வெள்ளிமணி

திரித்துரைக்கும் தீங்கு!

ஓரு செயலைச் செய்திடத் தக்கவர் என்று மிக்க நம்பி ஒப்படைத்த பொறுப்பை ஒருவர் தப்பிதமாய் எண்ணி திண்ணியமாய் செயல்படாது திரும்பி வரும்பொழுது திரும்பியவரின்

மு. அ. அபுல் அமீன்

ஓரு செயலைச் செய்திடத் தக்கவர் என்று மிக்க நம்பி ஒப்படைத்த பொறுப்பை ஒருவர் தப்பிதமாய் எண்ணி திண்ணியமாய் செயல்படாது திரும்பி வரும்பொழுது திரும்பியவரின் கூற்றை மறுபடியும் மீளாய்வு செய்து மேலும் விளக்கம் பெற்று துலக்கமாய் செய்து முடித்து இலக்கை அடைவதே இனிய வழி. கனிந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கருணையுடன் செய்த காரியத்தால் போர் தவிர்க்கப்பட்ட பொறுப்பான நிகழ்ச்சியை நினைவு கூர்வோம்.

வலீதுப்னு உக்பா (ரலி) அவர்களைப் பனூ முஸ்தலக் கோத்திரத்தாரிடம் ஜகாத் வசூலிக்க வள்ளல் நபி(ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். இவர் வருவதையறிந்த பனூ முஸ்தலக் கோத்திரத்தினர் அவரை வாகாய் வரவேற்க வாகனங்களுடன் கூட்டமாக கூடி நின்றனர்.

எல்லையில் எல்லாரும் கூடி நிற்பதைப் பார்த்த உக்பா (ரலி) அவர்களுக்குப் பழைய நிகழ்ச்சி நினைவில் தோன்றியது. இவரும் இக்கூட்டத்தினரும் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னுள்ள காலத்தில் ஏற்பட்ட சண்டையில் உக்பா (ரலி) அவர்களில் ஒருவரைக் கொலை செய்தார்.

அந்தக் கொலைக்குப் பழி வாங்குவதற்கே படையெடுத்து பகைவர்கள் தொகையாக நிற்பதாக நினைத்துப் பயந்த உக்பா (ரலி) அவர்கள் திரும்பி வந்து திருநபி(ஸல்) அவர்களிடம் உண்மையை மறைத்து, ""பனூ முஸ்தலக் கோத்திரத்தினர் இஸ்லாத்தைத் துறந்து விட்டனர். ஜகாத்தைக் கொடுக்க மறுத்து என்னைக் கொல்ல முயன்றனர்'' என்று பொல்லாத பொய்யைச் சொல்லி போருக்குத் தோரணம் கட்டினார்.

அப்பொழுது அல்லாஹ், ""விசுவாசிகளே! ஒரு திரித்துரைப்பவர் சொல்லும் செய்தியைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். அறியாமையால் (குற்றமற்ற) ஒரு சமூகத்துக்கு நீங்கள் தீங்கிழைத்து விட்டால் நீங்கள் கவலைப்பட்டவர்களாக ஆகி விடுவீர்கள்'' என்ற திருக்குர்ஆனின் 49 - 6 ஆவது வசனத்தை அருளினான்.

இவ் வசனம் இறங்கியதும் அறங் காக்கும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அமைதியாக ஆலோசித்தனர். காலிதுப்னுல் வலீத் (ரலி) அவர்களிடம் ஒரு படையை ஒப்படைத்து படைகளுடன் வருவதை பனூ முஸ்தலக் கோத்திரத்தார் அறியாவண்ணம் இரவில் செல்ல செப்பினார்கள். அக்கோத்திரத்தார் இஸ்லாமிய நெறியில் நிலைத்திருந்தால் ஜகாத் வரியை வசூலித்து வரும்படியும் இஸ்லாத்தைத் துறந்து இறைவழியை மறந்து பகை பாராட்டுவார்களாயின் தொகையை வசூலிக்காது வகையாய் செயல்பட்டு வாகை சூடி வர அறிவுறுத்தினார்கள்.

நபிகளாரின் நல்லுரைப்படி அந்தி சாயும் வேளையில் முந்திச் சென்ற காலீதுப்னுல் வலீத் (ரலி) அவர்கள் அந்தி தொழுகையாம் மஃரிப் அதனையடுத்து இஷா தொழுகைக்கான அழைப்பொலியை (பாங்கை)க் கேட்டார்கள். அவர்கள் இஸ்லாத்தின் கடமைகளைக் கருத்தூன்றிச் செய்வதைக் கவனித்தார்கள். அவர்களிடம் ஜகாத் வசூல் செய்து கொண்டு வந்து கோமான் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்து கண்டதை விண்டுரைத்தார்கள். திருக்குர்ஆனின் வசனப்படி நடந்து போரைத் தவிர்த்து பேரிழப்பையும் தடுத்தார்கள் தகையுடைய தாஹா நபி (ஸல்) அவர்கள். இதன் பிறகே ஒற்றறிய செல்லும் ஒற்றரை ஒற்றறிய மற்றொரு ஒற்றரை அனுப்பும் ஒப்பரிய பழக்கம் தப்பில்லாது நடைபெறுகிறது. தப்பும் தவிர்க்கப்படுகிறது.

இக்குர்ஆன் வசனத்திலிருந்து பொய்யர், புறம் பேசுபவர், குற்றம் கூறுபவர், கோள் சொல்பவர், திரித்துரைப்போர் பேச்சைச் செவியேற்கக் கூடாது, செவியேற்பினும் தீர விசாரித்து தெளிவுறாமல் நம்பக்கூடாது என்னும் நன்னெறியை அறிகிறோம்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களும், ஈசல் விளக்கில் மொய்த்து மடிவதுபோல நீங்கள் பொய்மைக்குப் பலியாகி விடுகிறீர்கள். பொய்கள் அனைத்தும் ஆதமுடைய வழித்தோன்றல்கள் மீது ஹராமாகும் (தடுக்கப்பட்டது) என்று நவின்றதை அஸ்மா பின்து யஜீது (ரலி) அவர்கள் அறிவிப்பது திர்மிதீயில் காணப்படுகிறது.

நாமும் நற்குர்ஆன் பொற்போதனைப்படியும், நந்நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியைப் பேணி நாணத் தகும் பொய் பேசாது, புறங்கூறாது, திரித்துரைக்காது வெறுத்தொதுக்கும் தீயன விலக்கி தீமைகளை அகற்றி தூய்மையாய் வாய்மையைப் பேணி வளமாய் வாழ்வோம். வல்லோன் அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT