முகப்பு
வெள்ளிமணி

ஞானம் அளிக்கும் நாரணன்

ஸ்ரீவைகுண்டத்தில் பெருமான் சுகமாக நித்திரையில் ஆழ்ந்திருந்தார். அவரது காலடியில் அமர்ந்து தேவியர் இருவரும் பணிவிடையில் ஈடுபட்டனர். அந்நேரம், அகிலத்தை மிரட்டிய அரக்கர்கள் மது கைடபர் இருவரும், பெருமானுடன

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:53 PM
பகிர்:

ஸ்ரீவைகுண்டத்தில் பெருமான் சுகமாக நித்திரையில் ஆழ்ந்திருந்தார். அவரது காலடியில் அமர்ந்து தேவியர் இருவரும் பணிவிடையில் ஈடுபட்டனர். அந்நேரம், அகிலத்தை மிரட்டிய அரக்கர்கள் மது கைடபர் இருவரும், பெருமானுடன், தேவியர் இருவரையும் அபகரித்துச் செல்ல அங்கே வந்தனர். அச்சத்தில் தேவியர் இருவரும் ஒளிந்துகொள்ள இடம் தேடினர். ஸ்ரீதேவி பரமன் மார்பிலும், பூதேவி அவரது அடிக்கீழும் ஒளிந்து கொண்டனர்.

இது கண்ட ஆதிசேஷனுக்கு கோபம் அதிகரித்தது. பெருமானை எழுப்ப மனமின்றி, தகிக்கும் தன் விஷக் கனலை அரக்கர் மீது உமிழ்ந்தான் ஆதிசேஷன். அந்த விஷம் தீ ஜ்வாலைகளாக அரக்கரை நோக்கி வேகமாகச் சென்றன. அந்த வெப்பத்தால் அங்கிருந்த அனைத்தும் சூடேறிக் கொதித்தன. அரக்கர் பயந்தோடினர்.

இதனால், ஆதிசேஷனுக்கு அச்சம் ஏற்பட்டது. எங்கே இந்த வெப்பத்தால் பெருமானும் பாதிக்கப்பட்டு எழுவாரோ, தன் அனுமதி இன்றி இவ்வாறு செய்த தன்னை தண்டிப்பாரோ என்று அஞ்சி, தன் தலையைத் தாழ்த்தி பின்வாங்கினான். ஆனால், கண்விழித்த பரமன், ஆதிசேஷனின் செயலைப் பாராட்டி, நல்லது செய்தாய் என்று தேற்றினார்.

பெருமானின் இத்தகைய காட்சியைக் காண நாம் செல்ல வேண்டியது திருமயம் திருத்தலத்துக்கு; புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது இந்தக் கோயில். இங்கே உண்மையை உணர்த்திய திருமெய்யராக சயனக் கோலத்தில் பெருமான் காட்சிதருகிறார்.

இவரின் பெயராலேயே இந்த ஊருக்கு திருமெய்யம் என பெயர் வழங்கலானது. பாம்பணையில் பள்ளி கொண்டு காட்சி தரும் இவரின் திருவுரு மிகப் பெரியது. பாரதத்தில் உள்ள பள்ளி கொண்ட பெருமாள் திருவுருக்களில் மிகப் பெரிது என்பதும் குடைவரைக் கோயிலாக அமைந்திருப்பதும் சிறப்பானது.

பெருமாளின் திருக் கண்கள் அரைகுறையாக மூடிய நிலையில், இதழ்களில் குறுநகை புரிந்தவண்ணம், ஆதிசேஷனின் கோபச் செயலை ரசித்த படி சயனித்திருக்கிறார் பெருமாள். பெருமாளின் வலதுகரம் ஆதிசேஷனை அணைத்திருக்க, சுற்றிலும் தேவர்கள், ரிஷிகள் கைதொழுது நிற்கின்றனர். பெருமாளின் நாபியில் தோன்றிய தாமரை மலரில் பிரம்மா நடுநாயகமாகத் திகழ்கிறார்.

இந்தத் தலத்தின் இன்னொரு சந்நிதியில், சத்திய மூர்த்திப் பெருமாள் அருள் புரிகிறார். நின்ற திருக்கோலத்தில் சோமசந்திர விமானத்தின் கீழ் ஒரு கரத்தில் பிரயோகச் சக்கரமும் இன்னொரு கரத்தில் சங்கும் தாங்கி சேவை சாதிக்கிறார். பெருமாளின் பெயரால் இந்தத் தலம் சத்ய úக்ஷத்ரம் என்று வழங்கப் படுகிறது.

