பலன்தரும் பரிகாரத் தலம்: கல்வியில் சிறக்க... திருமணத் தடை அகல...
தில்லையம்பதிக்கு ஒரு சோதனை. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்... சமணர் ஆதிக்கம் சோழ, பாண்டிய நாடுகளில் அதிகரித்தது. சைவத் தலங்களும் சுவாமி விக்கிரகங்களும் பெரும் ஆபத்தைச் சந்தித்தன. தில்லையம்பதியும் சமணர்
தில்லையம்பதிக்கு ஒரு சோதனை. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்... சமணர் ஆதிக்கம் சோழ, பாண்டிய நாடுகளில் அதிகரித்தது. சைவத் தலங்களும் சுவாமி விக்கிரகங்களும் பெரும் ஆபத்தைச் சந்தித்தன. தில்லையம்பதியும் சமணர் ஆளுகைக்கு உட்பட்டது. இதனால் நடராசப் பெருமானுக்கு ஆபத்து நேருமோ என்று பக்தர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர். சுவாமியை எப்படியாவது பத்திரப்படுத்த எண்ணினர். நடராசப் பெருமானின் விக்ரகத்தை எழுந்தருளச் செய்துகொண்டு பாண்டிய நாட்டின் தென்கோடிக்கு வந்தனர். அங்கிருந்து சேரநாடு செல்லும் எல்லைக்கு வந்தவர்கள் பொதிகை மலை அருகே திரிகூடாசலத்தை அடைந்தனர். முப்புறமும் மலைத் தொடர் சூழ்ந்திருக்க, அடர்ந்த காடாக விளங்கியது அந்தப் பகுதி. மூங்கில்கள் அடந்து படர்ந்திருந்தன. இறைவனை அந்த வேணு வனத்திலேயே பாதுகாப்பாக வைக்கலாம் என்று எண்ணினார்கள். இருப்பினும் எங்கே வைப்பது என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்த அவர்களுக்கு ஒரு புளியந்தோப்பைச் சுற்றி வட்டமடித்த கருடன் வழிகாட்டினார். அந்தத் தோப்பில் ஒரு புளிய மரம். விக்கிரகத்தை மறைத்து வைக்க வசதியாக பெரிய பொந்துடன் இருந்தது. அங்கே நடராசப் பெருமானை எழுந்தருளச் செய்து, இலை, தழைகளால் அந்தப் பொந்தை மூடிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
வருடங்கள் கடந்தன. தோப்புக்குச் சொந்தக்காரர் அடுத்த கிராமத்தைச் சேர்ந்த வேளாளச் செல்வந்தர். ஒருநாள் புளியமரத்தைப் பார்த்த அவர், ஞானமா நடராச மூர்த்தி ஏகாந்தமாய் எழுந்தருளியிருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டார். மரப்பொந்தினை சுத்தம் செய்து, பெருமானை வழிபடத் தொடங்கினார். அக்காலச் சூழ்நிலையை எண்ணி யாரிடமும் கூறாதிருந்தார்.
காலம் கடந்தது. சோழ நாட்டில் மீண்டும் சைவம் தழைத்தது. ஆடல்வல்லான் இல்லாத தில்லையை எண்ணிப் பார்க்க இயலவில்லை பக்தர்களால். மீண்டும் அவர்கள் பெருமானை அங்கே எழுந்தருளச் செய்ய எண்ணினர். அவர்களுக்கு சிவபெருமானே வழிகாட்டினார். தென் திசை வந்தவர்கள், வேணு வனம் இருக்கும் பகுதிக்கு வந்தனர். அசரீரி மூலமாக இறைவன் தன் இருப்பிடத்தைச் சொன்னான். புளியமரப் பொந்தில் இறைவனைக் கண்டு அதிசயித்த அவர்கள், பெருமானை மீண்டும் தில்லைக்கு எடுத்துச் சென்று எழுந்தருளச் செய்தார்கள்.
இங்கே புளியமரத்தில் பெருமானைக் காணாமல் தவித்த அந்த வேளாளர், அழுது புலம்பினார். அவரது நிலைக்கு மனமிரங்கிய பெருமான், மரத்தின் அடியில் இருந்து சுயம்பு லிங்க உருவாய் வெளித் தோன்றி அருள் புரிந்தார். பெருமானின் கருணையை எண்ணி மனம் உருகி அங்கே அவருக்கு வழிபாடு செய்யத் தொடங்கினார் அவர். இந்த விவரம் கேட்ட கிராமத்தார் தாங்களும் வழிபடத் தொடங்கினார்கள். இதை அறிந்த சேர மன்னன், இங்கே வந்து சிவபெருமானை வழிபட்டு, அவருக்காக ஒரு ஆலயத்தையும் எழுப்பினான்.
