கள் கொள்ளை அழகுடன் திகழ்கின்றன.
தலத்தில் மூலவர் பெயர் அரங்கநாதப் பெருமாள். தாயார் ரங்கநாயகி. இங்கே தலவிருட்சமாக புன்னாக மரமும் பெண்ணையாறு தல தீர்த்தமாகவும் திகழ்கிறது. புரட்டாசி சனிக் கிழமைகள், வைகுண்ட ஏகாதசி, பெüர்ணமி ஆகியவை இங்கே விசேஷ விழா தினங்கள்.
பள்ளி கொண்ட பெருமாள் திருமேனிகளில் இவரும் மிகப் பெரும் உருவம் தாங்கியவர். ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானை விட இவர் பெரியவர் என்பதால் இவர் பெரிய பெருமாள் என்றார் கோயில் அர்ச்சகர்.
பழைமை வாய்ந்த இந்தத் தலம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதல்ல. ஆயினும் வைணவ ஆசார்யர்கள் போற்றி வணங்கிய ஆலயம் இது.
பிரார்த்தனை: கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்க இங்கே வேண்டிக் கொள்கிறார்கள். வேதம் மீட்ட நாயகன் வேண்டும் அருள் தருவான் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இங்கே பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்வித்து துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள்.
இருப்பிடம்: விழுப்புரம் அருகே திருவண்ணாமலை செல்லும் பாதையில் திருக்கோவிலூரில் இருந்து 16 கி.மீ. தொலைவு. திருக்கோவிலூரிலிருந்து அடிக்கடி பஸ்வசதி உண்டு.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6-12 வரை, மாலை 4-7.30 வரை.
தகவலுக்கு: 04153-293677