துன்ப துயரங்களில், வேதனைகளில், நோய் நொடிகளில் சிக்குண்டு தவிக்கின்றபோது நமது கடவுளிடம் வேண்டுதல் செய்கின்றோம். அவர் செவி சாய்த்ததன் காரணமாக, சோதனைகளிலிருந்து விடுதலையும் நோய் நொடிகளிலிருந்து நலமும் பெற்றுக் கொள்கின்றோம். ஆனால் பலன் ஆண்டவர் கொடுத்தது; அதனால் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதை மறந்துவிடுகின்றோம்.
தூய விவிலியத்தில் லூக்கா நற்செய்தியில் (17:11-19) இயேசுவை நோக்கி வந்த பத்து தொழுநோயாளிகள் நலம் பெற வேண்டி நின்றார்கள். அவர்களின் பரிதாப நிலையைப் பார்த்த இயேசு அவர்களை குணமாக்கினார். ஆனால் அவர்களில் ஒன்பது பேர் நன்றி கூற மறந்தவர்களாய் சென்றதும், சமாரியரான (யூதர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட இனம்) ஒரே ஒரு தொழுநோயாளி மட்டுமே திரும்ப இயேசுவை அணுகி நன்றி செலுத்தினார்.
தொழு நோய்க்கு ஆளானவர்கள் யூத சட்டப்படி மற்ற மக்கள் கண்ணில் படாதவாறும், அவர்களோடு சேர்ந்து வாழாதவாறும் ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். தீண்டத்தகாதவர்களாக, தீட்டுப்பட்டவர்களாக எண்ணப்பட்டதால் தங்களை மறைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். அதனால்தான் அவர்கள் இயேசுவை கண்டவுடன், அவர் அருகில் வராமல் தொலைவிலிருந்தே உரத்த குரலில், "'ஐயா, இயேசுவே எங்களுக்கு இரங்கும்''என்று தாழ்பணிந்து கதறினார்கள். அதற்கு இயேசு ""உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன'' என்றோ, ""நோய் நீங்கட்டும்'' என்றோ கூறாமல், ""உங்கள் குருக்களிடம் சென்று காண்பியுங்கள்'' என்று மட்டுமே கூறினார்.
ஏனெனில் யூத குருமார்கள்தான் அவர்களை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தார்கள். குணம் பெற்ற பிறகு அவர்களிடம் சென்று சான்று
பெற்றால்தான் மக்களோடு மக்களாக வாழ தகுதிப் பெற்றவர்கள் ஆவார்கள். அதன் காரணமாகவே இயேசு அப்படி கூறினார். தொழுநோயாளிகளான பத்து பேரும் இயேசு கூறியதைக் கேட்டுச் சென்றார்கள். அவ்வேளை ஒருவர் மட்டுமே இயேசுவை நோக்கி மீண்டுமாக ஓடோடி வந்தார். நா தழுதழுக்க, கண்ணீர் மல்க.... இயேசுவின் காலைத் தொட்டு கும்பிட்டு ""நன்றி இயேசுவே'' என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.
அப்போது இயேசு அவரைப் பார்த்து ""மற்ற ஒன்பது பேரின் நோய்கள் நீங்கவில்லையா? அவர்கள் எங்கே'' என்று வினவினார். மேலும் கடவுளைப் போற்றிப் புகழ அந்நியரான(சமாரியர்) உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பி வரக் காணோமே'' என்றார்.
திரும்பி வந்து நன்றி கூறிய அந்தத் தொழுநோயாளி ""இது இறைமகன் வல்லமை'' என்று உணர்ந்தார். மற்ற ஒன்பது பேரும், குருக்களிடம் சான்று பெறச் சென்றிருக்கலாம். ஆனால் நலம் பெற்றும் நன்றி கூறாமல் சென்று விட்டனர். அதனால்தான் இயேசு ""அவர்கள் எங்கே'' என்றார். அப்போது இயேசு மீண்டும் அந்த நன்றி கூறியவரிடம் "'எழுந்து செல்லும் உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது'' என்றார்.
நன்றி கூறிய சமாரியரான நோயாளி ""இயேசுவால் நலம் பெறுவோம்'' என்றும், பிறரோடு வாழ தகுதியாக்குவார் என்றும் அசைக்க முடியாதவாறு நம்பியதால்தான் அவரை அனுகிச்சென்று நலம் பெற்று நன்றி கூறினார். ஆம், நமது வாழ்விலும், கவலைகள் நீங்க எல்லாம் வல்லவரை அணுகிச்செல்வோம். நலம் பெற்று நன்றிகளை காணிக்கையாக்குவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.