வெள்ளிமணி

தை அமாவாசையில் பித்ரு தர்ப்பணம்

பொதுவாக அமாவாசை என்றால் இருட்டு, கருமை என்றே எண்ணுகின்றனர். ஆனால் இந்து மரபுப்படி அமாவாசை தினங்களில்தான் மறைந்த நம் முன்னோர் தங்களின் சந்ததியினரின் வழிபாடுகளை ஏற்க பூவுலகுக்கு வருகிறார்கள் என்பது நம்ப

சி.பி. பரந்தாமன்

பொதுவாக அமாவாசை என்றால் இருட்டு, கருமை என்றே எண்ணுகின்றனர். ஆனால் இந்து மரபுப்படி அமாவாசை தினங்களில்தான் மறைந்த நம் முன்னோர் தங்களின் சந்ததியினரின் வழிபாடுகளை ஏற்க பூவுலகுக்கு வருகிறார்கள் என்பது நம்பிக்கை.

எல்லா தமிழ் மாத அமாவாசை தினங்களுமே சிறப்பானவைதான். ஆனால் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அந்த வகையில் இந்த வருடம் வரும் (ஜன.22, 2012) ஞாயிறு தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள், ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில் மட்டும் தர்ப்பணம் செய்தாலே அந்த ஆண்டு முழுவதும் அவர்கள் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது முன்னோர் வாக்கு.

தை அமாவாசைகளில் வழிபாடு

திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தில் லட்ச தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் ஸ்ரீ நெல்லையப்பர் - காந்திமதியம்மன் ஆலயமே பிரகாச ஜோதியாகக் காணப்படும். பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் கூடி மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோயிலின் பிராகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றி வழிபடுவார்கள்.

ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற ஸ்ரீராமநாத சுவாமி, அம்பாளுடன் தை அமாவாசை தினத்தன்று, அக்னி தீர்த்தத்துக்கு திருவீதியுலா வருவார். புனித நீராடல் நடைபெறும். கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். ராமேஸ்வரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதை பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர் பக்தர்கள்.

இதுபோல், நெல்லை மாவட்டம் குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட அருவிகளில் புனித நீராடி, அமாவாசை தர்ப்பணம் கொடுப்பது மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

பூர்வ ஜென்ம கர்மாவினால் பாதிக்கப்படுவோர், இந்நாளில் ராமேஸ்வரம் கடல் தீர்த்தத்திலோ, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள தீர்த்தத்திலோ நீராடினால் பாவம் நீங்கி சுபிட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை. இதனாலேயே கன்னியாகுமரி கடற்கரையிலும் தை அமாவாசை நாளில் பித்ரு தர்ப்பணம் செய்கின்றனர்.

அமாவாசை என்றால் சிவன் கோயில்கள் உள்பட அனைத்து கோயில்களிலுமே சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். தை அமாவாசை நாளில் முருகப்பெருமான் உறையும் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT