முகப்பு
வெள்ளிமணி

குலம் தழைக்கச் செய்யும் பங்குனி உத்திரம்!

தமிழ் ஆண்டின் கடைசி மாதமாக வருவது பங்குனி. தெய்வத் திருமணங்கள் பலவும் பங்குனியில், உத்திர நன்னாளில் நிகழ்ந்ததாக இதிகாச புராணங்கள் கூறுகின்றன. எனவேதான் பங்குனி மாதத்தில் பெரும்பாலானோர் தங்கள் குடும்பங்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:30 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 10:13 PM

தமிழ் ஆண்டின் கடைசி மாதமாக வருவது பங்குனி. தெய்வத் திருமணங்கள் பலவும் பங்குனியில், உத்திர நன்னாளில் நிகழ்ந்ததாக இதிகாச புராணங்கள் கூறுகின்றன. எனவேதான் பங்குனி மாதத்தில் பெரும்பாலானோர் தங்கள் குடும்பங்களில் திருமணச் சடங்குகளை நடத்துவதில்லை.

பங்குனி உத்திரத் திருநாளில்தான் ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீரங்கமன்னரை கரம் பிடித்தாராம். ஸ்ரீராமபிரான் சீதாதேவியை மணம் செய்த நாளும் இந்நாளே. ஸ்ரீரங்கத்தில் தாயாருடன் ஸ்ரீரங்கநாதர் சேர்த்தி காணும் மிக முக்கிய சேர்த்தித் திருவிழா பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகிறது. ரதியின் வேண்டுதலுக்கு இணங்கி மன்மதனை சிவபெருமான் எழுப்பித் தந்த நாளும் பங்குனி உத்திரம்தான். இதனால்தான் இந்த நாளை ஹோலி என்னும் காமன் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.

சிவபெருமான் சக்தியைக் கரம் பிடித்த நாளாக பங்குனி உத்திரம் திகழ்கிறது. மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற சிவாலயங்களில் அன்றைய தினம் திருமண உற்ஸவங்கள் களை கட்டும். அன்று, சிவபெருமான், பார்வதிக்கு நடத்தப்படும் திருமண உற்ஸவங்களைக் கண்ணாரக் கண்டு வருவோருக்கு அனைத்து மங்களமும் உண்டாகும் என ஆகமங்கள் கூறுகின்றன.

Advertisement

ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட வைணவத் தலங்களில் நடைபெறும் பங்குனி உத்திர பிரம்மோற்ஸவங்கள் பக்தர்க்கு நலம் பல வழங்கும் பெருவிழாக்களே.

சபரிமலையும் உத்திரமும்: சபரிமலை சாஸ்தாவாம் ஐயப்பனின் அவதார நன்னாள் பங்குனி உத்திரம் என்பதால் சபரிமலையில் ஆறாட்டுவிழா நடக்கிறது. அன்று தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீசாஸ்தா நீராடும் புண்ணிய நதியில் நீராடினால் நாமும் புனிதமடைகின்றோம்.

குலதெய்வ வழிபாடு: பங்குனி உத்திர நன்னாளே, குடும்பங்கள் பலவற்றின் குல தெய்வங்களை தேடிச் சென்று வழிபடும் நாளாக அமைகின்றது. இந்நாளில் நமது குலதெய்வ கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வது நம் குலம் தழைக்க உதவுகின்றது. இந்த நாளில் நம் குல தெய்வங்களை நாடிச் சென்று செய்யும் வழிபாட்டால் நம் முன்னோரின் பரிபூரண ஆசிகள் நமக்குக் கிடைக்கும். மேலும், இந்த நாளில் ஒன்றிணைவதன் மூலம், நம் குலதெய்வக் கோயிலுக்கு செல்வதன் மூலம் சொந்த பந்தங்களுடன் நட்புறவு கொண்டாடுவதும், சுக துக்கங்களில் பங்குபெறுவதற்கான உறுதியும் கிடைக்கும்.

பங்குனி உத்திர விரத பலன்கள்: பங்குனி உத்திரத்துக்கு முந்தைய நாளில் இருந்து விரதம் இருந்து குலக் கோயில்களுக்குச் சென்று வழிபட வேண்டும். தெய்வத் திருமணங்களை தரிசித்து, நம் வீட்டிலும் மங்கள விழாக்கள் நடக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். தெய்வத் திருமண உற்ஸவங்களில் கலந்து கொண்டு இறைவனிடம் நம் மனதின் பாரத்தை வைத்தால், நம் இல்லங்களிலும் கல்யாண கெட்டிமேளம் கேட்கும் வாய்ப்பு கூடிவரும் என்பது வழிவழியாக வரும் நம்பிக்கை. பங்குனி உத்திர விரதம் இருந்து மகாலட்சுமி ஸ்ரீமந் நாராயணனின் மலர்க்கரம் பிடித்ததைப் போல் நம் வீட்டுப் பெண்கள் கடைப்பிடிக்கும் விரதத்தின் மூலம் நல்ல துணைவர் கிடைக்கப் பெறுவதுடன், வற்றாத செல்வ வளமும் உண்டாகும்.

கலைமகள் பிரம்மனை அடைந்த நாளும் பங்குனி உத்திரம் என்பதால், அன்று ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் மாணவர்கள் கல்வி வளத்தைப் பெறுவார்கள். கல்வியும், செல்வமும் சேர்ந்தால் நிம்மதியும் வளமும் கூடிய வாழ்க்கை அமையும் அன்றோ! அதற்கு வித்திடுவது பங்குனி உத்திர நன்னாள்.

முருகனின் திருமணக் கோலம்: முருகப் பெருமானின் அவதார நோக்கமான சூரனை அழித்ததற்குப் பரிசாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துத் தந்தார். அந்த நாள் பங்குனி உத்திரமே. எனவே முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றான, தெய்வானையுடன் முருகனுக்குத் திருமணம் நடந்த தலமான திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாண உற்ஸவம் கோலாகலமாக நடைபெறுகிறது.

இந்த உற்ஸவத்தைக் காணும் பேறு, அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்பதற்காக, பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை உள்ளிட்ட அறுபடை வீடுகள் மட்டுமல்லாமல் எண்கண், சிக்கல் உள்ளிட்ட முருகன் ஆலயங்கள் பலவற்றிலும் திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெறுகின்றது. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அணிவகுக்கும் மச்சக்காவடி, சேவற்காவடி, கற்பகக் காவடி உலகப் பிரசித்தி பெற்றது. எனவே அன்றைய தினம் அருகில் உள்ள முருகன் கோயில்களுக்குச் சென்று முருகனின் கல்யாணக் கோலம் கண்டு வாழ்வில் நன்மங்கலம் அடையப் பெறுவோம்.

(தெய்வத் திருமண மாதம் 5-4-2012,

பங்குனி 23, வியாழக்கிழமை பங்குனி உத்திரம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.