தெய்வமே துணை!
வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் நாம் இறைவனை நினைக்க மறந்தாலும், இடையூறு ஏற்படும்போது அவரது தயவை நாட என்றுமே மறப்பதில்லை.
வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் நாம் இறைவனை நினைக்க மறந்தாலும், இடையூறு ஏற்படும்போது அவரது தயவை நாட என்றுமே மறப்பதில்லை. தன்னை இவ்வாறு நாடி வரும் இறையடியார்களுக்கு உதவ இறைவன் விரைந்தோடி வருவார் என்பதைத்தான் பைபிளில் காணப்படும் சூசன்னா என்பவரின் வரலாறு உணர்த்துகிறது.பாபிலோனில் வாழ்ந்து வந்த யோவாக்கியம் என்னும் செல்வந்தரின் மனைவிதான் பேரழகு மிகுந்த சூசன்னா. இவர் ஆண்டவருக்கு அஞ்சி நடந்து வந்தார். யோவாக்கியம் வீட்டிற்கு மக்களுக்கு நடுவராய் நியமிக்கப்பட்டிருந்த இரு முதியோர் வந்து நெடுநேரம் இருப்பது வழக்கம். வழக்குடையோர் அனைவரும் இவர்களை அணுகுவதுண்டு. சூசன்னா தன் கணவரின் தோட்டத்திற்குள் சென்று நாள்தோறும் உலாவுவதைத் தன் வழக்கமாகக் கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த முதியோர் அவர் மேல் தங்கள் மனத்தை தகாத வழியில் செலவிட்டனர்.
அவரிடம் தவறாக நடக்க முயற்சித்தவர்கள், தங்களுக்கு உடன்படவில்லையென்றால் பொய்ப் புகார் கூறுவோம் என்று சூசன்னாவை மிரட்டினர். ஆனால் சூசன்னா உரத்த குரலில் சத்தம் போட ஆரம்பித்தார். கூச்சலைக் கேட்டு அங்கு திரண்ட மக்களிடம் முதியோர் சூசன்னாவைப் பற்றித் தவறாகக் கூறினர். முதியோரிடம் பெருமதிப்பு வைத்திருந்த மக்களும் அதை நம்பிவிட்டனர்.
மறுநாள் தீர்ப்புநாளில் சூசன்னாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சூசன்னாவோ உரத்த குரலில் கதறியழுது இறைவனை நோக்கி மன்றாடத் தொடங்கினார். அவரது கூக்குரலைக் கேட்ட இறைவன் தானியேல் என்ற இளைளஞன் மூலம் தன் கருணையைக் காட்டினார். கூட்டத்தின் நடுவே நின்றுகொண்டிருந்த இளைஞன் தானியேல் மக்களை நோக்கி, ""வழக்கை ஆராயாமலும், உண்மையை அறிந்து கொள்ளாமலும் நேர்மையான ஒரு பெண்ணுக்கு எதிராக தீர்ப்பிடுவது முறையா? இம்மனிதர்கள் இவருக்கு எதிராக பொய்சான்று சொல்லியிருக்கிறார்கள்'' என்று கூறி அம்முதியோர் இருவரையும் தனித்தனியே பிரித்து விசாரிக்க ஆரம்பித்தார். இருவரும் வேறுவேறு விதமாகப் பொய் கூறினர்.
அவர்களின் வாய்மொழியாலேயே அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அவர்களுக்கு எதிராக எழும்பியது. அன்றைய மோயீசன் சட்டப்படி அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. மாசற்ற சூசன்னா காப்பாற்றப்பட்டார். எனவே இறைவனை நம்பியோர் என்றுமே கைவிடப்பட்டதில்லை. திக்கற்றோருக்கு தெய்வமே துணை.