முகப்பு
வெள்ளிமணி

அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில்!

சிவபெருமானின் திருக்கண்களை விளையாட்டாக பராசக்தி பொத்தியதால் உலகங்கள் இருண்டன.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:29 AM
பகிர்:

சிவபெருமானின் திருக்கண்களை விளையாட்டாக பராசக்தி பொத்தியதால் உலகங்கள் இருண்டன. இந்தக் குற்றத்திற்காக பூமியில் கருப்பு நிறத்தைப் பெற்றதால் காளியாக அவதரித்தாள் அன்னை. தேவர்களைத் துன்புறுத்திய சண்டாசுரன் என்னும் அசுரனை காளி வெற்றி கொண்டாள்.

சண்டாசுரன் வதத்திற்குப் பின் காளையார்கோயிலில் தவமிருந்து ஈசனை வணங்கியபோது மீண்டும் உமாதேவியாக மாறினாள். காளையார்கோயிலுக்குச் செல்லும் முன் காளியாக வீற்றிருந்து அருள்புரிந்த திருத்தலம் அரியாக்குறிச்சி என்றழைக்கப்படுகிறது.

சிவகங்கையிலிருந்து தொண்டி செல்லும் சாலையில் சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது அரியாக்குறிச்சி. இந்த இடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அய்யனார் கோயில் அமைந்திருந்தது. காரைச்செடி, ஈச்சமரம் நிறைந்த இப் பகுதியில் பலருக்கும் தெரியாமல் மறைந்திருந்த அய்யனாரை வழிபட்ட காரி வேளாளர் மாந்திரிகம் கற்றவர். தற்போது கோயில் உள்ள இடத்தில் இருந்த எழுத்துகள் காளிக்கு உரிய மந்திர எழுத்துகள் என்பதை அறிந்து அந்த இடத்தில் காளியை தோற்றுவித்தார். ஈச்சங்காட்டிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டதால் வெட்டுடைய அய்யனார் என்றும், இவருக்கருகில் நிலைபெற்ற காளி வெட்டுடைய காளி என்றும் பெயர் பெற்றனர்.

Advertisement

ஆங்கிலேயரிடமிருந்து தனது நாட்டை மீட்ட ராணி வேலு நாச்சியார் வைரத்தினாலான தனது திருமாங்கல்யத்தை வெட்டுடையாளுக்கு காணிக்கை ஆக்கினார். இந்த வரலாறு ஆலயத்தில் உள்ளது.

மூலஸ்தானத்தில் காளியம்மன் வலது காலை ஊன்றி இடது காலைத் தொங்கவிட்டு தரையில் குத்திய சூலத்துடன் காட்சி அளிக்கிறாள். வெட்டுடைய காளியை வணங்கிய ஓராண்டுக்குள் கண்டரமாணிக்கத்துக்கு அருகில் உள்ள கருங்குளத்தில் புதருக்குள் காட்சி தரும் பரநாச்சியம்மன் திருவடியை வணங்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கூற்றாக உள்ளது.

நியாயமான காரணங்களுக்காக இந்த சந்நிதியில் வந்து முறையிட்டு காசு வெட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டால் வெட்டுடைய காளி அநீதி இழைத்தவர்களை பழிவாங்குவாள் என வெட்டுடையாள் வீரசக்கரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. இதன்படி சந்நிதிக்குப் பின்புறம் உள்ள பீடத்தில் வெட்டிப் போடப்பட்ட காசுகள் எண்ண முடியாத அளவில் இருக்கிறது.

திருக்கோயிலுக்கு வெளியே இடதுபுறத்தில் 6 அடி உயரமுள்ள சோணைக் கருப்பண்ணசாமி காவல் தெய்வமாக வீற்றிருக்கிறார். கோயிலின் தெற்குப் பகுதியில் திருக்குளம் அழகாக காட்சி அளிக்கிறது.

இவ்வாலயத்தில் விநாயகர் சதுர்த்தி, ஆடி 18 இல் பூச்சொரிதல், நவராத்திரி விஜயதசமியில் அம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து அம்பு போடுதல், மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளி எழுச்சி, பௌர்ணமி தோறும் இரவில் சிறப்பு வழிபாடுகள், ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் 108 திருவிளக்கு வழிபாடு போன்றவை சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments