முகப்பு
வெள்ளிமணி

கணபதியை வணங்கும்போது சிரசில் குட்டிக்கொள்வது ஏன்?

கத்திய முனிவர் காவிரி நதியைச் சிவபெருமானிடமிருந்து பெற்று அதனை ஒரு கமண்டலத்தில் அடக்கிக்கொண்டு

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:08 AM
பகிர்:

கத்திய முனிவர் காவிரி நதியைச் சிவபெருமானிடமிருந்து பெற்று அதனை ஒரு கமண்டலத்தில் அடக்கிக்கொண்டு தென்திசையை நோக்கிப் புறப்பட்டார். குடகு மலையில் இருந்து சிவபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது இந்திரன் சீர்காழியில் நந்தவனம் ஒன்றினை வைத்து சிவபூஜை செய்து வந்தான். வெகு நாட்களாய் மழையே இல்லை. அதனால் நந்தவனம் பொலிவிழந்து வாடியது. இந்திரன் இதற்கு என்ன செய்வது என்று அறியாது மயங்கினான். அப்போது திரிலோக சஞ்சாரியான நாரதர் இந்திரனை அணுகி குடகு மலையில் கமண்டலத்தில் காவிரியை அடக்கி வைத்திருக்கும் அகத்தியரைப் பற்றிச் சொல்லி அவரிடமிருந்து காவிரியைத் தருவிக்கச் சொன்னார். காவிரி நீர் வந்து விட்டால் நந்தவனம் செழிப்பாகி விடுமே..!

இந்திரன் உடனே அகத்தியரிடம் நேராகப்போகாமல் சுந்தர விநாயகரை வழிபட்டு அவரிடம் தன் விண்ணப்பத்தை வைத்தான். விநாயகரும் இந்திரனுக்கு உதவுவதாகக்கூறி ஒரு காக்கை உரு எடுத்து அகத்தியர் கமண்டலத்தைக் கவிழ்த்து விடுகிறார்! அகத்தியர் சினத்துடன் சீறிப்பாய்கிறார். விநாயகர் காக்கை உருவை விட்டு ஓர் அந்தணச் சிறுவனாக மாறி ஓடினார். அகத்தியர் அந்தச் சிறுவனைத் தலையில் இரு கரங்களாலும் குட்டுவதற்காகப் பின்னால் துரத்த, ஓரிடத்தில் விநாயகர் ஐங்கரக் கடவுளாக அகத்தியருக்குக் காட்சி அளித்தார்.

இந்த லீலைகள் யாவும் விநாயகரின் லீலைதான் என்று புரிந்து கொண்ட அகத்தியர் பிள்ளையாரைக் குட்டுவதற்காக ஓங்கிய கைகளால் தன் தலையில் பலமுறை குட்டிக்கொண்டார். உடனே விநாயகர் அகத்தியரின் கரங்களைப் பற்றி அருள்பாலித்து, ""அகத்தியரே! என்ன வரம் வேண்டும் உமக்கு? கேளும்!'' என்றார். அகத்தியரும், ""விநாயகப்பெருமானே! தேவரீருடைய சந்நிதியில் சிரசில் குட்டிக்கொண்டு வழிபடுவோருக்கு அறிவு நலம் பெறுக அருள்புரிய வேண்டும்!'' என்று வரம் கேட்க, விநாயகரும் அவ்வண்ணமே அருள்புரிந்தார்.

விநாயகரின் சந்நிதியில் தோப்புக்கரணமிட்டு, சிரசில் குட்டிக்கொண்டு வணங்குவோர் இஷ்டசித்திகளைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்தது. அன்றியும் அறிவின் இருப்பிடம் புருவ நடு! ஆதலால் சிரசில் குட்டிக் கொள்வதால் அறிவு விளக்கமுறும். அறிவு வடிவம் கணபதியாதலால் அவர்முன் இவ்வாறு வணங்குதல் சிறப்பேயாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.