மனமாற்றத்தின் காலம்...
ஒருவன் நம்மை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டச் சொன்னவர் இறைமகன் இயேசு கிறிஸ்து.
ஒருவன் நம்மை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டச் சொன்னவர் இறைமகன் இயேசு கிறிஸ்து.
நல்லவற்றுக்காகத் தாழ்ந்து போனவர் கெட்டுப் போனது இல்லை என்பதும் பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதும் ஆன்றோரின் அமுதவாக்கு. ஆலயங்களிலும் பிற இடங்களிலும், குருக்களும் பெரியவர்களும் சொல்லும் அறவுரைகளைக் கேட்கும்போது மட்டும் மனம் வருந்தி, மனமாற்றம் கொள்ள வேண்டும் என்று நினைப்பதும் பிறகு அவற்றை மறந்துபோய், மீண்டும் பழையபடி வாழ்க்கையை நடத்துவதுமே நமக்கு வாடிக்கையாகப் போய்விட்டது.
தவக்காலம் என்பது சோதனையின் காலம். சோதனை எல்லாம் வல்லவருக்கு மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவரும் அதனை எதிர்கொண்டே ஆக வேண்டும் பட்டினி கிடப்பதனால், வழிபாடுகளில் தவறாது கலந்து கொள்வதால் மட்டுமே நாம் தவக்காலத்தினை சிறப்பித்திட முடியாது.
ஒவ்வொரு ஆண்டும் தவக்காலம் நம்மைக் கடந்து செல்லும்போது நம்மில் ஏதேனும் ஒரு மாற்றதை விட்டுச் செல்ல வேண்டும். உபவாசம் செய்வதனாலோ, தியானம் செய்வதனாலோ தவக்காலத்தைச் சரியானபடி முடித்துவிட்டோம் என்று எண்ணிக் கொள்ளக்கூடாது.
நீ ஜெபிப்பது பிறருக்குத் தெரியாத வண்ணம் இருக்கட்டும். மறைவாக உள்ளதை அறியும் உன் இறைவன் உனக்கு நிறைவாகச் செய்வார் என்றும் வலதுகை கொடுப்பதை இடது கை அறியாத வண்ணம் கொடுக்க வேண்டும் என்றும் இயேசுவே கூறியிருக்கின்றார்.
கண்ணீர் என்பது மனிதகுலத்தின் சொந்தம். அந்த விழிநீரை ஆனந்தமாக வெளிக் கொணர வைப்பதும் சோகமாக வெளிக் கொணர வைப்பதும் அவரவர் வாழ்க்கையைப் பொறுத்தே அமைந்திடும்.
புனிதர்களின் வாழ்வைப் புரட்டி பார்த்து மட்டுமல்ல, படித்துப் பார்த்தும் அதனை உறுதியாகப் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும்.
தாய் மரியாளின் வாழ்வைப் பார்த்தோமேயானால், அவளுடைய தாழ்ச்சிதான் தரணியிலே அவளுக்கு இரட்சகரின் அன்னை என்ற மணிமகுடத்தைப் பெற்று தந்தது என்பதை உணர முடியும். அதற்கும் மேலாக விண்ணக, மண்ணக அரசியாக அவளை உயர்த்தியது. அவளது உண்மையான பிள்ளைகள் நாம் என்பதை ஒவ்வொருவரும் மனிதனும் அவளது வாழ்வைப் பிரதிபலிப்பதன் மூலம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
தவக்காலம் மனமாற்றத்தின் காலம் என்பதனை உணர்ந்திடுவோம். மன்னிப்பை இதயத்தில் நிறுத்தி, நல்ல பண்பாட்டினை கரத்தில் ஏந்தி சமூகத்தில் வீறு நடைபோடும்போது இறைவனின் ஆசியும் இறை அன்னையின் வழி நடத்தலும் நமக்குத் துணையாக இருக்கும்.