திருப்போரூர் தல வரலாறு!
தாரகன் என்ற அசுரன் கடுந்தவம் புரிந்து பிரும்மாவிடம் ஏகப்பட்ட வரங்களைப் பெற்றுவிட்டான். அந்த வரங்களின்
தாரகன் என்ற அசுரன் கடுந்தவம் புரிந்து பிரும்மாவிடம் ஏகப்பட்ட வரங்களைப் பெற்றுவிட்டான். அந்த வரங்களின் பலனாய் மூவுலகங்களையும் வென்று தேவரும் மற்று யாவரும் அவனது ஆணைக்கு ஏற்ப அழைத்து "பிள்ளைகளா.. தவத்திற்கு மேல் சிறந்தது எதுவுமில்லை. நான் புரிந்த கடுந்தவத்தால்தான் இவ்வளவு பேறு பெற்றேன். நீங்களும் உடனே சிவனை நினைத்து கடுந்தவம் புரிந்து அழியாத வரங்களைப் பெறுங்கள்!' என்று கூறினான். இந்தச் செய்தி, இந்திரன், பிரமன் முதலான தேவர்களிடம் போயிற்று. இதைக் கேட்டு அவர்கள் கதி கலங்கினார்கள். ஏற்கெனவே தாரகனிடம் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில் இவன் பிள்ளைகளும் சிவபெருமானிடம் வரம் வாங்கி
வந்துவிட்டால் அவர்களிடமும் அல்லல்பட வேண்டியிருக்குமே என்று கவலையுற்று தாரகனையும் அவன் பிள்ளைகளையும் அழிக்கும் பொருட்டு ஓர் அபிசார வேள்வியைப் புரியத் தொடங்கினார்கள். இதனையறிந்த தாரகன் கடுங்கோபமுற்று "இந்தத் தேவப் பதர்களைப் பூண்டோடு அழிப்பேன்' என்று வீராவேசமாய்க் கிளம்பி விட்டான்! அவன் இப்படிக் கடுங்கோபத்துடன் வருகிறான் என்று கேள்விப்பட்ட மாத்திரத்தில் தேவர்கள் அனைவரும் வேள்வியை அப்படியே நிறுத்திவிட்டுத் தலைதெறிக்க ஓடி மேருமலையில் போய் ஒளிந்து கொண்டார்கள்!
தாரகன் விடவில்லை. அவர்களைத் துரத்திக்கொண்டு சென்று ""கோழைகளே.. எங்கே ஓடுகிறீர்கள்?'' என்று அவர்களுக்கு ஒளிய இடம் தந்த மேருமலையைப் பெயர்த்துத் தூக்கி உலுக்கு உலுக்கு என்று உலுக்கினான்! ஒளிந்திருந்த தேவர்கள் பழுத்த புளியம்பழங்கள் உதிர்வதுபோலப் பொல
பொலவென்று கீழே விழுந்தார்கள். கீழே விழுந்தவர்கள் "செத்தோம்' என்று கூவியபடி கயிலை மலையை நோக்கிச் சிவனிடம் தஞ்சம் புக ஓடினார்கள்! தாரகன் பெயர்த்த மலையை மீண்டும் அதே இடத்தில் வைத்துவிட்டு தன் தலைநகர் திரும்பினான்.
தேவர்களில், தன்னிடம் வச்சிராயுதம் இருக்கும் தெம்பில் இந்திரன் தாரகனிடம் போர் புரிந்தான். ஆனால் எதுவும் பயனில்லை. அவன் வீசிய வச்சிராயுதம் தாரகன் மேல் பட்டுப் பொடிப் பொடியாய் ஆயிற்று! இந்திரன் தோற்று தன் மனைவி, மகனுடன் துறவி வேடம் பூண்டு காடுகளில் தலைமறைவாய் வாழலானான். பிரம்மாவின் கதியும் அதுவேதான். அவரும் தோற்று ஓடி சாது வேஷத்தில் நாள்களைக் கடத்திக்கொண்டும் சிவனைப் பூசித்துக் கொண்டும் இருந்தார். ஏனைய மற்ற தேவர்கள் தங்கள் வீராவேசத்தைக் காட்டவில்லை. மிக்க பணிவுடன் தாரகன் இட்ட பணியைச் செய்து கொண்டிருந்தார்கள். தாரகனிடம் அக்கினி சமையல் தொழில் செய்தான். வாயு அரண்மனையைக் கூட்டிக் குப்பை வாரினான்! வருணன் முற்றத்திற்குத் தண்ணீர் தெளித்தான். யமன் காலம் காட்டும் மணி அடித்தான்! இப்படித் தேவர்கள் அவனுக்குக் குற்றேவல் புரிய தாரகன் அமர்க்களமாய் அரசாண்டு வந்தான்.
நாளடைவில் இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் எஞ்சிய தேவர்கள் ஒரு குழுவாய் கைலாய மலையை அடைந்து சிவபெருமான் கால்களில் விழுந்து வணங்கித் தாரகனிடம் தாங்கள் படும் பாட்டைக் கண்ணீர் மல்கச் சொல்லிக் கதறினார்கள். தாரகனை வதைக்கும் நேரம் சமீபித்துவிட்டதை உணர்ந்த சிவபெருமான் ஒரு கணம் கண்களை மூடித் திறந்தார். அடுத்த விநாடி அவருடைய இதயத்தினின்று சகல ஆயுதங்களுடன் கோடி சூரியப் பிரகாசத்துடன் முருகக் கடவுள் தோன்றினார். சிவபெருமான் தாரகனை வதைத்து அமரர்களைக் காக்கும்படி முருகவேளைப் பணித்தார். முருகப்பெருமான் தன் படையுடன் சென்று தாரகனுடன் பத்து நாள் போர் புரிந்தார். ஒரு வெள்ளிக்கிழமை இரவு அவனை வதைத்தருளினார்! தேவர்கள் பயம் தெளிந்து
முருகவேளையும் சிவனையும் பணிந்து தம் இடம் ஏகினர். தாரகன் இருந்த இடம் இப்போதுள்ள செங்கல்பட்டிற்கு அருகில் "திருக்கூவம்' என்னும் திருத்தலம். அவனுடன் முருகவேள் போர் புரிந்த இடமே "போரூர்' ஆகும். திருப்புகழில் "சமதளவூரா நமோ நம' என்று அருணகிரிநாதர் பாடும் பதியே இந்தத் திருப்போரூர்!