வெள்ளிமணி

கயிலாய வாழ்வு தரும் தொட்டிக்கலை சிதம்பரேஸ்வரர்

சிவபெருமான் நாட்டியமாடிய தலம்; இந்திரன் அமிர்த கலசம் பெற்ற பூமி; சிதம்பரத்தை போற்றும் சிதம்பரேஸ்வரர் ஆலயம்....

பனையபுரம் அதியமான்

சிவபெருமான் நாட்டியமாடிய தலம்; இந்திரன் அமிர்த கலசம் பெற்ற பூமி; சிதம்பரத்தை போற்றும் சிதம்பரேஸ்வரர் ஆலயம் கொண்ட மண்; சைவர்களும் வைணவர்களும் போற்றி வணங்கிய தலம்; திருவாவடுதுறை ஆதீன குல குரு பூஜித்த தலம்; சிவன் மற்றும் முருகன் அடியார் மாதவ சுப்பிரமணியர் வாழ்ந்த தலம்; பிள்ளைத் தமிழ் கொண்ட கோயில்; சிவகங்கை தீர்த்தம், நந்தியோடை கொண்ட பூமி; கோவை, வண்ணம், கட்டளை, பரணி என பல்வேறு இலக்கியங்கள் புகழும் பூமி என பல்வேறு பெருமைகள் கொண்டது, திருவள்ளூர் தொட்டிக்கலை சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்.

கலைசை, கலைசாபுரி, கோவிந்தபுரம் என போற்றப்படும் இத்தலத்தின் இன்றைய பெயர் தொட்டிக்கலை. இத்தலத்தில் பசுக்கொட்டில்கள் அதிக அளவில் இருந்தமையால், இவ்வூர் தொட்டிக்கலை என வழங்கப்படுவதாக தெரியவருகிறது. பசுத்தொழுவம் உள்ள கழுநீர் தொட்டியை ஆதாரமாக வைத்தே தொட்டிக்கலை என்று வழங்கப்படுகிறது.

கிழக்கு நோக்கிய ஆலயம், ஆலயத்தின் எதிரில் சிவகங்கை தீர்த்தம்! திருப்பணி நடைபெற்று வருவதால் நுழைவாயிலை மட்டுமே கொண்டுள்ள கோபுர அடித்தளம், இராஜகோபுரத்தை தாங்கி நிற்க தயார் நிலையில் உள்ளது. கோயிலினுள் பலிபீடம், கொடிமரம், நந்திதேவர், திருப்பணிக்கென அமைத்திருக்கிறார்கள். மகாமண்டபத்திற்குள் நுழைந்ததும், நேர் எதிரே மூலவர் சிதம்பரேஸ்வரர்! காட்சி கண்ட கண்கள் பணிகின்றன. தாமரை பீடத்தில் வட்ட வடிவ ஆவுடையாரில் எழுந்தருளிய இறைவன் புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றார். இந்திரனும் மகான்களும், மன்னர்களும் வழிபட்ட இறைவனின் திருமேனியைக் காண கண்கோடி வேண்டும். கருவறைச் சுற்றில் கணபதி, தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை அமைந்து அருள்கின்றனர். இறைவன் இத்தலத்தில் நடனமாடி காட்சி தந்ததால், சிதம்பரேஸ்வரர், கலசத்தியாகர் என்றும் அழைக்கப்படுகின்றார்.

மகாமண்டபத்து மேல் தளத்தில் எழில்மிகு கவிழ்ந்த தாமரை மொட்டும், அதையொட்டிய புடைப்புச் சிற்பங்களும் கலைநயத்தை பறை சாற்றுகின்றன. தூண்களில் பல்வேறு புடைப்புச் சிற்பங்கள் அமைந்து கவர்கின்றன. சுவாமி சந்நிதிக்கு இடதுபுறத்தில் சிவகாமி அம்பிகையின் சந்நிதி அமைந்துள்ளது. அன்னையின் அருள்கோலம் நம்மை பக்தியில் ஆழ்த்துகிறது. தலவிருட்சம் வில்வமரம்!

பிரம்மதேவன் இத்தலத்து இறைவனை வழிபட்டு அமிர்த கலசத்தினைப் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்திரனும் இறைவனை வழிபட்டு அமிர்த கலசத்தை பெற்றதாக தலப்புராணம் கூறுகிறது. இத்தலத்து நடராஜ பெருமானை தரிசித்தவர்கள் மனதில் மீண்டும் மீண்டும் தரிசிக்கும் எண்ணம் இயல்யாகவே தோன்றும். பிரதோஷம், திருவாதிரை ஆகிய விழாக்கள் இங்கு சிறப்புடன் நடத்தப்படுகின்றன.

