வெள்ளிமணி

ஹஜ் - உலக சகோதரத்துவம்

இஸ்லாத்தின் ஐந்தாவது இறுதி கடமையாம் ஹஜ்ஜிற்கு ஆதி நபி ஆதம் அவர்களின் காலத்திலேயே அடித்தளம் அமைக்கப்பட்டது.

மு. அ. அபுல் அமீன்

இஸ்லாத்தின் ஐந்தாவது இறுதி கடமையாம் ஹஜ்ஜிற்கு ஆதி நபி ஆதம் அவர்களின் காலத்திலேயே அடித்தளம் அமைக்கப்பட்டது. இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றிய இஸ்ஸôமியர்களுக்கு ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு ஹஜ் கடமையாக்கப் பட்டது.

ஹஜ் செய்பவர்கள் மக்கா எல்லையை அடையும் முன் இஹ்ராம் கட்ட வேண்டும். தையலில்லாத இரு வெள்ளை துண்டுகளை இடுப்பிலொன்றும் மேனியில் ஒன்றும் ஆண்கள் அணிய வேண்டும். பெண்கள் வழக்கமான பகட்டு, அலங்காரம் இல்லா ஆடைகளை அணியலாம். மக்கா சென்றதும் உம்ரா செய்ய வேண்டும். உம்ரா என்பது ஏழு தடவை கஃபாவைச் சுற்றுவதும் ஸபா, மர்வா மலைகளுக்கிடையே ஏழுமுறை சென்று வருவதும் ஆகும்.

இவ்வாண்டு ஹஜ் மாதம் 25.09.2014 இல் மக்காவில் பிறக்கிறது. இஹ்ராம் உடையில் துல்ஹஜ் பிறை 8 இல் மினாவிற்குச் சென்று இரவு தங்குவதிலிருந்து ஹஜ் தொடங்குகிறது. இவ்விடத்தில் ஆதம் நபி சுவனம் மீள விரும்பியதால் இவ்விடத்திற்கு மினா என்ற பெயர் ஏற்பட்டது.

பிறை 9இல் சூரியன் உச்சிக்கு வருமுன் அரபாத் சென்று சூரியன் மறையும் வரை வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஹஜ் கிரியைகள் செய்யும் இடங்களைக் காட்டிய பொழுது அரபாத்தில் தங்கும் வணங்கும் அவசியத்தை அறிவுறுத்தினார்கள். அறிவிப்பவர்- ஹழ்ரத் அதாவு (ரலி). நூல்: புகாரி, முஸ்லிம்.

இந்தியாவில் இறக்கப்பட்ட ஆதம் நபியும் ஜிந்தாவில் இறக்கப்பட்ட அன்னை ஹவ்வா (அலை) அவர்களும் தேடி அலைந்து சந்தித்தது அரபாவில். பல நாட்டவர் ஒன்று கூடி சந்தித்து அறியும் இடமாக இன்றும் அரபாத் விளங்குகிறது. இக்கட்டுரையாசிரியருக்கும் பல நாட்டு மக்களைச் சந்தித்து அளவளாவி இந்தியாவின் சிறப்பை, பெருமையை பேசும் வாய்ப்பு ஹஜ் புனித பயணத்தில் கிடைத்தது.

முஜ்தலிபாவில் இரவு தங்கி இறைவனை வழிபட்டு சைத்தானை விரட்ட கல் பொறுக்கி எடுக்க வேண்டும். முஜ்தலிபாவின் இரு மலைகளுக்கிடையில் உள்ள பகுதி மஷ்அருல் ஹரம் - புனித மிக்க வணக்கத்தின் இலக்கு என்று கூறப்படுகிறது. குர்ஆனின் 2- 198 ஆவது வசனம், ""அரபாத்தில் இருந்து திரும்பும்பொழுது மஷ்அருல் ஹரமில் அல்லாஹ்வைத் தியானம் செய்யுங்கள்'' என்றுரைக்கிறது.

துல்ஹஜ் பிறை 10 அதிகாலை தொழுகைக்குப் பின் முஜ்தலிபாவிலிருந்து புறப்பட்டு மினாவிற்குத் திரும்பி இரு நாட்கள் தங்கி ஜம்ராத் என்னுமிடத்தில் ஜம்ரத்துல் ஊலா, ஜம்ரத்துல் வுஸ்தா, ஜம்ரத்துல் அகபா ஆகியவற்றில் வரிசைக் கிரமமாக சைத்தானின் மீது ஏழேழு கற்களை மூன்று நாட்கள் எறிய வேண்டும்.

