முகப்பு
வெள்ளிமணி

வீண்பயம் நீங்கும்! வில்வாக்கம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோயில்

கயிலாயத்தில் சிவபெருமானின் திருமணக் கோலம் காண உலகமே கூடிவிட்டது. அந்நேரம் அகத்தியரை தென் திசைக்கு அனுப்பி வைத்த பரமன், அவருக்கு தன் திருமணக் கோலத்தை தென்னகத்தே காட்டிக் கொடுப்பதாகக் கூறினார். அதன்படி

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:28 PM
பகிர்:

கயிலாயத்தில் சிவபெருமானின் திருமணக் கோலம் காண உலகமே கூடிவிட்டது. அந்நேரம் அகத்தியரை தென் திசைக்கு அனுப்பி வைத்த பரமன், அவருக்கு தன் திருமணக் கோலத்தை தென்னகத்தே காட்டிக் கொடுப்பதாகக் கூறினார். அதன்படி தென்னகம் நோக்கிப் புறப்பட்டார் அகத்தியர்.

ஓர் இடத்தில் முனிவர்கள் பலர் அகத்தியரை வணங்கி, வாதாபி, வில்வலன் என்னும் அரக்கர்கள், முனிவர் கூட்டத்தை வெகுவாகக் குறைத்துக் கொண்டு வருவதை எடுத்துரைத்தனர். அவர்களை காப்பதாக வாக்குறுதி வழங்கிய அகத்தியர், அரக்கர் இருவரும் இருக்கும் இடத்தை அடைந்தார்.

வழக்கம்போல் அகத்தியரையும் தங்கள் சூதுக்கு இரையாக்க எண்ணிய வில்வலன், அகத்தியரை உணவு உண்ண அழைத்தான். அகத்தியரிடம், வாதாபியை ஒரு மாங்கனி வடிவில் மாற்றி, அதை அகத்தியருக்கு உண்ணக் கொடுத்தான். அகத்தியரும் மாங்கனியை உண்டார்.

அவர்கள் திட்டப்படி, வாதாபி, முனிவரின் வயிற்றில் சென்றதும், வில்வலன் வாதாபியை அழைத்தான். ஆனால், அகத்தியரோ "வாதாபி ஜீரணமாகிவிட்டான்' என்றார். கோபம் கொண்ட வில்வலன் அகத்தியரை வெட்ட கையை ஓங்கினான். ஆனால், அதற்குள் அகத்தியரின் சக்தியால் அவன் தலை வெட்டுண்டது.

இவ்வாறு தாம் உயிர்க்கொலை செய்ததால், தம்மை பீடித்த பாவம் போக அகத்தியர் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதை நினைவுறுத்தும் வண்ணம் இந்தப் பகுதிக்கு வில்வாரண்யம் என்றும், வில்வலன்பாகம் என்றும் பின்னர் வில்லிவாக்கம் என்றும் பெயர் ஏற்பட்டதாம்.

இந்த வரலாற்றை நினைவூட்டும்படி, இந்தக் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவத்தில் அகத்தியர், அரக்கர்களை அழிக்கும் வைபவம் நடத்தப்படுகிறது. அகத்தியர் வழிபட்ட சிவபெருமான், இங்கே அகஸ்தீஸ்வரராக எழுந்தருளியுள்ளார்.

இவ்வாறு சிவபூஜை மேற்கொண்ட அகத்தியர், தாம் தியானத்தில் இருந்தபடி பூஜிக்க, தமது பூஜைக்கு இடையூறு வராமல் இருக்க வழி செய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டினார். அதன்படி சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பினார். அகத்தியருக்கு காவலுக்கு வந்த வீரபத்திரர் இந்தத் தலத்தில் எதிரே தனி சந்நிதியில் கோயில் கொண்டார்.

அகஸ்தீஸ்வரர் கோயிலின் தென்புற வாசல் எதிரே தனிக் கோயிலில் வீரபத்திரர் இருக்கிறார். முன் மண்டபத்தில் பத்திரகாளி சந்நிதி உள்ளது. பெüர்ணமிகளில் வீரபத்திரருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இத்தலத்து வீரபத்திரர், குபேர திசையான வடக்கு நோக்கியிருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். எனவே இவரை, ஐஸ்வர்ய வீரபத்திரர் என்று அழைக்கிறார்கள்.

