முகப்பு
வெள்ளிமணி

நினைத்ததை நடத்தித் தருபவர்

மதுரையில் விஜயநகரப் பேரரசும் அதைத் தொடர்ந்து வந்த நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலமும் ஆன்மிக வழியில் பெரும் மலர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:34 AM
பகிர்:

மதுரையில் விஜயநகரப் பேரரசும் அதைத் தொடர்ந்து வந்த நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலமும் ஆன்மிக வழியில் பெரும் மலர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் இந்த மலர்ச்சி ஏற்பட்டாலும், மதுரையில் திருமலை நாயக்கர் காலத்தில் பெரும் எழுச்சியும் உத்வேகமும் பெற்றிருந்தது. கோயில் அறப்பணிகள் பல செய்யப்பட்டன. புதிய ஆலயங்கள் கட்டப்பட்டன. உள்ளுணர்வோடு பக்தியை வெளிப்படுத்திய நாயக்க மன்னர்களின் காலத்தில் சாதாரண மக்களுக்கும் இந்த உணர்ச்சியை அவர்கள் தங்கள் வாழ்க்கை மூலம் வெளிப்படுத்தியிருந்தனர்.

அப்படி ஒரு முறை, சிறந்த திருமால் பக்தராக விளங்கிய நாயக்க மன்னர் திருமலை நாயக்கர், திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதிப் பெருமான் மீது அளவு கடந்த பக்தி வைத்திருந்தார். பெருமானின் ஆறு கால பூஜை நடப்பதை, அந்த நேரத்தில் பூஜை மணி ஒலிக்கக் கேட்டு பின்னரே தான் உணவு உண்பதை விரதமாகக் கொண்டார். அதற்காக அவர் மணி மண்டபங்களைக் கட்டி, அவற்றை ஒலிக்கச் செய்வதற்குரிய ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

பூஜைகாலத்தில் தொடர்ச்சியாக மணி ஒலி கேட்டு, ஒலி எழுப்பப்பட்டு இறுதியாக இவர் உணவு உண்பது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் ஒரு நாள், திடீரென மணிச்சத்தம் கேட்காது போனது. இதனால் எம்பெருமான் பூஜைக்குத்தான் ஏதேனும் பங்கம் வந்துவிட்டதோ என்று எண்ணிப் பதறிய திருமலை நாயக்கர், குதிரை மீதேறிக் கிளம்பினார்.

சற்று தொலைவுதான் வந்திருப்பார்... ஒரு மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த மணி ஆடாமல் அசையாமல், செயலற்றதுபோல் கல்லாய் இருக்க, அந்த இடத்தை விட்டு குதிரையும் நகர மறுத்து அடம் செய்தது. அதன் கனைப்பில் அதிர்ந்த திருமலை நாயக்கர், என்னவோ என்று பயந்து குதிரையை விட்டு இறங்கி அந்த இடத்தைப் பார்வையிட்டார். அப்போது, அதன் அருகே சுயம்புவாக அனுமன் விக்ரஹம் ஒன்று தென்பட்டது. ஆச்சரியப்பட்ட அவர், அந்த இடத்தை சுத்தம் செய்து அமர்ந்த போது, அவர் மனதில் திருப்பதி வேங்கடாசலபதி பிரசன்னமானார்.

ஆச்சரியத்தால் அகம் சிலிர்த்து அங்கேயே பெருமானைத் தொழுது வழிபட்டார் மன்னர். அவரிடம் பெருமான், தனக்கு இங்கேயே ஒரு கோயில் எழுப்பி, வழிபடுமாறு கூறினார். அதன்படி அங்கே திருமலை நாயக்க மன்னரும் கோயில் எழுப்பி பெருமாளுக்கு சந்நிதி அமைத்து வழிபட்டார். சுயம்புவாகக் காட்சி தந்த அனுமனுக்கும் சந்நிதி எழுப்பப்பட்டது. அவர் அமைத்த கோயிலே இன்று நாம் காணும் மதுரை தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதிப் பெருமாள் திருக்கோயில்.

