மாகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பஞ்சவடியில் அமைந்துள்ளது ப்ராமரி தேவி ஆலயம். 51 சக்தி பீடங்களில் 12வது சக்தி பீடமாக விளங்குகிறது. அம்மனின் உடற்கூறுகளில் தாடை விழுந்த இடமாக இது கருதப்படுகிறது.
ஜனஸ்தான் பீடத்தில் உள்ள சக்தி, ப்ராமரி (சிப்புகா) என்றும், இறைவன் சர்வஸித்தேஷ்வர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ப்ராமரிதேவியை சப்தஸ்ருங்கி என்றும் அழைப்பர். நாசிக்கில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள வாணி கிராமத்தில் அமைந்துள்ளது ஆலயம். இது ஏழு மலைச் சிகரங்களின் நடுவில் அமைந்துள்ளதால் சப்தஸ்ருங்கி எனப்பட்டது. புகழ்பெற்ற யாத்திரைத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது இது.
அம்பிகை இங்கே சிம்ம வாகனத்தில் 18 கைகளிலும் ஆயுதம் ஏந்தியபடி, 10 அடி உயரத்தில் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறார். தேவிக்கு உடல் முழுவதும் செந்தூரம் பூசப்பட்டிருப்பது தனிச் சிறப்பு. காளியைப் போன்றே கருநிற தெய்வமாக விளங்கும் ப்ராமரி தேவியைச் சுற்றி கருப்பு தேனீக்கள் ரீங்காரமிடுமாம். தேவி தன் முதல் கையில் தேனீக்களை வைத்துள்ளார். அவர் பீஜாட்சர மந்திரமான "ஹ்ரீங்' என்பதை உச்சரிக்குமாம்.
அன்னை மகிஷாசுரமர்த்தினியாகவும் அறியப்படுகிறார். எனவேதான், இந்த மலை ஆலய கீழ்த்தள நுழைவாயிலில், மகிஷனாகிய எருமை மாட்டினுடைய தலைப்பகுதி சிலை வைக்கப்பட்டுள்ளது.
ராமாயண காலத்திலிருந்தே நாசிக், பஞ்சவடி ஆகியவை சிறப்புப் பெற்றவை. வனவாசத்தின்போது, கங்கைக் கரையிலிருந்து பஞ்சவடி என்ற இந்த இடத்துக்கு ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோர் வந்து ப்ராமரி தேவியிடம் ஆசி பெற்றனராம்.
பக்தர்கள் நினைத்ததை வழங்கும் சக்தியாக இங்கே ப்ராமரி தேவி அருள் புரிகிறாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.