இவ்வாலயத்தில் மூலவர் அகஸ்தீஸ்வரர். அம்பாள்- ஸ்வர்ணாம்பிகை. வில்வமே தல விருட்சம். இந்தக் கோயிலில் வைகாசி விசாகத்தை ஒட்டி பத்து தினங்கள் பிரம்மோற்ஸவம் களைகட்டும். குறிப்பாக, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறுகிறது.

தொண்டை மண்டலத்து சிவாலயத்துக்கு உரிய அத்தனை அம்சங்களும் நிறையப் பெற்ற தலம். கொடி மரம் கடந்து உள்ளே சென்றால், இடப்புறம் நவகிரக சந்நிதி. இங்குள்ள விநாயகப் பெருமான் அனுக்ஞை விநாயகர். நாம் தொடங்கும் செயல்கள் அனைத்துக்கும் தடையின்றித் தொடர அனுமதி தரும் விநாயகப் பெருமான்.

அகஸ்தீஸ்வர சுவாமி சந்நிதி சுற்றுப் பிராகாரத்தின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு முதலியோர். தனி சந்நிதிகளாக, நடராஜர், பைரவர், சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, ஆதிசங்கரர் உள்ளிட்டோரின் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள நால்வர் சந்நிதியில் அகத்தியரும் காட்சி தருகிறார். ஆதி சங்கரருக்கு சுக்ல பஞ்சமியில் சிறப்பு அபிஷேகம் முதலியவை நடக்கின்றன.

அகத்தியருக்கு அருள்புரிந்த சிவபெருமானின் சந்நிதியும், அடுத்து அம்பாளின் சந்நிதியும் பொலிவுடன் திகழ்கின்றன. அகத்தியருக்கு திருமணக் கோலத்தில் தங்க நகைகள் அணிந்து சகல அலங்கார பூஷிதையாக அம்பாள் காட்சி தந்தாள் என்பதால், அம்மைக்கு ஸ்வர்ணாம்பிகை என்று பெயர். அம்பாளின் சந்நிதி இருபுறமும் சரஸ்வதியும், மகாலட்சுமியும் காட்சி தருகிறார்கள். எனவே, மூன்று தேவியர்களின் தரிசனத்தையும் இங்கே ஒருங்கே காணலாம்.

ஆலயத்தின் வெளிப் பிராகாரச் சுற்றில், விநாயகர், நாகர்கள், தல விருட்சமான வில்வ மரம், தொட்டில்கள் கட்டி பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் விருட்சம், வில்வாம்பிகை சந்நிதி என கோயில் விரிந்து பரந்துள்ளது.

செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை கண்டவர்கள், வீண் பயம் கொண்டு, அதிகம் பயப்படும் குணம் உள்ளவர்கள் இங்கே சிவபெருமானையும் பைரவர், வீரபத்திரரையும் வேண்டிக் கொள்கிறார்கள். வீரபத்திரருக்கு சந்தனக் காப்பு இட்டும், வெற்றிலை மாலை சூட்டியும் அன்பர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

செவ்வாய் பரிகாரத் தலம்: நவகிரகங்களில் அங்காரகன் (செவ்வாய்) தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, இங்கே ஒரு தீர்த்தம் உண்டாக்கினான். சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கினான் என்பர். அங்காரகன் உருவாக்கிய தீர்த்தம் ஆலயத்துக்கு வெளியே உள்ளது. அந்தக் குளக் கரையில், ஓர் அரச மரத்தின் அடியில் அங்காரகன் காட்சி தருகிறார். அருகே வடக்கு நோக்கிய நிலையில், வலம்புரி விநாயகர். எனவே இந்தத் தலமும் தீர்த்தமும் செவ்வாய் தோஷத்துக்கான பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. பக்தர்கள் செவ்வாய்க் கோயில் என்று இதனை அழைக்கின்றனர்.

இருப்பிடம்: சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையம் எதிரே கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6-11.30 வரை, மாலை 4-8.30 வரை.

தகவலுக்கு: 044-26172326

முழு கட்டுரையைப் படிக்க →