முகப்பு
வெள்ளிமணி

நரகம் தீர்க்கும் மருந்து

கொடு நரகம் தீர்க்கும் மாமருந்து எதுவென முதலாழ்வார்களில் மூன்றாமவரான பேயாழ்வார் தம் திருவந்தாதியில் கூறுகிறார்.

Updated On : 26 அக்டோபர், 2012 at 9:15 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:51 AM

கொடு நரகம் தீர்க்கும் மாமருந்து எதுவென முதலாழ்வார்களில் மூன்றாமவரான பேயாழ்வார் தம் திருவந்தாதியில் கூறுகிறார். பிரபந்தத்தில் மூன்றாம் திருவந்தாதியில் மூன்றாம் பாசுரம் இது.
 ""மனத்து உள்ளான் மா கடல் நீர் உள்ளான் மலராள்
 தனத்து உள்ளான் தண் துழாய் மார்பன் - சினத்துச்
 செருநர் உகச் செற்று உகந்த தேங்கு ஓத வண்ணன்
 வருநரகம் தீர்க்கும் மருந்து''
 -எம்பெருமானின் மீது ஆழ்வாருக்கு தன் உள்ளம் படிந்துவிட்டது. அந்தப் பெருமான் தாமே தம்முடைய மனத்தில் வந்து பொருந்தினார். இதைப் பாடிய ஆழ்வார் இந்தப் பாசுரத்தில், "எம்பெருமான் என் மனத்துள் வந்து புகுந்தான். அதுவும் மாகடல் நீரிலும் மலராள் தனத்திலும் இருந்தவன். அந்த இடங்களை எல்லாம் விட்டுவிட்டு, என் மனத்திலே வந்து புகுந்தான்' என்கிறார். திருப்பாற்கடலாகிற மாகடல் நீர், மாமலராளாகிய பெரிய பிராட்டியின் திருமுலைத் தடத்தை மார்பில் ஓர் இடமாகவும், குளிர்ச்சி பொருந்திய துளசியாலே அலங்காரம் பொருந்திய மார்புடையவனாகவும் திகழ்கின்றவன் அவன். தன் அடியார்களுக்குத் தீங்கு இழைக்கும் விரோதிகள் உரு ஒழியும்படியாகச் சீறி அவர்களை அழித்து, ""ஆச்ரித விரோதிகள் தொலையப் பெற்றோம்'' என்று உள்ளம் உவந்தவனாகத் திகழ்கிறான். அந்த உவப்பினால் புகழ் பெற்று விளங்கும் வடிவம் உடையவன், அவனை அனுபவித்தே தீருவதற்கு உண்டான சம்சார நரகைக் கடக்க, அருமருந்தாகவே அவன் இவை எல்லாவற்றையும் விட்டு என் உள்ளத்தே புகுந்தான் என்று பாடுகிறார் பேயாழ்வார்.
 "மற்ற எல்லா இருப்பிடங்களையும் அவன் கொண்டிருப்பதுபோல், என் மனத்துள்ளும் உறைகின்றான்' என்ற சிறப்பைச் சொல்லி, "வரும் நரகம் தீர்க்கும் அரு மருந்தாய் இருப்பன்' என்று சொல்லி முடிக்க, இவ்வாறு மனத்துள்ளான் என்கிறார்
 பேயாழ்வார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.