சேர மன்னர் கட்டிய கோயில் என்பதால், கொடிமரம் இல்லாமல் அவர்களின் வழக்கப்படி கோயில் அமைந்தது. அந்தப் புளிய மரமே தலவிருட்சமானது. பெருமான் புளியமர அறையில் தங்கியதால், இந்தப் பகுதிக்கும் புளியறை என்னும் பெயர் ஏற்பட்டது. சுயம்புவாகத் தோன்றிய பெருமான் சதாசிவ மூர்த்தி எனும் பெயர் பெற்றார்.
இவ்வாறு சிறப்பு பெற்ற இந்தக் கோயில் இருப்பது தென் தமிழகத்தின் கேரள எல்லையில் நெல்லை மாவட்டம், செங்கோட்டைக்கு அருகே சுமார் 6 கி.மீ. தொலைவில் கொல்லம், திருவனந்தபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது புளியறை. பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவு நடந்து சென்று கோயிலை அடையலாம்.
கோயிலுக்கு வெளிப்புறம், முதலில் தெரிவது ஒரு தாமரைக் குளம். சடாமகுட தீர்த்தம் எனும் பெயர் தாங்கி புண்ணிய தீர்த்தமாகத் திகழ்கிறது. கோயில் சற்று மேடான இடத்தில் உள்ளது. கோயிலுக்குச் செல்வதற்கு 27 படிகள் உள்ளன. 27 நட்சத்திரங்களுக்காக இத்தனை படிகள் கேரள முறைப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. நட்சத்திர தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தப் படிகளில் ஏறி, பரமனைத் துதித்தால் போதும், நிவாரணம் பெறலாம் என்கிறார்கள்.
ஸ்ரீதட்சிணாமூர்த்தி சந்நிதி: ஞானமா நடராசப் பெருமான், இங்கே உபதேசக் கோலத்தில் குருவாக இருந்து மரப் பொந்தில் அமர்ந்து அருள் புரிந்தார். எனவே சிவன்கோயில்களில் வழக்கமாக அமைக்கப்படும் கோஷ்ட தேவதையாக இல்லாமல், தட்சிணாமூர்த்திப் பெருமான் தனிச் சந்நிதியில் அமைந்தார். என்னதான் சுயம்புவாக லிங்க வடிவில் தோன்றினாலும் பெருமானின் ஞானம் தரும் யோக வடிவழகை தரிசிப்பது சிறப்பல்லவா! அத்தகைய கோலம் தாங்கி இங்கே எழுந்தருளியுள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்திப் பெருமான், குருபகவானுக்கு அதிபதியாயிற்றே. எனவே, இங்கே குருவுக்கு செய்யும் பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. வியாழக்கிழமைகளில் பக்தர்கள் பெருமளவில் வந்து பெருமானை பூஜிக்கிறார்கள். திருமணத்தடை அகல, குழந்தைகளின் கல்வி சிறக்க, குருவின் பரிபூரண சுபப் பார்வை பெற என அனைத்துக்கும் இங்கே சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்து சமய அறநிலையத்துறை, சுசீந்திரம் தேவஸ்தானத்தைச் சேர்ந்த கோயிலான இந்தக் கோயிலில் ரிக் வேத ஆகம முறைப்படி ஆறு கால பூஜைகள் நடக்கின்றன. சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், ஹோமம் ஆகியவற்றுடன் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெறும். சுற்றுவட்டாரத்தில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தி அருள் பெற்றுச் செல்கிறார்கள்.
சந்நிதிகள்: சதாசிவ மூர்த்திக்கும், அன்னை சிவகாமிக்கும் கிழக்கு நோக்கி தனியாக சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் கணபதி, நாகர்கள், ஆறுமுகப் பெருமான், சனீஸ்வர பகவான், பைரவர் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. மாடன், மாடத்தி, யட்சியம்மன் ஆகியோர் தனியாக சந்நிதி கொண்டுள்ளனர். 27 நட்சத்திரங்களுக்கும் கணவனாகப் போற்றப்படும் சந்திரன், 27 படிகள் முடியும் இடத்தில் தனியாக சிவபெருமானை நோக்கி சந்நிதி கொண்டுள்ளார். தென்முகக் கடவுளான ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு தெற்கு நோக்கிய தனி சந்நிதி. இங்கே பெருமானைச் சுற்றி வலம் வந்து வணங்கலாம். இது சிறப்பான ஓர் அமைப்பு. இந்தக் கோயிலின் பின்புறம், கிருஷ்ணஸ்வாமியாக பெருமாள் தனிக் கோயிலில் எழுந்தருளியுள்ளார். தற்போது மண்டபம் மற்றும் சுற்று வேலைகளுக்கான திருப்பணி நடைபெற்று வருகிறது.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6-12, மாலை 5-8. வியாழக்கிழமைகளில்: காலை 4.30-2 மாலை 4.30-8.30
இருப்பிடம்: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கொல்லம் செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவு. பேருந்து வசதி உண்டு.
மேலும் தகவலுக்கு: 94884 24023, 98430 63915