முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 4வது படைவீடு என அழைக்கப்படுவது சுவாமிமலை. கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது இந்தக் கோயில். அருணகிரிநாதர் போற்றிப் பாடிய முருகப் பெருமான் இவர். அவ்வகையில் திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகத் திகழ்கிறது.
"படைப்புத் தொழில் மட்டும் தெரிந்த பிரம்மனே! உமக்கு "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா?' என்று முருகப் பெருமான் கேட்க, தெரியாமல் திகைத்தார் பிரம்மன். அவரை தலையில் குட்டி சிறையில் அடைத்தார் முருகப் பெருமான். பிரம்மன் சிறையில் இருப்பதை நினைத்து வருந்திய திருமால், சிவபெருமானிடம் சொல்லி அவருக்கு விடுதலை கிடைக்க வேண்டினார். சிவபெருமான் முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும்படி கூற, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று பிரம்மனை விடுவித்தார்.
இதைக் கண்டு உளம் மகிழ்ந்த சிவபெருமான், முருகனைத் தன் மடியில் வைத்துக்கொண்டு, "பிரம்மனுக்கே தெரியாத பிரணவ மந்திரத்தை நீ எனக்குச் சொல்ல வேண்டும்' என்று கேட்க, முருகனும் யாரும் அறியக் கூறக் கூடாது என்று சொல்லி, சிவபெருமான் காதருகே சென்று, பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தார். இந்நிகழ்ச்சி நடந்த தலமாக சுவாமி மலை போற்றப்படுகிறது.
இங்கே முருகப் பெருமான் சுவாமிநாதனாக வலக் கரத்தில் தண்டாயுதத்துடனும், இடக்கையை தொடையில் வைத்தபடியும் யோக நிலையிலுள்ள குருவாக நின்ற கோலத்தில் ஆறடி உயரமாகக் காட்சியளிக்கிறார்.
திருமண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்காயுள், கல்வி, கேள்விகளில் சிறந்த ஞானம், உயர் படிப்பு, வேலை வாய்ப்பு, உத்யோக உயர்வு என அனைத்து கோரிக்கைகளுக்கும் இவரை வேண்டி பெருமளவிலான பக்தர்கள் தம் பிராத்தனைகள் நிறைவேறிட, வணங்கிச் செல்கின்றனர்.
சுவாமிநாதனை வழிபட்டால் நமக்கு வரும் இடையூறுகள், நோய்கள், பிராணிகள், பூதம், தீ, நீர், வெள்ளம், செய்த பாவம் ஆகியவற்றால் விளையும் தீமைகள் விலகும் என்பது நிச்சயம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.