முன்னொரு காலத்தில் பெருமானை நோக்கிக் கடும் தவம் செய்த சத்ய மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம். பின்னாளில் குடைவரைக் கோயில்களை அமைப்பதில் கைதேர்ந்த மன்னர்கள், இந்தக் கோயிலை வடிவமைத்தார்கள். பல்லவர் காலக் கட்டடக்கலையை எடுத்தியம்பும் குடைவரைக் கோயில் இது.

மூலவர் சத்தியமூர்த்திப் பெருமான். உற்ஸவர் அழகிய மெய்யர். தாயார் உஜ்ஜீவனத் தாயாராக விளங்குகிறார். ஆலயத்தின் பின்னே அழகிய மலையை ஒட்டி, சத்திய புஷ்கரிணி தீர்த்தம் விளங்குகிறது. ஆலமரமே தலவிருட்சம்.

மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும் கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும் கையானை கைதொழாக் கையல்ல கண்டோமே } என்று திருமங்கையாழ்வார் இப்பெருமானைப் பாடினார். அவ்வகையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்றாகத் திகழ்கிறது.

பல்லவர் காலக் கோயிலான இது சைவ-வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் திகழ்கிறது. பெருமாள் மற்றும் சிவன் கோயில்கள் இரண்டும் மலைச் சரிவில் ஒரே கல்லில் அமைந்து குடைவரைக் கோயில்களாக விளங்குகின்றன. பெருமாள் கோவிலை தனியே வலம் வர முடியாது.

மனநலம் காக்கும் பெருமான்:

மனநலம் சரியில்லாதவர்கள், பேய் பிசாசு என துர் கஷ்டங்களால் அவதிப் படுபவர்கள், நரம்புத் தளர்ச்சி உள்ளிட்ட நோய்களால் துன்பப் படுபவர்கள் இந்தக் கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் தாயாரை வழிபட்டால் அனைத்து விதமான பிரச்னைகளில் இருந்தும் விடுபடலாம் என்பது அனுபவ உண்மை. மேலும், இங்கே வீற்றிருக்கும் பெருமானை அர்ச்சித்து வணங்கினால் திருமண பாக்கியம், குழந்தை வரம் உறுதி என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

இங்கே பெருமாள் தாயாருக்கு வஸ்திரம், புடவை சார்த்துவதாக வேண்டிக் கொண்டு அதை நிறைவேற்றுகிறார்கள். மேலும், தாயாருக்கு திருமஞ்சனம் செய்வித்து, வளையல், பொம்மை ஆகியவற்றை அளித்து வழிபடுகிறார்கள்.

இந்தத் தலத்தை ஆதிசேஷன் பாதுகாக்கிறானாம். ஆதிசேஷன் தனக்கு வேதங்களில் கூறப்பட்டுள்ள அனைத்து விதமான ஞானமும் வர வேண்டும் என பிரார்த்தித்தான். அவனுக்கு பெருமாள் தோன்றி ஞானம் அளித்தார். எனவே இந்தத் தலம் அஞ்ஞான இருள் அகற்றி ஞான ஒளி தோன்றச் செய்யும் தலமாகத் திகழ்கிறது. மோட்ச பாக்கியம் கிட்டும் தலமும் கூட!

திருமெய்யம் என்பதே இதன் பூர்வீகப் பெயர். இங்குள்ள கோட்டை, ராமநாதபுரம் அரசர் விஜயரகுநாத சேதுபதியால் கி.பி. 1687 இல் கட்டப்பட்டது. இங்குள்ள சிவாலயத்தில் இசை தொடர்பான பல அபூர்வ செய்திகளைக் கூறும் கல்வெட்டுகள் உள்ளன. சிவாலயத்தில் உள்ள லிங்கோத்பவர் மிக உயரமானவர்.

விழாக்கள்: வைகாசி பெüர்ணமியில் தேர்த்திருவிழா. ஆடிப் பூர திருவிழா- 10 நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படும். ஸ்ரீஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட முக்கிய விழாக்கள் இங்கே வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது கோயில். திருச்சியில் இருந்து 72 கி.மீ., மதுரை - புதுக்கோட்டை சாலையில் உள்ளதால், பேருந்து வசதி அதிகம் உண்டு. பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ளது கோவில்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6- 11, மாலை 5 - 8 மணி வரை.

முழு கட்டுரையைப் படிக்க →