ஸ்ரீசாஸ்தா திருக்கல்யாணம்
கலியுகத்தில் நாமசங்கீர்த்தனம் சிறந்த சுலபமான மோட்ச சாதனம்'' என்பது ஆன்றோர் வாக்கு.
கலியுகத்தில் நாமசங்கீர்த்தனம் சிறந்த சுலபமான மோட்ச சாதனம்'' என்பது ஆன்றோர் வாக்கு. அவ்வகையில் பகவானுடைய அவதார லீலைகளையும், கல்யாண குணங்களையும் பாடி, ஆடி அனுபவிக்கும் பக்தர்கள் தன்மயமாகி நாமசங்கீர்த்தனம் செய்வதன் மூலம் பக்தியை வளர்க்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மேலும் பரமனது திருக்கல்யாண வைபவங்களை நடத்தி வைப்பது, கலந்துகொள்வது, ச்ரவணம் செய்வது இவற்றின் மூலம் அநேகம் பெண்கள் சீக்கிரமாகவே நல்ல கணவனை அடைவது கண்கூடு. இதைக் கருத்தில்கொண்டு பல இடங்களில் சீதா கல்யாணம், ராதா கல்யாணம், ருக்மிணி கல்யாணம் போன்ற உற்ஸவங்கள் ஹரிநாம பஜனை பத்ததியில் கொண்டாடப்பட்டு வருகின்றன. சிவாஷ்டபதியை அனுசரித்து மீனாட்சி கல்யாணமும் நடைபெறுகிறது. ஆலயங்களில் வள்ளி கல்யாணம் உற்ஸவமாக நடத்தப்படுகிறது.
அவ்வகையில் தற்போது ஸ்ரீசாஸ்தா திருக்கல்யாண வைபவமும் பாகவத சம்பிரதாயப்படி, பஜனை பத்ததியில் நடத்துவது இடம்பெற்றுள்ளது. புராண வரலாறுப்படி சபரிமலையில் நித்ய பிரம்மச்சாரியாக யோக நித்திரையில் அமர்ந்திருக்கும் ஐயப்பன் மணிகண்டனாக அவதரித்த காலத்தில்தான் திருமணம் கிடையாது. ஆனால், ஆதிகாலத்தில் ஹரிஹர சுதனாக அவதரித்து கயிலையில் காந்தகிரியில் கொலுவிருக்கும் சாஸ்தாவுக்கு பூர்ணா, புஷ்களா என்று இரு தேவியர் உள்ளனர் என்பது கர்ண பரம்ரையான வரலாறு. ஸ்காந்த புராணத்திலேயே சாஸ்தா திருக்கல்யாணம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. லட்சுமி ஸ்வரூபியாக ஸ்ரீபூர்ணாம்பாளும், துர்கா ஸ்வரூபியாக ஸ்ரீபுஷ்களாம்பாளும் கருதப்படுகின்றனர்.
இந்த தெய்வ திருக்கல்யாணம் பாகவத சம்பிரதாயப்படி, சென்னை வில்லிவாக்கம் ஸ்ரீஐயப்ப பஜனை சங்கத்தினரால் வரும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு அன்று வில்லிவாக்கம் அகத்தியர் நகரில் (நாதமுனி திரை அரங்கம் அருகில்) உள்ள மினி காமகோடி திருமண மாளிகையில் நடத்தப்படுகிறது.
Advertisement