மதுரை நகருக்குள் மத்தியில் உள்ளது இந்தக் கோயில். வைகை ஆற்றின் வடகரையில் மிக அழகாக அமைந்துள்ளது. 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில். திருமலை நாயக்கர் பின்னாளில் இந்தக் கோயிலின் பூஜைக் காலத்தைத் தெரிந்துகொண்டு பின்னர் உணவு ஏற்றார் எனக் கூறப்படுகிறது.

இந்தக் கோயிலின் சிறப்பம்சமாகத் திகழ்வது, பெருமாள் சந்நிதியை ஒட்டியிருக்கும் ஸ்ரீஆஞ்சநேயர் சந்நிதி. ஸ்ரீவேங்கடாசலபதி பெருமான் சந்நிதிக்கு வலப்புறம் நின்ற நிலையில் உக்ர ரூபியாக தரிசனம் தரும் ஸ்ரீ ஆஞ்சநேயரைத் தரிசிப்பதற்கென்று சனிக்கிழமைகளில் இந்தக் கோயிலில் பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. ஸ்ரீஆஞ்சநேயரின் உக்ரத்தைத் தணிக்கும் விதமாக பின்னாளில் அவர் சந்நிதிக்கு நேர் எதிரே ஒரே கல்லில் சங்கு - சக்கரங்கள் மட்டும் செதுக்கப்பட்ட வடிவில் சக்கரத்தாழ்வாரை அமைத்தனராம்.

தல்லாகுளம் பெருமாள் கோயில் என்றதும் அடுத்து நினைவுக்கு வருபவர் ஸ்ரீகள்ளழகப் பெருமான்தான். மதுரை சித்திரைத் திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்க வரும் கள்ளழகர், தல்லாகுளம் பெருமாள் கோயில் சந்நிதியில் வைத்தே தங்கக் குதிரையில் பவனி வந்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வருகின்ற ஸ்ரீஆண்டாளின் மாலையை ஏற்று அணிந்து, தரிசனம் தருகிறார். இங்கே இவருக்கு திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெறும். பின்னர் இங்கிருந்து கிளம்பி வைகையாற்றுக்கு எழுந்தருள்கிறார். அந்த வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக இந்தக் கோயில் திகழ்கிறது. அழகர் மலைக்குத் திரும்பும் நேரத்திலும் இங்கே சிறப்பு தரிசனம் உண்டு.

நினைத்ததை அருளும் ஆஞ்சநேயர்: கோயிலில் உள்ள ஸ்ரீசுயம்பு அனுமனுக்கு பக்தர்கள் தொடர்ந்து 12 வாரங்கள் வந்து வழிபட்டு நினைத்தன எல்லாம் நடக்கக் காண்கின்றனர். அவ்வகையில், இந்த சந்நிதியில் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கக் காணலாம். திருமலை நாயக்கர் கால கோயில் என்பதால் சிற்பக் கலைக்கும் ஒன்றும் குறைவில்லை. மண்டபத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் அதற்கு சாட்சி. ஆஞ்சநேயருக்கு வடை, துளசி, வெற்றிலை மாலைகள் சாத்தப்படுகின்றன.

விழாக்கள்: சித்திரைத் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், தமிழ்ப் புத்தாண்டு, புரட்டாசி பிரமோற்ஸவம், பொங்கல் விழா, வைகுண்ட ஏகாதசி இராப் பத்து உற்ஸவம் உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பு.

பிரார்த்தனை: இத்தலத்தில் வீற்றிருக்கும் பிரசன்ன வேங்கடாசலபதிப் பெருமானை வேண்ட, கல்வி சிறக்கும். மேற்படிப்பில் இருக்கும் தடைகள் விலகும். திருமணத் தடை நீங்கி, குழந்தைப் பேறு கிட்டும்.

இங்கே தினமும் கோபூஜை நடைபெறுவது சிறப்பு. இங்குள்ள பசுவுக்கு அகத்திக் கீரை வழங்கி வணங்கிட, எண்ணிய காரியம் ஈடேறும். ஸ்ரீ சுயம்பு ஆஞ்சநேயரைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால், வழக்குகளில் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை.

சந்நிதி திறக்கும் நேரம்: காலை 5.30-12 வரை, மாலை 4.30- 9 வரை

முழு கட்டுரையைப் படிக்க →