முகப்பு
வெள்ளிமணி

சக்தி பீடம் 51: கொல்லூர் மூகாம்பிகை

கர்நாடக மாநிலம், கொல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மூகாம்பிகை தேவியின் ஆலயம்.

Updated On : 27 பிப்ரவரி, 2014 at 3:20 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:01 AM

கர்நாடக மாநிலம், கொல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மூகாம்பிகை தேவியின் ஆலயம். சக்தி பீட வரிசையில் 3வது பீடமாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் வலது அக்குள் விழுந்த இடமாகக் கருதப்படுகிறது.

கொல்லூரில் வீற்றிருக்கும் அன்னையின் திருநாமம் மூகாம்பிகை என்றும், இறைவன் க்ரோதீஸ்வர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

பரசுராமரால் அன்னை பார்வதி தேவிக்காக அமைக்கப்பட்ட ஒரே கோவிலாகக் கருதப்படுகிறது. இங்கே அன்னை பார்வதி தாய் மூகாம்பிகையாக வழிபடப்படுகிறாள். செüபர்ணிகா நதிக்கரையில் அமைந்துள்ள அன்னையின் இந்த ஆலயம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மக்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.

Advertisement

அடர்ந்த விருட்சங்கள் கொண்ட காடுகளும் உயர்ந்த மலைச்சிகரங்களும், பாயும் நதிகளும் உள்ள குடட்சாத்ரி மலை அடிவாரம் முன்னர் மஹா ஆரண்யம் என்று அழைக்கப்பட்டது. இந்த ஆரண்யத்தில் கோலரிஷி என்ற தவசிரேஷ்டர், ஆசிரமம் அமைத்து சிவபெருமானை நினைத்துக் கடுந்தவம் புரிந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த மகாதேவர் அவருக்குக் காட்சி அளித்து, மந்திரோபதேசம் செய்தார்.

அத்துடன் தேவியைக் குறித்து தவம் செய்யும்படி கூறினார். அவரது ஆசிரமத்துக்கு அருகே ஒரு லிங்கம் புதையுண்டு கிடப்பதாகவும், அதை தோண்டி பிரதிஷ்டை செய்து ஆராதித்து வந்தாலே, அன்னையின் அருளைப் பெறலாம் என்றும் கூறி மறைந்தார். அதன்படி கோலரிஷி லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தேவியைக் குறித்து தவத்தில் ஆழ்ந்தார்.

அந்தக் காலகட்டத்தில் கம்ஹாசுரன் என்பவன் காலபைரவியை நோக்கி ஆகம முறைப்படி கடுந்தவம் மேற்கொண்டு பல ஆற்றல்களை அடைந்தான். தன் அசுர குணத்தால் விண்ணோரையும் மண்ணோரையும் பலவாறு துன்புறுத்தினான். இவனது துன்பங்களை பொறுக்க முடியாத தேவர்கள் ஆதிபராசக்தியின் உதவியை நாடினர். அதை அறிந்த அசுரன் தப்பியோடி ரிஷ்யமுக பர்வதத்தின் குகை ஒன்றினுள் ஒளிந்தான். சாகாவரம் எப்படியாவது அடைய வேண்டும் என்று அங்கிருந்தவாறு பரமனை நினைத்து கடுந்தவம் புரிந்தான்.

கடுந்தவத்தால் அச்சம் கொண்ட தேவர்கள் கோலரிஷியின் உதவியை நாடினர். கோலரிஷி அன்னையிடம் வேண்ட, அன்னை உதவுவதாக வாக்களித்தாள்.

அதன்படி அசுரனின் தவத்தை மெச்சி ஈசன் அவன் முன் தோன்றிவிட்டால், அசுரன் வாய் திறந்து வரத்தைக் கேட்டுவிடுவான் என்று எண்ணிய பராசக்தி, அந்த அசுரனின் நாவும், குரல்வளையும் இயங்காமலிருக்க அவனை ஊமையாக்கினாள். இதனால் அசுரன் கடும் கோபமடைந்தான்.

வாய் திறந்து பேச முடியாத ஊனமுற்ற கம்ஹாசுரன் மூகன் என்று அழைக்கப்பட்டான். வேறு வழியின்றி, இறுதியில் அன்னையிடம் சரணடைந்தான். அன்னையின் திருக்கரத்தால் மரணம் பெறும் தனது நற்பாக்யத்துக்கு கோலரிஷியே காரணம் என்பதால், அவர் பெயர் கொண்டு இத்திருத்தலம் விளங்க வேண்டும் என்றும், தன் பெயரோடு அம்பிகை இத்தலத்தில் இனி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்றும் கூறி கம்ஹாசுரன் தன் உயிரை நீத்தான்.

அதன்படி கோலரிஷி பெயர் கொண்டு அத்திருத்தலம் முதலில் கோலாபுரம் என்றழைக்கப்பட்டு பின்பு கொல்லூர் என்று மருவியது. மூகாசுரன் பெயரால் ஸ்ரீ மூகாம்பிகை எனும் நாமம் பெற்றாள் தேவி.

அன்னையின் வலது அக்குள் விழுந்த இடமாக கருதப்படும் கொல்லூர். சென்னை - மங்களூர் ரயில் மார்க்கமாக மங்களூர் அடைந்து, அங்கியிருந்து 139 கி.மீ. தொலைவு பேருந்தில் சென்றடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.