முகப்பு
வெள்ளிமணி

அன்னை வேளாங்கண்ணி!

பதினாறாம் நூற்றாண்டில் ஒரு நாள். வேளாங்கண்ணி சிற்றூரில், அன்னை தனது குழந்தை இயேசுவுடன் பால்காரச் சிறுவன் ஒருவனுக்கு காட்சி தந்தாள். அந்தச் சிறுவன் தனது வாடிக்கையாளர் ஒருவருக்குப் பால் எடுத்துக்கொண்டு

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:48 PM
பகிர்:

பதினாறாம் நூற்றாண்டில் ஒரு நாள். வேளாங்கண்ணி சிற்றூரில், அன்னை தனது குழந்தை இயேசுவுடன் பால்காரச் சிறுவன் ஒருவனுக்கு காட்சி தந்தாள்.

அந்தச் சிறுவன் தனது வாடிக்கையாளர் ஒருவருக்குப் பால் எடுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு குளத்தருகே இருந்த, ஆலமரத்தடியில் சற்றே இளைப்பாறினான்.

அந்த நேரத்தில் அன்னை மாதா தனது குழந்தை இயேசுவுடன் அவன் முன் தோன்றி, தனது குழந்தைக்குக் கொஞ்சம் பால் வேண்டும் என்று கேட்டாள். சிறுவனும் தட்டாமல் தனது செம்பிலிருந்த பாலை அவளுக்குக் கொடுத்தான்.

பின்னர் தனது வாடிக்கையாளர் வீட்டுக்குச் சென்றான். அவரிடம், வழியில் ஒரு அம்மாவின் குழந்தைக்குப் பால் கொடுத்ததாகவும் அதனால் செம்பில் பால் குறைவாக இருக்கும் என்றும் தன்னை மன்னிக்கும்படியும் வேண்டினான்.

அந்த மனிதர் பால் செம்பை வாங்கிப் பார்த்தபோது அது நிறையப் பால் இருந்தது. அவருக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. இது எப்படி நிகழ்ந்தது என்று கண்டுபிடிப்பதற்காக, அந்தச் சிறுவனுடன் அந்த ஆலமரத்தடிக்குச் சென்றார். அங்கே அன்னை மீண்டும் அவர்கள் இருவருக்கும் தோன்றி அவர்களை ஆசீர்வதித்தாள்.

இதைக் கேள்விப்பட்ட அந்த ஊர் மக்கள் ஆனந்தமடைந்தனர். அந்தக் குளத்துக்கு மாதா குளம் என்று பெயரிட்டனர்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர், காலில் குறைபாடுள்ள ஒரு சிறுவன், அதே ஊரில் மோர் விற்பதற்காகச் சென்று கொண்டிருந்தான். அவனையும் தனது குழந்தையுடன் வழிமறித்த தாய் மாதா, அவனிடம் தனது குழந்தைக்காக மோர் கேட்டாள். அவனும் மறுக்காமல் அந்தத் தாய்க்குத் தன்னிடமிருந்த மோரைக் கொடுத்தான்.

மோரைப் பெற்றுக் கொண்ட தாய், அந்தச் சிறுவனிடம் நாகப்பட்டினத்திலுள்ள பணக்காரர் ஒருவர் வீட்டுக்குச் சென்று, தான் காட்சியளித்ததைப் பற்றிக் கூறுமாறு கேட்டுக் கொண்டாள்.

அந்தச் சிறுவன் எழுந்து நடக்க ஆரம்பித்தபோது அவனது கால்கள் குணமாகி, அவனால் நன்றாக நடக்க முடிந்தது.

அவன் சென்று சந்தித்த அந்தப் பணக்காரருக்கும், முந்தின நாள் இரவு அன்னை கனவில் தோன்றி, தனக்காக ஓர் ஆலயத்தை எழுப்புமாறு கேட்டுக் கொண்டிருந்தாள்.

மோர்க்காரச் சிறுவனுடன் வேளாங்கண்ணி வந்தபோது இருவருக்கும் மாதா மீண்டும் காட்சி தந்தார்.

அந்த மனிதர் அங்கேயே ஓர் ஓலைக் குடிசை போட்டு, சிறிய ஆலயம் ஒன்றை எழுப்பினார். அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் எல்லோரும் சேர்ந்து, இந்த அதிசயங்களைப் புரிந்த மாதாவுக்கு "ஆரோக்கிய அன்னை' என்று பெயர் சூட்டி, அந்த ஆலயத்துக்குக் கூட்டம் கூட்டமாக வந்து வழிபட ஆரம்பித்தனர்.

இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு, வேளாங்கண்ணி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போர்ச்சுக்கீசிய கப்பல் ஒன்றின் மாலுமிகளை அன்னை அதிசயிக்கத்தக்க வகையில் காப்பாற்றினாள். அந்த ஊருக்குள் நுழைந்து, அன்னையின் அந்த சிறிய ஆலயத்துக்கு வந்து அவர்கள் வழிபட்டனர்.

அவர்களே தங்கள் செலவில் அன்னைக்கு இன்னும் சற்றுப் பெரிய ஆலயம் ஒன்றை எழுப்பினர்.

பின்னர் அவர்கள் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் அந்த ஆலயத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தினர். இப்படி உருவானதுதான் தற்போது வேளாங்கண்ணியிலிருக்கும் ஆரோக்கிய அன்னை ஆலயம்.

1920 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் இந்த ஆலயம் இப்போதுள்ள பெரிய ஆலயமாக உருப்பெற்றது.

ஆண்டுதோறும் இந்த ஆலயத் திருவிழா ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவெங்கிலும் இருந்து, பல மொழி, இன, மதங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்து வழிபடுவது இந்த ஆலயத்தின் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.