முகப்பு
வெள்ளிமணி

51சக்தி பீடம்: வேரூல் அர்த்தநாரீஸ்வரி

மகாராஷ்டிர மாநிலம் வேரூல் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது அர்த்தநாரீஸ்வரி ஆலயம். அன்னையின் உடற்கூறுகளில் வலது தொடை விழுந்ததாகக் கருதப்படும்

Updated On : 6 மார்ச், 2014 at 3:55 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:04 AM

மகாராஷ்டிர மாநிலம் வேரூல் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது அர்த்தநாரீஸ்வரி ஆலயம். அன்னையின் உடற்கூறுகளில் வலது தொடை விழுந்ததாகக் கருதப்படும் இது, சக்தி பீட வரிசையில் 36வது பீடமாக விளங்குகிறது. இந்த சக்தி பீடத்தை ஏலாபுரம் என்றும் அழைக்கின்றனர்.

அவுரங்காபாத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் எல்லோரா உள்ளது. அவுரங்காபாத் நகரத்திலிருந்து எல்லோரா அல்லது வேரூல் செல்ல பேருந்து வசதிகள் உண்டு. இவ்வாலயம் கால வெள்ளத்தினாலும் அந்நியர் படையெடுப்புகளாலும் முழுவதும் சேதமடைந்து இருந்த இடமே தெரியாமல் மறைந்துவிட்டது என வரலாறு கூறுகிறது. எனவே, தல தரிசனமே தேவி தரிசனமாகக் கருதப்படுகிறது.

இங்குள்ள அடர்ந்த காடுகளில் நாகப்பாம்புகள் அதிகமாக இருந்ததாம். இங்குள்ள மக்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். எனவே வேரூல் என்ற பெயர் ஏற்பட்டதாம். வெரூலா என்பது ஒரு வகை பாம்பினத்தைக் குறிக்கும் மராத்தியச் சொல். நாளடைவில் வெரூலா, வேரூல் என்று மருவியது.

Advertisement

அங்கு நிகழ்ந்த வராலாற்றுக் கதைகளுள் ஒன்று......

வேரூல் கிராமத்தை அலா எனும் பெயர் கொண்ட அரசன் ஆண்டு வந்தான். அவன் ஒருமுறை வேட்டையாடக் கானகம் சென்றான். காட்டு மிருகங்களை இரக்கமின்றிக் கொன்று குவித்தான். அந்தக் காட்டில் வசித்து வந்த கெüதமர் எனும் தவயோகி, அரசனின் இந்தக் கொடுஞ்செயலைக் கண்டித்து அவன் மேனி முழுவதும் புழுவெட்டுப் பரவும்படி சாபமிட்டார்.

புழு வெட்டால் துடித்த அலா, தனது நிலைக்கு முனிவரின் சாபமே காரணம் என அறிந்து, கெüதமரிடம் ஓடோடி வந்து அவர் தாள் பணிந்தான். தன் பாவச் செயலை மன்னித்து, சாபவிமோசனம் தருமாறு வேண்டினான். மன்னனின் வேண்டுதலால் கோபம் தணிந்த தவசீலர், பகலில் மட்டும் புழுக்களால் பாதிக்கப்படுவாய் என்றும் இரவில் அந்தத் தொல்லை ஏற்படாது என்றும் தன் சாபத்தை சற்றுக் குறைத்து அவனை மன்னித்தார்.

அரசன் அலா, சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த கானகத்துக்கு வந்த போது, அவனுக்கு மிருகங்களே தென்படவில்லை. மிருகங்களுக்காக அலைந்து திரிந்ததில் அவனுக்கு மிகவும் தாகம் ஏற்பட்டது. தண்ணீர் பருகப் பல இடங்கள் சென்றான். முடிவில் அவனுக்கு வற்றிய ஏரி ஒன்று தென்பட்டது. முகம் கழுவுவதற்கு வேண்டிய குறைந்த தண்ணீர் கொண்ட சிறுகுட்டை ஒன்று அந்த ஏரியின் ஒரு மூலையில் காணப்பட்டது. அங்கு சென்று தன் முகத்தைக் கழுவிக் கொண்ட அலா, வேறு ஒரு நீர் நிலையில் தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டான்.

அரசன் அலா, மறுநாள் காலையில் விழித்தெழுந்தபோது முகத்தில் நெளிந்த புழுக்கள் முற்றிலும் மறைந்து விட்டதோடு முகம் பளிச்சென்று பிரகாசமாக மாறியிருந்தது. இதனால் ஆச்சரியமுற்ற மன்னன், முகம் கழுவிய குட்டைக்கு மீண்டும் சென்றான். ஆனால், அங்கு நீர் தென்படவில்லை. ஏமாற்றமடைந்த அரசன் அந்தப் புனித நீர் வேண்டி நான்முகனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். தவத்தை மெச்சிய பிரம்மதேவன் அவன் முன் தோன்றினார். குட்டை இருந்த இடத்தை ஓர் ஏரியாக மாற்றி எட்டுப் புனிதத் தீர்த்தங்களை வரவழைத்து ஏரியை நிரப்பினார். சிவாலய தீர்த்தம் என்று பிரம்மதேவரால் பெயர் சூட்டப்பட்ட அந்த ஏரியில், அரசன் அலா மூழ்கி எழுந்தபோது அவன் உடலிலிருந்து புழுவெட்டு முழுவதும் மறைந்தது.

அன்னையின் வலது தொடை விழுந்த வேரூல் கிராமத்தின் அருகில் புகழ்பெற்ற புஷ்கரணியும், பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான க்ருஷ்ணேஷ்வரர் திருக்கோயிலும் அமைந்திருப்பது இத்தலத்துக்கு மேலும் சிறப்பு. சிவராத்திரியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சிவாலய தீர்த்தத்தில் நீராடிப் புண்ணியமடைகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.