அரசு அலுவலகம் - நீதிமன்றம் இவைகளில் "வாய்மையே வெல்லும்' என எழுதப்பட்ட வாசகங்களைக் காணலாம். மேலும்
"நான் சொல்வதெல்லாம் உண்மை;உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை'' என்று கூறும்படி குற்றம் சுமத்தப்பட்டவரிடம் நீதிமன்றப் பணியாளர் சொல்வதையும் கேட்டிருக்கலாம். ""பொய் அழியக் கூடியது; மெய் அழியாதது'' என்பதை உணர்ந்து நடந்தாலே நமது வாழ்க்கை இன்பத்தில் திளைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்பது உறுதி.
ஒரு முஸ்லிம் எந்நிலையிலும் உண்மையே பேச வேண்டும். உண்மைக்குப் புறம்பாகப் பேசினால் இழி செயலுக்கு தள்ளி விடப்படுவர் என இஸ்லாம் இயம்புகிறது. நபிகள் நாயகம் (ஸல்), அனைத்து நபிமார்கள், நபித் தோழர்கள், கலீஃபாக்கள், இறை நேசர்கள் ஆகிய அனைவரும் மக்களுக்கு எதை எடுத்துரைத்தார்களோ, அதனையே தங்களது வாழ்வில் செயலாக்கிக் காட்டினார்கள்.
"நிச்சயமாக! உண்மை நற்செயலின் பக்கம் கொண்டு சேர்க்கும். நற்செயலானது சுவர்க்கத்தில் சேர்த்துவிடும். உண்மை பேசுபவர் அல்லாஹ்விடம், "உண்மையாளர்' என எழுப்பப்படுவார். பொய், பாவங்களின் பக்கம் வழி காட்டும். ஒரு மனிதன் பொய்யுரைத்தால், இறுதியில் அவன் அல்லாஹ்விடம் "பொய்யன்' என எழுப்பப்படுகின்றான்'' என நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
பெற்ற பிள்ளைகளிடம் எப்படிப் பண்போடும், அன்போடும் நடக்க வேண்டும் என்றும்,குழந்தைகளை ஏமாற்றவே கூடாது என்கிற உணர்வினைப் பற்றியும் நபிகளார் நமக்கெல்லாம் சொல்லிய உணர்வூட்டும் உபதேசத்தை இங்கே காண்போம்.
நபிகளார் ஒருநாள் தோழர் ஒருவரின் இல்லம் சென்ற போது, தோழரின் மனைவி, அழும் குழந்தையிடம், ""மகனே! நான் உனக்கு ஒன்று தருகிறேன்'' எனக்கூறி அழைத்தார்.
இதனைக் கேட்ட நபிகளார், ""பெண்ணே! உனதுமகனுக்கு ஏதாவது தருவதாக அழைத்துவிட்டு, பிறகு எதுவுமே கொடுக்கவில்லை என்றால், நீ பொய் சொன்னதாக உனது பதிவேட்டில் எழுதப்படும்'' என எச்சரித்தார்கள். (நூல்: அபூதாவூது).
ஒரு குழந்தை தன் தாயிடம் நற்பண்புகளைக் கற்றுக்கொண்ட பின் எக்காரணத்தைக் கொண்டும் தமது வாழ்வில் எந்நிலையிலும் பொய்யுரைக்காது. இதற்கு இறைநேசர் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களது வாழ்வில் நடந்த சம்பவமே சாட்சி.
இறைநேசர் அவர்களின் தாயார் தனது மகனை மேல் படிப்பிற்காக பட்டணம் அனுப்பி வைத்தார். படிப்புச் செலவுக்கு நாற்பது தங்கக் காசுகளை அவரது சட்டைப் பையில் வைத்து தைத்து அனுப்பும்போது, ""மகனே! நீ எந்நிலையிலும், எவரிடமும் "பொய்'யே பேசக்கூடாது. உண்மையை மட்டும்தான் பேச வேண்டும்'' என அறிவுரை கூறி வழியனுப்பி வைத்தார்.
வியாபாரக் கூட்டத்தினரோடு பட்டணம் சென்றபோது, வழியில் கொள்ளைக் கூட்டத்தினர், வழி மறித்து அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டனர். ஒரு கொள்ளையன் சிறுவரிடம், "உன்னிடம் என்ன இருக்கிறது?'' என்று கேட்டான்.
""என்னிடம் நாற்பது தங்கக் காசுகள் இருக்கின்றன'' எனச் சிறுவன் கூறியவுடன், தனது தலைவரிடம் சென்று சொன்னான் அந்தக் கொள்ளையன்.
"நீ வைத்திருந்த "தங்கக்காசுகள்' வெளியே தெரியாமல்தானே இருந்தது. ஏன் உண்மையைக் கூறினாய்?'' எனத் தலைவன் கேட்டதும், ""நீ எந்நிலையிலும், எவரிடமும் பொய் பேசாதே! என்று எனது தாயார் அறிவுரை கூறி அனுப்பினார். எனவே உண்மையைச் சொன்னேன்'' என்றான் சிறுவன்.
சிறுவனின் கூற்றைக் கேட்ட கொள்ளையர் தலைவன் சிந்திக்க ஆரம்பித்துவிட்டான். "ஒரு தாய் கூறிய அறிவுரையை ஏற்று உண்மையைக் கூறிய சிறுவன் எங்கே? ஊரை அடித்து உலையில் போடும் நாம் எங்கே?'' என தனக்குத் தானே கூறி, திருந்தி நேர் வழி பெற்றான் கொள்ளைக் கூட்டத் தலைவன் என இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.
எனவே, நமது குழந்தைகளுக்கு இதுபோன்ற பெரியோர்களின் உண்மை வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துக் கூறுவோம். "வாய்மையே வெல்லும்' என்பதால் உண்மையை மட்டுமே அவர்களை பேசச் செய்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.