திருப்புகழில் புராணக் கதைகள்
தசக்ரீவன் கைலாய மலையை பெயர்த்த வரலாறு!
"பலகாதப் பெற்றிடவு மொரு நாழி' எனத் துவங்கும் திருவேரகத் திருப்புகழ்ப் பாடலில் ""மலையே எடுத்தருளுமொரு வாளரக்கன்'' என்ற அடிகள் குறிப்பிடும் புராண நிகழ்ச்சி இது!
தசக்ரீவன் என்ற அரக்கன் மகாபலிஷ்டன். அவன் வீரத்திற்கும் பலத்திற்கும் அஞ்சாதவர்களே கிடையாது. அவன் ஒருநாள் தனது எத்திசையிலும் பறந்து செல்லும் வல்லமை படைத்த புஷ்பக விமானத்தில் ஏறி வடதிசை நோக்கி விண்ணில் பறந்து சென்றான். நாலாபக்கமும் ஆனந்தமாகப் பார்த்துக் கொண்டு உல்லாசமாய் இருந்தவனுக்கு அவன் புஷ்பக விமானம் தடைப்பட்டு நின்றது! காரணம் எதிரே கயிலாய மலை. அதற்கு காவலாய் நந்திதேவர். அவர் விமானத்தை வழி மறித்து நிறுத்தி,""அப்பனே தசக்ரீவா! இது சிவபெருமான் உறையும் கயிலாய மலை. இதன்மேல் நீ பறந்து செல்லலாகாது. நவகிரகங்கள்கூட இம்மலைக்குமேல் செல்லாமல் சுற்றிக் கொண்டுதான் செல்லும். அதனால் நீயும் உன் விமானத்தில் இதைச் சுற்றிக் கொண்டு செல்!'' என்றார்.
தசக்ரீவனுக்கு இள ரத்தம். முனுக்கென்று கோபம் வந்துவிட்டது. ""ஏ குரங்குமூஞ்சி மாடே! கொழுப்பா? எனக்கு நீ புத்தி சொல்கிறாயா? உன்னையும் இந்த மலையையும் சேர்த்து பெயர்த்து எறிந்து விடுவேன். ஜாக்கிரதை!'' என்றான்.
கைலாய மலையை பெயர்க்கிற அளவு சூரனா நீ? முழு மூடனே! உனக்கு நல்லது சொன்னால் என்னைக் குரங்கு மூஞ்சி என்றா நக்கல் செய்கிறாய்? பார்... குரங்கினாலேயே உன் நாடு, நகரம், நீ அனைவரும் அழிவீர்'' என்று சாபமிட்டுவிட்டார் நந்திதேவர்.
தசக்ரீவனுக்கு இதைக் கேட்க கடுங்கோபம் மேலிட்டது. சடக்கென்று விமானத்தை விட்டுக் கீழே இறங்கி கைலாய மலையை ஓர் ஆட்டு ஆட்டிப் பெயர்த்துத் தோள்மீது வைத்து ஒரு குலுக்கு குலுக்கினான்.
நந்தி தேவருக்கும் தசக்ரீவனுக்கும் இடையே இந்த வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் மலையின் உச்சியில் ஒரு ரஸமான காட்சி. சிவபெருமானும் உமையம்மையும் அருகருகே அமர்ந்து சம்பாஷித்துக் கொண்டிருக்கிறார்கள்.
""ஸ்வாமி! அகில சராசரங்களும் சக்தியால்தானே இயங்குகின்றன?''
""ஆம் உமையே! அதில் என்ன உனக்கு சந்தேகம்?''
இல்லை... எல்லாமே சிவமயம் என்றுதானே வேதங்கள் சொல்கின்றன? ஆனால் நீங்கள் என்னை உயர்த்திக் கூறுகிறீர்களே... சும்மா என்னை மகிழ்விக்கத்தானே அப்படிப் பேசுகிறீர்கள்?'' என்று பொய் கோபம் காட்டி சற்று நகர்ந்து அமர்ந்தார் உமை.
இந்த நேரத்தில்தான் தசக்ரீவன் மலையை பெயர்த்து தோள்மீது வைத்துக் குலுக்கினான்! அந்தக் குலுக்கலால் நிலை பெயர்ந்த உமை அப்படியே தாவி சிவபெருமானைத் தழுவிக் கொண்டார்! உமையின் பொய்க்கோபமும் தீர்ந்தது.
சிவபெருமான் உடனே தேவியை இடது கையால் பிடித்தபடி ""பயப்படாதே தேவி! இப்பொழுதுபார்!'' என்றபடி தன் கால் பெருவிரலின் நக நுனியை ஊன்றிச் சிறிது அழுத்தினார்.
அவ்வளவுதான்... கதவிடுக்கில் மாட்டிக் கொண்ட எலிபோல் தசக்ரீவன் அகப்பட்டு உடல் நசுங்கி, தோள் முறிந்து "ஓ' என்று அலற ஆரம்பித்தான்.
இப்படி அலற ஆரம்பித்தவனால் அதை நிறுத்த முடியவில்லை. ஆயிரம் ஆண்டுகள் கதறி அழுதானாம்!(புராணம் சொல்கிறது!) அதனால் அவனுக்கு ராவணன் என்ற பெயர் வந்தது! ராவணன் என்ற சொல்லுக்கு ரோதனம் புரிந்தவன் என்று பொருள்.
அதன்பின்னர், ராவணன் தனது சாமதான இசைப்புலமையால் இறைவனை புகழ்ந்துபாடி அவரது மன்னிப்பைப் பெற்றான். அவனுக்கு பல்லாயிரம் ஆண்டு வாழ்நாளையும் வலிமை மிக்க வாள் ஒன்றினையும் பரிசாகத் தந்து அனுப்பிவைத்தார் சிவபெருமான்!
- மயிலை சிவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.