ஞானம் தரும் ராமன்!
அயோத்தியில் ராமனுக்கு ஒருநாள் அசரீரி வாக்கு ஒன்று கிடைத்தது. "பத்துத் தலை ராவணனை சம்ஹாரம் செய்தது பெரிதல்ல.
அயோத்தியில் ராமனுக்கு ஒருநாள் அசரீரி வாக்கு ஒன்று கிடைத்தது. "பத்துத் தலை ராவணனை சம்ஹாரம் செய்தது பெரிதல்ல. ஹேம சிருங்க பட்டினத்தில் சதமுக ராவணன் (நூறு முகம்) அரக்கர் சேனையுடன் இருந்து அல்லல் பலருக்கும் அளித்து வருகிறான். அவனை அழித்து உலகைக் காப்பாய்'' என்றது.
சதமுக ராவணன் பலம்: ராமன், சீதை-அனுமன் மற்றும் வானர சேனைகளுடன் ஹேம சிருங்க பட்டணம் சென்றான். சதமுக ராவணன் படைகளுக்கும் ராமனின் சேனைகளுக்கும் நடந்த போரில் சதமுக ராவணனின் மூச்சுக்காற்றில் ராமர் சேனை மயக்கமுற்று விழுந்தது.
அம்பாளின் அருள்: குண்டலிபுரத்தில் அமர்ந்து அருளாட்சி செய்யும் அன்னை ரேணுகாவின் பக்தனான சதமுக ராவணனின் உயிர் தாமரைத் தடாகத்தில் உள்ள ஏதோ ஒரு தாமரைப் பூவில் ஐந்து வண்டுகளால் சூழப்பட்டு இருந்து வருவதாகவும் அதனைக் கண்டழித்தால்தான் சதமுக ராவணன் அழிவான் என்றும் அறிந்தான் ராமன். அழித்து வர அனுமனை ஏவினான்.
Advertisement
அனுமனின் ஆவேசம்: குண்டலிபுரத்தில் அனுமனை கண்டவுடன் அவன் கண்ணுக்குத் தெரியாமல் தாமரைக் குளத்தை மறைத்துவிட்டாள் அன்னை ரேணுகா. குண்டலிபுரத்தை பெயர்த்து எடுத்துச் செல்ல முயன்ற அனுமனை கல்லாக சமைத்தாள் ரேணுகா. அனுமனோ குண்டலிபுரத்தை மண்மாரி பெய்யச் செய்து அழிக்க ஆணையிட்டான். இதை அறிந்த ரேணுகா அதிர்ந்தாள்.
தீமையை அழித்தான்: குண்டலிபுரம் வந்து அனுமனுடன் சேர்ந்து அதர்வண வேதம் ஓதி இராவணனை அழிப்பதற்கு உண்டான வரங்களைப் பெற்றான் ராமன். தாமரைக் குளம் சென்று வண்டுகளோடு இராவணனையும் அழித்து நல்லவற்றை மீண்டும் நிலை நாட்டினான்.
படை வீட்டில்...: தனக்கு நல்வரம் அளிக்க அன்னை ரேணுகா தேவி வேண்ட, "நடந்தவற்றை விளக்கும் வகையில் கோயில் கொண்டு உன் பக்தர்களுக்கு நானும் உதவுவேன்' எனக் கூறி கோயில் கொண்டான் ராமன். அவ்வாறு கோயில்கொண்ட இடம் அந்த அம்மனின் படை வீடாகும்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம் அம்மன் கோயில் படை வீட்டில்தான் ராமன் யோக ராமனாக, அதர்வண வேதம் ஓதும் ராமனாக காட்சியளிக்கிறார். இடப்புறம் சீதை அமர்ந்து இருக்க நடுவில் ராமபிரான் பத்ம பீடமாய் கால்களை ஒன்றன் மீது ஒன்று இருத்தி, வலது கையில் ஞானச் சின் முத்திரையும் இடக்கையை தொடை மீது இருத்தியும் ஜெபம் செய்யும் தோற்றத்தில் அருள்புரிகிறார். வலப்புறம் இலக்குவன் நின்ற கோலத்தில் கை தொழுது நிற்க சீதையின் காலடியில் அனுமன் ஓலைச்சுவடி ஏந்தி இராமன் சொல்வதை சொல்லும் வகையில் அமைந்துள்ளது யோக ராமச்சந்திர சுவாமி திருக்கோயில்.
யோக குரு: ஜெயராமனுக்கு எதிராக யார் வந்தாலும் அவர்களை எதிர்ப்பது என்ற கடும் விரதம் பூண்ட அனுமனுக்கு குருவாக இருந்து ஓலைச் சுவடியில் இருக்கும் வேதாந்த ரகசியத்தையும், தத்துவ ஞானங்களையும் போதிக்கும் ராமன் அமைந்த திருக்கோயில் இதுவாகும்.
விஜய நகரப் பேரரசர்களின் கீழ் சம்புவராய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இத்திருக்கோயில் பெரும்பாலான சீரமைப்புகள் செய்யப்பட்டு விளங்குகிறது.
வேலூர் - போளூர் சாலையில் சந்தவாசல் என்ற இடத்தில் இறங்கி அம்மன் கோயில் படை வீட்டிற்கு சென்று குருவாக விளங்கும் இராமனை வழிபட ஞானமும் செல்வமும் கைகூடும்.