நவ கோள்களில் முதல் இடத்தில் இருப்பவர் சூரியன். இரண்டாம் இடத்தில் இருப்பவர் சந்திரன்.
அத்திரி - அனுசுயா தம்பதியினரின் மகனாகப் பிறந்த சந்திரன் தேவ குருவான பிரகஸ்பதியிடம் கல்வி கற்று கலைகளில் தேர்ந்தவர். திருமாலை நோக்கி தவம் இருந்து பல வரங்கள் பெற்றார். பாற்கடலில் தோன்றும் போது தன் உடலில் அமிர்த கலைகளைப் பெற்றதால் மிகவும் அழகானார். நவகிரக பதவியும் பெற்று கோலோச்சினார். எனவே தட்ச பிரஜாபதி எனும் அரசன் தன்னுடைய 27 பெண்களையும் அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். ""27 பெண்களையும் சமமாக நடத்த வேண்டும்'' என்ற நிபந்தனையையும் விதித்தார். அசுவினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்களே அந்தப் பெண்கள்.
சிறிது காலம் சென்ற பின் வேறு சில காரணங்களால் கார்த்திகை, ரோகிணி ஆகிய இரண்டு மனைவிகளிடம் மட்டுமே அதிக அன்பு செலுத்தினார் சந்திரன். இதனால் பாதிக்கப்பட்ட மற்ற 25 பத்தினிகளும் தங்கள் தந்தையான தட்சனிடம் முறையிட்டனர். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த தட்சன், தினம் ஒரு கலையாகத் தேய்ந்து 15 நாட்களில் அழிந்து போகும்படி சந்திரனுக்கு சாபமிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரன் நாளொன்றுக்கு ஒரு கலையாக தேய ஆரம்பித்தார். சாப விமோசனம் பெறுவதற்காக பலரிடம் வழி கேட்க ஆரம்பித்தார். ""சிவபெருமானை சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று பலரும் கூறினர். எனவே திங்களூர் வந்த சந்திரன் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். அதில் நீராடிவிட்டு சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்தார். அதற்குள் 14 நாட்கள் கழிந்துவிட்டன. இன்னும் ஒரு கலையே மிச்சமிருந்தது.
நல்லவேளையாக தக்க நேரத்தில் சந்திரனின் தவத்துக்கு இரங்கினார் சிவபெருமான். எஞ்சியிருந்த ஒரு கலையை எடுத்து தலையில் சூடிக்கொண்டார்.
""எம்முடைய அருளால் தினமும் ஒரு கலையாக வளர்ந்து 15ஆம் நாள் பூரண சந்திரனாக பிரகாசிப்பாய். எனினும் மகா தபஸ்வியான தட்சனுடைய சாபத்தையும் மாற்ற முடியாது. பௌர்ணமிக்குப் பிறகு தினமும் ஒரு கலையாகத் தேய்ந்து ஒரு கலை மட்டும் தேயாமல் மீண்டும் வளர்ச்சி பெறுவாய். சூரியனுடன் நீ இணையும் நாள் அமாவாசை. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய உகந்த புண்ணிய நாளாகக் கருதப்படும்.
சூரியனுக்கு நேர் எதிரில் நீ சஞ்சாரம் செய்யும் நாள் பௌர்ணமி தினமாகும். அன்றைய தினத்தில் என்னை வழிபடுபவர்களுக்கு உன்னால் ஏற்படும் தோஷம் நீங்கும். எனது தேவியான சக்திக்கும், ஸ்ரீமந்நாராயணனின் தேவியான மகாலட்சுமிக்கும் பௌர்ணமி உகந்த நாளாகி அன்றைய தினம் பூஜை செய்வோருக்கு அனைத்து நன்மைகளும் ஏற்படும்'' என்று அருளினார்.
இதனால் மகிழ்ந்த சந்திரன், இறைவன் இத்தலத்தில் எழுந்தருள வேண்டும் என்றும் இந்தத் தலம் தனது பெயரால் திங்களூர் என்று வழங்கப்பட வேண்டும் என்றும் வேண்டினார். அதன்படி இறைவன் திங்களூரில் கைலாசநாதராக அருள்கிறார். அம்மன் பெரியநாயகி. சந்திரன் ஏற்படுத்திய தீர்த்தம் சந்திர தீர்த்தமாக விளங்குகிறது.
இறைவன் சந்திரனுக்கு அருளியது பங்குனி மாதம், பௌர்ணமி தினத்தில்! இவ்வாலயத்தில் அன்றைய தினம் சந்திர பகவானுக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. அவ்வகையில் இவ்வருடம் 6.4.2012 அன்று லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. 12 ராசிகளில் அடங்கும் 27 நட்சத்திரக்காரர்களும் இந்த லட்சார்ச்சனையில் பங்கேற்கலாம். அன்றைய தினம் சந்திர பகவான் தன் பொற்கிரணங்களால் இறைவனைத் தழுவுவதைக் காணக் கண்கோடி வேண்டும். காலை முதல் மாலை வரை லட்சார்ச்சனையும், இரவு சிவனாருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.
மேலும் தகவலுக்கு 93445 89244.
அமைவிடம்: திருவையாறிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திங்களூர். தஞ்சாவூரிலிருந்து 18 கிலோ மீட்டர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.