இந்த சிவாலயத்தின் பின்புறம், பழைமையான கேசவ பெருமாள் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. பசு பால் சொரிந்து வெளிப்பட்ட எம்பெருமான் இவர் என, தலபுராணம் கூறுகின்றது. இங்குள்ள சிற்பங்கள் கலைநயத்தை விளங்குவதாக உள்ளன.

திருவாவடுதுறை ஆதினத்தின் குலகுருவாகப் போற்றப்படும் ஸ்ரீ மாதவச் சிவஞான சுவாமிகளும் இவரின் அருள்சீடரான தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவரும் இவ்வூரில் வாழ்ந்து இறைவனை வழிபட்டுள்ளனர். ஸ்ரீமாதவ சிவஞான முனிவர் தமிழில் பாஷ்யம் இல்லாத குறையை நீக்க சிவஞான போதம் சாத்திர நூலுக்கு திராவிட மஹா பாஷ்யம் இயற்றினார். அதேபோல. இத்தலத்து செங்கழுநீர் விநாயகர் மீதும் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழை பாடியுள்ளார். மேலும், சிதம்பரேஸ்வரர் புகழ் பாடும், கலைசை பதிற்றுப் பத்தந்தாதியையும் பாடியுள்ளார்.

தேறாய் கலைசைச் சிவனே இறை என்று

ஏறாய் சிவலோகம் இடும் பையெவாம்

பாறாய் பதம்அஞ் சும்விதிப் படியே

கூறாய் அருளே குறியாய் மனமே

என்ற பாடல் வரிகள் மூலம் இத்தலத்து இறைவனை வழிபடுவோர் சிவலோகச் செல்வத்தினை அடைவர் என உறுதி கூறுகின்றார் சுவாமிகள்.

மாதவச் சிவஞான சுவாமிகளின் பன்னிரு மாணாக்கர்களில் ஒருவரான தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் இத்தலத்து இறைவன் மீது அளவற்ற அன்பு கொண்டு விளங்கினார்.

கலைசை கோவை, கலைசை சிலேடை வெண்பா, கலைசை சிதம்பரேசர் சந்நிதி முறை, கலைசை சிதம்பரேசர் வண்ணம், கலைசை சிதம்பரேசர் பஞ்சரத்தினம், கலைசை சிவகாமியம்மை பஞ்சரத்தினம், கலைசை சிதம்பரேசர் பரணி, கலைசை சிதம்பரேசர் கட்டளை ஆகிய அரிய நூல்களை இயற்றி உள்ளார். மேலும் சிலேடை வெண்பா, சந்நிதி முறை, வண்ணம், பஞ்ச ரத்தினம் போன்ற பல்வேறு நூல்களையும் ஆயலூர் முருகன் பிள்ளைத்தமிழ், பழனி பதிற்றுப் பத்தந்தாதி, வடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி அந்தாதியையும் இயற்றியுள்ளார். இவர், திருவல்லிக்கேணி, பழனி குழந்தைவேலர் பஞ்சரத்தினமாலை, குற்றால கலைசை உலா, குற்றாலம் சித்திரசபை திருவிருத்தம், ஆவா

வடுதுறை கோவை, தன் குருவின் மீது பஞ்சரத்தின மாலை, வண்ணம், ஆனந்தக்கவிதை முதலான நூல்களையும் இயற்றியுள்ளார். தொட்டியக்கலை சுப்ரமணியர் திருவிருத்தம் பாடி, தொழுநோயாளியின் நோய் தீர்த்ததும், திருத்தணிகை திருவிருத்தம் பாடி பார்வையற்றவரைப் பார்வை பெறச்செய்ததும், இவர் தம் வாழ்வில் நிகழ்த்திய அதிசயங்களில் சிலவாகும். இம்முனிவர் தோன்றியது காட்டுமன்னார்குடி என்றாலும், இவ்வூரைத் தொடர்புபடுத்தி தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் என்றே அழைக்கப்படுகின்றார்.

இத்தலத்து இலக்கியங்கள் வெளிவர மூல காரணமாய்த் திகழ்ந்தவர், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை - திருவள்ளூர் ரயில் மற்றும் பேருந்து ஆகிய வழித்தடங்களில் செவ்வாய்பேட்டையை அடைந்து, அங்கிருந்து வடக்கே 3 கி.மீ. தொலைவில் இத்தலத்தை அடையலாம். இவ்வாலயம் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. பழைமையான இவ்வாலயம் தற்போது பக்தர்களால் திருப்பணி செய்யப்பட்டு வருகின்றது. நீங்களும் இத்திருப்பணியில் பங்குகொண்டு இறைவன் அருள் பெறலாம்.

தொடர்புக்கு: 98410 87040/ 044-4207 7645.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT