வெள்ளிமணி

நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்!

தேவலோக பிரம்மச்சாரியான நாரத முனிவர் ஒரு சமயம் கங்கைக் கரையில் காலாற நடந்து சென்றார்.

தினமணி

தேவலோக பிரம்மச்சாரியான நாரத முனிவர் ஒரு சமயம் கங்கைக் கரையில் காலாற நடந்து சென்றார்.

குடும்பம் இல்லாததால் இல்லற சுகம் என்ற ஒன்றை அறியாது இருந்தார். கங்கைக் கரையில் சம்சாரிகள் குடும்பம் குடும்பமாக செல்வதைப் பார்த்து அவருக்கும் ஓர் ஏக்கம் உண்டானது.

அந்த நேரத்தில் கங்கை ஆற்றில் ஒரு மீன் தன் குஞ்சுகளோடு மகிழ்ச்சியோடு நீந்திச் செல்வதைக் கண்டு தானும் அதுபோல குடும்ப உறவையும், அதில் உள்ள இன்ப துன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினார்.

இதற்காக துவாரகையை ஆண்டு வந்த ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து தன் ஆசையைக் கூறினார். நித்ய பிரம்மச்சாரியான நாரதரின் ஆசையை கண்டு, ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு விளையாட்டை நிகழ்த்த விரும்பினார்.

நாரதர் அப்போது கிருஷ்ணரிடம் ""ஆயிரக்கணக்கான மனைவிகளைக் கொண்டு நீங்கள் எப்படி குடும்பம் நடத்துகிறீர்கள் என அறிய விரும்புகிறேன்'' என்று கூறினார்.

அதற்கு கிருஷ்ணர், தனது மனைவிகள் வசிக்கும் இல்லங்களுக்கு நேரில் சென்று அறிந்து வரும்படி கூறினார். அதன்படி கிருஷ்ணரின் மனைவிகள் வசிக்கும் ஆயிரக் கணக்கான வீடுகளுக்கும் நாரதர் சென்று பார்த்தார். அத்தனை வீடுகளிலும் ஸ்ரீ கிருஷ்ணர் தனது மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கண்டு தானும் அதுபோல குடும்ப சுகத்தை அடைய வேண்டும் என்று விரும்பினார்.

அந்த எண்ணத்துடனே நாரதர் கங்கை நதியில் மூழ்கி நீராடினார். கிருஷ்ணரின் அருளால் அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. நீரில் மூழ்கி எழுந்த நாரதர் பெண்ணாக மாறி இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு அழகான சந்யாசி பெண்ணாக மாறிய நாரதரின் கையை பிடித்து அழைத்துக் சென்று திருமணம் செய்து கொண்டார்.

மண வாழ்க்கை கொஞ்சம் காலம்தான் மகிழ்ச்சியோடு சென்றது. பெண்ணாக மாறிய நாரதருக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு குழந்தை எனப் பிறந்து கொண்டிருந்தது. பெண்ணாக மாறியதால் இனி அவரை நாரதி என்று அழைப்போம். இதனால் உடல் நலம் குன்றியும் கவலையால் பீடிக்கப்பட்டும் நாரதி துன்பமுற்றாள்.

குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியாமலும், நோய்க்கு மருந்தளிக்கவும் முடியாத நிலையும் ஏற்பட்டது. இப்படியே நாரதி 60 குழந்தைகளுக்கு தாயாகி விட்டார். இனியும் தாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது "குடும்ப வாழ்க்கை போதும், இதிலிருந்து என்னை விடுவியுங்கள்' என்று பகவான் கிருஷ்ணரை மனமார பிரார்த்தனை செய்தாள்.

உடன் நாரதியின் சந்யாசி கணவன் மறைந்து பகவான் சங்கு, சக்கரம், சுதை, தாமரையுடன் விஷ்ணுவாக காட்சி அளித்தார்.

நாரதியிடம், "பெண்ணே குடும்ப வாழ்கையின் சுகம் போதுமா? வேறு என்ன வேண்டும்?'' என்று வினவினார். அதற்கு நாரதர், ""மண வாழ்க்கை ஒரு மலர்ப்படுக்கையென்று எண்ணி ஏமாந்து விட்டேன். என்னை இதிலிருந்து விடுவித்து உதவுங்கள்'' என்றார். அதுவரை நாரதரை மாயையில் ஆழ்த்தி இருந்த பகவான் அவரை மாயையில் இருந்து விடுவித்தார். நாரதியும் பழையபடி தம்புராவைச் சுமந்தபடி நாரதராக மாறினார்.

அப்போது நாரதர் சம்சாரக் கடலில் மூழ்கி இருந்த 60 வருடங்களில் அவருக்குப் பிறந்த 60 குழந்தைகளும் நாரதரைச் சுற்றி வந்து தங்களுக்கு ஏதாவது வழி செய்து விட்டு செல்லுங்கள் என்று கதறின. நாரதர் அவர்களை அமைதிப்படுத்த ஒரு வழி சொல்லுமாறு பகவான் விஷ்ணுவை வேண்டினார்.

அதற்கு பகவான், 60 பிள்ளைகளையும் 60 ஆண்டுகளாக இருந்து ஒவ்வொருவரும் ஓர் ஆண்டு இந்த பூவுலகை ஆண்டு சுகமாக வாழ்வார்கள் என அருளினார். அதன்படி "பிரபவ'வில் தொடங்கி "அக்க்ஷய'வில் முடியும் 60 குழந்தைகளும் வருடங்களாக மாற்றம் பெற்று பூவுலகை ஆட்சி செய்து வருகின்றனர்.

வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மன்மத வருடம் பிறக்கிறது. 60 வருடங்களில் 29 ஆவது ஆண்டாக வருகிறது.

"மன்மதத்தின் மாரியுண்டு வாழும் உயிரெல்லாமே நன்மை மிகும்...' என்று நேர்மறையான பலன்களைச் சொல்லுகிறது இந்த வருடத்திற்கான பாடல். பிறக்க இருக்கும் மன்மத ஆண்டில் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்.

- டி.கோவிந்தராஜூ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிக்கட்டத்தில் 29 படப்பிடிப்பு!

போரூர் - வடபழனி சேவை எப்போது? சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி அறிமுகம்!

விரைவில் டும்.. டும்.. பாச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? புயலைக் கிளப்பும் ரசிகர்கள்!!

நேற்று ஹீரோ; இன்று ஜீரோ! அடிலெய்ட் டெஸ்ட்டில் டக் அவுட்டான கேமரூன் கிரீன்!

தில்லி காற்று மாசு: அரசு, தனியார் அலுவலகங்களுக்கு முக்கிய உத்தரவு!

SCROLL FOR NEXT