முகைதீன் அப்துல்காதர் ஜெய்லானி, ஹிஜ்ரி 535ஆம் ஆண்டில் (கி.பி. 1148) மதரசா தலைமைப் பொறுப்பை தனது மகன் ஹஜ்ரத் அப்துல் வஹாப்பிடம் ஒப்படைத்துவிட்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தீன் விளக்கு ஏற்றினார். இக்காலத்தில் முகைதீன் ஆண்டவர், மாலத்தீவு, இலங்கை, தென்னிந்தியா பகுதிகளுக்கு வந்தார். அவ்வகையில் தமிழ்நாட்டில் தென்பகுதியில், திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் ராமநதி கரையோரத்தில் உள்ள பொட்டல்புதூருக்கு வருகை தந்தார்.
அங்கு ஆற்றில் ஒது எடுத்துவிட்டு முகைதீன் ஆண்டவர் சிறிய பாறையில் தொழுதார். அவர் தொழுத இடத்தில் அவரது இரண்டு பாதங்களும் அப்படியே பதிந்துவிட்டன. இந்த இடத்தில் இருந்து அருள் பாலிக்க வேண்டும் என்பது இறைவனின் நாட்டம் போலும் என்பதை உணர்ந்த முகைதீன் ஆண்டவர்கள், இவ்வூருக்கு அருகில் வாழ்ந்த சின்ன உமர் லெப்பை, பெரிய உமர் லெப்பை ஆகியோரின் கனவில் தோன்றி தனது பாதங்கள் இருக்கும் இடத்தை தெரிவித்தார்கள்.
முகைதீன் ஆண்டவர்களின் பாதச்சுவடுகளை கண்டறிந்த லெப்பைகள், மழை, வெயிலில் இருந்து பாதச்சுவடுகளை மறைப்பதாகக் கூரை வேய்ந்து பேணினார்கள். இவ்வழியாக வந்த பெரியோர்கள், அரசர்கள், பிரபுக்கள், ஆண்டவர்களின் அருளை அறிந்து கொள்ளும் வகையில் அற்புதங்கள் நிகழ்ந்தன.
முகைதீன் ஆண்டவருக்கு நன்றி செலுத்தும் விதமாக அங்கு கட்டடம் எழுப்பப்பட்டதாக இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். இன்று 8 ஏக்கர் பரப்பளவில் இரண்டு மினாக்களுடன் பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
ஆண்டுதோறும் ரபியுல் ஆஹிர் பிறையில் முகைதீன் ஆண்டவர்களின் நினைவாக கந்தூரி விழா விமரிசையாய நடைபெற்று வருகிறது. கந்தூரி விழா துவக்கமாக நிறைபிறைக் கொடி ஊர்வலம் பொட்டல்புதூர் கீழ ஜமாத் சார்பில் நடைபெறும். இதைத் தொடர்ந்து பள்ளிவாசலில் தினமும் மௌலூது ஓதப்படுகிறது.
பிறை 9 ஆம் நாளில் பச்சைக்களை ஊர்வலம் நடைபெறும். 10ஆம் நாள் பள்ளிவாசல் இனாம்தார் எஸ்.பி. ஷா இல்லத்தில் ராத்திபு வைபவமும், அரண்மனைக் கொடியேற்றமும், மேல ஜமாத் சார்பில் பிறைக்கொடி ஊர்வலமும் நடைபெறும். அன்றைய தினம் இரவில் ரவணசமுத்திரத்தில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை அரண்மனையை வந்தடையும். இதையடுத்து அன்றைய தினம் பள்ளிவாசல் மூலஸ்தானத்தில் சந்தனம் மெழுகுதல் நிகழ்ச்சியும், முன்னிரவில் தீப அலங்காரமும் நடைபெறும்.
பிறைக் கொடி ஊர்வலம், தீப அலங்காரம் நடைபெறும் நாட்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளாவில் இருந்தும் முஸ்லீம்கள் பெருமளவில் பங்கேற்கின்றனர். கந்தூரி விழாவில் இந்துக்களும் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர். இப்பள்ளிவாசல் கந்தூரி விழாவில், மார்ச் 3ல் கொடியேற்றமும், மார்ச் 4ல் தீப
அலங்காரமும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.