உலகெலாம் உணர்ந்து....!
சோழர்கள் காலத்தில் நாடு பல மண்டலங்களாககவும், கோட்டங்களாகவும், நாடுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது.
சோழர்கள் காலத்தில் நாடு பல மண்டலங்களாககவும், கோட்டங்களாகவும், நாடுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. ஜயங்கொண்ட சோழ மண்டலத்து புலியூர் கோட்டத்து குன்றத்தூரில் "இராமதேவன்' என்ற இயற்பெயருடைய வேளாளர் ஒருவர் இருந்தார். இவரது குடும்பமே சிவன்பால் சித்தத்தை வைத்து வாழ்ந்த குடும்பம். "சே' என்றால் காளை எனப் பொருள்படும். உழவுத் தொழிலைச் செய்து வந்த குடியில் வாழ்ந்த குடும்பம் ஆதலால் சே+கிழார் குடும்பம் என அழைக்கப்பட்டது. மேலும் சிவன்பால் சித்தம் கொண்டவராக இருந்ததால், சிவனுக்கு ஊர்தியாக விளங்குபவர்கள் - சிவனைத் தாங்குபவர்கள் என்பதால் சேக்கிழார் குடி என அழைக்கப்பட்டனர்.
இராமதேவனுக்கு இன்னொரு பெயர் அருண்மொழித் தேவன் என்னும் இராஜராஜ சோழனின் பெயராகும். அருண்மொழித் தேவன் கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கினார். சைவத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவர். அவரது தகுதியையும் திறமையையும் கேள்விப்பட்ட இரண்டாம் குலோத்துங்க சோழன் அவரை தனது அவையில் அமைச்சர் ஆக்கினான். மேலும் அவருக்கு "உத்தம சோழப் பல்லவன்' என்னும் பட்டமும் அளித்து கௌரவித்தான்.
அரசு நிர்வாகம், நாட்டு நிர்வாகம் ஆகியவற்றை திறம்பட நடத்தி இரண்டாம் குலோத்துங்கனுக்கு நற்பெயர் ஈட்டித் தந்தார் அருண் மொழித்தேவன்.
சிறந்த சிவ பக்தனாக இருந்ததால் சோழ சாம்ராஜ்யத்தின் அனைத்து சிவாலயங்களையும் கண்டு தரிசித்து வரும் வழக்கம் இருந்தது. அவ்வகையில் கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் மீது அதிக ஈடுபாடு கொண்டவரானார். அதனைப் போலவே ஒரு ஆலயம் தன் சொந்த ஊரில் கட்டி சிறப்பிக்க வேண்டுமென விரும்பினார்.
மன்னன் அநபாயன் சமண இலக்கிய ஈடுபாட்டில் இருந்தான். சமண மதப் புலவர்கள் சிந்தாமணியின் கதையை எடுத்தியம்பி கதை - பொருள் விளக்கம் சொல்வார்கள். அதனில் மனம் லயிப்பான். அவை மன்னனை உலக வாழ்வில் இருந்து மாற்றி விடும் என நினைத்தனர். எனவே அவன் மனதை மாற்ற எண்ணினர்.
"இம்மை - மறுமை நலன் பயக்கக்கூடிய பல வரலாறு இருக்கும்போது சொல், பொருள், இன்பம் மட்டும் தரும் வரலாற்றைப் பேசி மகிழ்ச்சி அடைகின்றீர்களே. அந்தக் கதைகளை விட்டு இந்த வரலாறுகளைக் கேட்டு உணருங்கள்'' எனக் கூறி சைவ - அடியார்களின் வரலாறுகளை எடுத்து இயம்பலானார் அருண்மொழித் தேவன். சொல்லும் பொருளை சுவைபட அருண்மொழித் தேவன் என்னும் உத்தம சோழப் பல்லவராயர் சொல்ல, அடியார்கள் வரலாறுகளில் தன் மனதைக் கொடுத்த மன்னன் அதனை எழுத்தில் இலக்கிய வடிவம் ஆக்க வேண்டினான்.
திருநாகேஸ்வரம் மீது இருந்த ஈடுபாட்டைப் போலவே, தில்லையம்பலவாணன் மீதும் ஈடுபாடு கொண்ட அருண்மொழித் தேவர், பொன்னம்பலவாணன் முன் நின்று, தான் வரலாற்றைத் துவங்க முழு சக்தியை வழங்க வேண்டினார். பொன்னம்பல வாணனோ "உலகெலாம்' என்ற சொல்லை அசரீரியாக ஒலித்து புராணம் எழுத அடியெடுத்துக் கொடுத்தார்.
உணர்ச்சி மேலிட்ட அருண்மொழித் தேவனும் "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்' எனத் தொடங்கும் இறைவனின் அடியார்களின் வரலாறுகளைக் கூறும் திருத்தொண்டர் புராணத்தை எழுதி அரங்கேற்றினார். இன்னும் தனது சைவப்பணி இருப்பதைக் கருத்தில்கொண்டு தன் சொந்த ஊரான சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூரை அடைந்து மீண்டும் திருநாகேஸ்வரரை வேண்டி ஒரு புதிய கோயிலைக் கட்டத் தொடங்கினார். அங்கேயும் திருநாகேஸ்வரத்தை எழுந்தருள்வித்து குடமுழுக்கு செய்ததால் அத்திருக்கோயில் தற்போதும் குன்றத்தூருக்கு அருகில் உள்ள "திருநாகேஸ்வரம்' என்ற பெயரோடே வழங்கி வருகின்றது.
சேக்கிழார் என பின்னர் அழைக்கப்பட்ட அருண்மொழித் தேவன் சித்திரை திருவாதிரையில் புராணத்தை சிதம்பரத்தில் விரித்துரைக்கத் தொடங்க, மீண்டும் அடுத்த ஆண்டு சித்திரைத் திருவாதிரையில் முடிவு பெற்றது.
அதற்காக மன்னன் உரிய மரியாதைகள் செய்து அவருக்கு "தொண்டர் சீர் பரவுவார்'' என்ற பட்டம் அளித்து சிறப்புச் செய்தார். அதுமுதல் சேக்கிழாரின் பெரிய புராணம் பன்னிரண்டாவது திருமுறையாக சேர்க்கப்பட்டு மொத்த திருமுறைகள் பன்னிரண்டு என்ற நிலையை அடைந்தது.
அவர் சைவத்திற்கு செய்த பணியாலும், திருநாகேஸ்வரம் கோயிலைக் கட்டி குடமுழுக்கு செய்த காரணத்தாலும் ஒவ்வோர் ஆண்டும் அவர் முக்தி அடைந்த வைகாசி பூசத்தினை (வருகிற 12ஆம் தேதி) இறுதி நாளாகக் கொண்டு 10 தினங்கள் சேக்கிழார் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.