அல்லாஹ் ஆணையிட்டபடி மகன் இஸ்மாயிலைப் பலியிட சென்ற நபி இப்ராஹீம் (அலை) அவர்களை வழி கெடுக்க முனைந்த சைத்தான் மீது அந்நபி கல்லெறிந்து விரட்டிய நிகழ்வின் நினைவாய் அமைந்ததே இக்கல் எறியும் ஹஜ் கிரியை.

முதல்நாள் கல்லெறிந்த உடன் ஆடோ, மாடோ, ஒட்டகமோ குர்பானி கொடுத்து தலை முடியைச் சிரைத்த பின் மக்காவில் உள்ள கஃபாவை ஏழு தடவை வலம் வர வேண்டும். இதற்கு தவாபே ஜியாரா என்று பெயர். சுற்றி முடித்து மகாமு இப்ராஹீமில் இரு ரக்அத் தொழ வேண்டும். மகாமு இப்ரஹீம் என்பது கஃபாவைப் புதுப்பித்து கட்டும்பொழுது இப்ராஹீம் நபி நின்ற இடம்.

அதன்பின் கஃபாவின் கீழ்த்திசையிலிருக்கிற ஸபா, மர்வா ஆகிய இரு குன்றுகளுக்கிடையே ஏழு முறை மாறி மாறி செல்வது ஸயீ எனப்படும். ""திட்டமாக ஸபா மலையும் மர்வா மலையும் அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை. ஆகவே எவர் (கஃபா என்னும்) திரு வீட்டை ஹஜ்/ உம்ரா செய்தார்களோ அவர்கள் அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமல்ல. ஆகவே எவரேனும் நன்மையை நாடி சுற்றினால் நிச்சயமாக அல்லாஹ் அதற்கு நன்றி பாராட்டுபவன் ஆகவும் எண்ணங்களை நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்'' என்று இறை மறை குர்ஆனின் 2-158 ஆவது வசனம்  விளக்குகிறது.

அன்னை ஹாஜிரா ஓடி ஓடி நீர் தேடும் பொழுது குழந்தை இஸ்மாயீல் கால்களால் உதைத்த பாறையில் ஊறிய நீரே ஜம் ஜம். இவ்வூற்று அன்றிலிருந்து இன்றுவரை ஊறிக் கொண்டேயிருக்கிறது. பாலை நிலத்தில் பாறையில் ஊறிய ஜம் ஜம் இன்று பாலைவனத்தை சோலைவனமாக்கியுள்ளது. கஃபாவை வலம் வந்தபின் இந்நீரை நிறைய குடிக்க வேண்டும். இந்த ஊற்று நீர் ஆற்றலை வளர்க்கிறது; அறிவைப் பெருக்குகிறது; அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக விளங்குகிறது.

""நிச்சயமாக கஃபாவைத் தவாப் பெய்வதும் ஸபா, மர்வாவுக்கிடையில் ஓடுவதும் கற்கள் எறிவதும் அல்லாஹ்வின் நினைவை நிலை நிறுத்தும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன'' என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பைக் கூறியவர் ஆயிஷா (ரலி). நூல்: அபூதாவூத், திர்மிதீ.

வரலாற்று நிகழ்வுகளை நினைவுறுத்தி இணைவைக்காமல் இறைவனை வணங்கும் வழிபாடே ஹஜ். உலக முஸ்லிம்கள் அனைவரும் நாடு, மொழி, இன, நிற, இன்ன பிற வேறுபாடின்றி ஒன்று கூடி வணங்கி வழிபட்டு உலக சகோதரத்துவத்தை நிலை நிறுத்தும் இஸ்லாத்தின் இறுதி கடமை ஹஜ்.

ஹஜ்ஜை நிறைவேற்றியோரும் நிறைவேற்ற இறையருளை வேண்டுவோரும் இப்புனித ஹஜ்ஜின் புண்ணியமான உலக சகோதரத்துவம் பேணி ஒன்றுபட்டு வாழ்வோம். உலக அமைதிக்கு அடித்தளம் அமைப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

SCROLL FOR NEXT