கையிலாய மலையில் மாணிக்க மண்டபத்தில் சிவபெருமான் உமாதேவியாருடன் அமர்ந்து விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் ஆகியோருக்குத் தரிசனம் தந்து அருளிக் கொண்டிருந்தார். வந்தவர்கள் எல்லோரும் சென்றுவிட்ட நிலையில், ஒரு முனிவர் சிவபெருமானை மட்டும் பணிந்து வணங்கி விட்டுச் செல்ல ஆரம்பித்தார். அதைப் பார்த்த பார்வதி தேவி துணுக்குற்று சிவபெருமானை நோக்கி ""ஸ்வாமி! என்னைச் சிறிதும் மதியாமல் தங்களை மட்டும் நமஸ்கரித்துவிட்டுச் செல்லும் இந்த முனிவர் யார்?'' என்று வினவினார்.
அதற்குச் சிவன், "தேவி! சகலமும் சிவனே, அனைத்தும் சிவமயமே'' என்று உறுதியாய் நினைத்துச் செயல்படும் வீரன் இந்த முனிவன். பிருங்கி என்று பெயர் படைத்தவன்'' என்றார்.
"எல்லாமே சிவமயமா இவனுக்கு? இருக்கட்டும். இவன் செருக்கை அடக்குகிறேன்' என்று எண்ணிய உமை, பிருங்கி முனிவரது உடலில் சக்தியின் கூறாக உள்ள ரத்தம், தசை முதலியவற்றைக் கவர்ந்தார்! பிருங்கி முனிவர் பாவம், சிவத்தின் கூறுகளாகிய எலும்பும் தோலுமாய் வெற்று நரம்புகளுடன் தள்ளாடித் தள்ளாடி நிற்கக்கூட முடியாதவராய் தவித்தார்! தன் பக்தன் தவிப்பதைப் பார்க்கச் சிவனுக்குப் பொறுக்குமா? உடனே பிருங்கி முனிவருக்கு மூன்றாவதாய் ஒரு காலைக் கொடுத்து உதவினார்! பிருங்கி உடனே அந்த மூன்றாவது காலின் உதவியோடு சிவத்தை மட்டும் வணங்கி விட்டுச் சென்றார். அதைக் கண்டு உள்ளூர பொருமிய உமை "இந்த முனிவன் தன்னையும் வணங்குமாறு எப்படி செய்வது' என்ற ஆராய்ச்சியில் இறங்கினார். சிவனும் தானும் இப்படித் தனித்தனியே இல்லாமல் ஒருவராய் இருந்தால் அந்த முனிவன் அப்போது தன்னையும்தானே சேர்த்து நமஸ்கரித்தாக வேண்டும்?' சிவபெருமானிடம் "உங்கள் உடலில் ஒருபாகத்தை எனக்குத் தாருங்கள்' என்று நேரடியாக கேட்க விரும்பாமல் அதற்கு வேறு ஓர் உபாயம் கண்டு பிடித்தார்!
ஒருநாள் சிவபெருமான் தனித்து வீற்றிருக்கையில் அவர் பின்புறமாக வந்த உமை விளையாட்டாய் அவரது கண்களைப் பொத்தினார். அவ்வளவுதான்! அடுத்த கணமே அண்ட சராசரமெல்லாம் ஒளியிழந்து எங்கும் ஒரே இருட்டு. உயிர்கள் அனைத்தும் தடுமாறின. தேவர்கள் அனைவரும் விழுந்தடித்துக்கொண்டு அந்த இருட்டில் தட்டுத் தடுமாறி சிவபெருமான் முன்பு விழுந்து வணங்கி உலகை உய்விக்க வேண்டினர். அப்போது சிவன் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து ஒளியை உண்டாக்கினார். ஜீவராசிகள் பிழைத்தன. தான் விளையாட்டாய் சிவனின் கண்ணைப் பொத்த அது எத்தகைய விபரீதத்தை விளைத்து விட்டது என்பதை உணர்ந்து பதைபதைத்த உமா தேவி சிவனிடம் தனது அந்த பாவந்தீர பூமிக்குச் சென்று தவம் செய்ய விரும்புவதாய்க் கூறினார். அதற்குச் சிவன் புன்னகைத்தபடி, ""தேவி! எந்தப் பாபமும் உன்னை அணுகாது. இருப்பினும் உலகம் உய்யத் தவம் செய்ய விரும்புகிறாய் என்பது எனக்குப் புரிகிறது. மண்ணுலகில் தவம் செய்யச் சிறந்த இடம் காஞ்சியேயாகும். எனவே அங்குச் சென்று தவம் மேற்கொள்'' என்கிறார்.
உமையம்மை தன் பரிவாரங்கள் சூழ கச்சியம்பதி என்று அழைக்கப்படும் காஞ்சிக்குச் சென்று, அங்கு வேதமே மாமரமாகி நிற்க, அதன்கீழ் மணலால் லிங்க உருவைப் படைத்து பெருவெள்ளம் பெருகும்படி சிவன் திருவிளையாடல் புரிகிறார்! எங்கே வெள்ளத்தில் மணல் லிங்கம் கரைந்து விடுமோ என்று அஞ்சி பதைத்த தேவி, லிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார்! தேவியின் அன்பில் மனம் நெகிழ்ந்த சிவன் அவர் முன் தோன்ற, தேவி அவரைப் பணிந்து, ""பெருமானே! உமது இடப்புறத்தை தந்து என்னை உமது ஒருபாதியாக்கிக் கொள்ள வேண்டும்!'' என்று வேண்ட, அதற்கு சிவபெருமான், ""உமையே! இங்கு தவம் புரிந்ததால் கண்களைப் பொத்திய வினை கழிந்தது. ஆனால் எமது இடப் பாகம் வேண்டும் என்றால் நினைக்க முக்தியளிக்கும் திருவண்ணாமலை சென்று அங்கு தவம் செய். அங்கு அதனை அருள்வோம்'' என்று கூறி மறைந்தார்.
தேவிக்கு மட்டற்ற மகிழ்ச்சி. "தனக்கு உடலில் இடது பாகத்தைத் தர ஈசன் சம்மதித்து விட்டாரே... தவம்தானே செய்ய வேண்டும்? அது என்ன பிரமாதம்? கடும் தவம் புரிந்து இடது பாகத்தையும் பெற்றுவிட்டால்... பிருங்கி முனிவா... அப்போது என்ன செய்வாய் நீ?' என தான் பெறப்போகும் மகத்தான வெற்றியை மனதில் ஓடவிட்டபடி மகா சந்தோஷத்துடன் தன் பரிவாரங்களுடன் விநாயகர், முருகர் உட்பட திருவண்ணாமலை நோக்கிப் பயணித்தார்.
வழியில் திருவண்ணாமலை நெருங்கும்போது ஓரிடத்தில் சற்று ஓய்வெடுத்தபோது அங்கு முருகக் கடவுள் வாழைப்பந்தல் இட்டார்! பின்பு நீராடித் தூய்மை பெற தன் திருக்கரத்திலிருந்த வேலாயுதத்தை ஏவி அருகிலிருந்த மலை ஒன்றினைப் பிளந்து அதனிலிருந்து ஒரு நதியை உருவாக்கினார் ஆறுமுகப் பெருமான். சிவ, பார்வதியின் சேய் தருவித்ததால் அந்த நதி "சேயாறு' என வழங்குவதாயிற்று. "வாழைப்பந்தல்' இட்ட இடம் இன்றும் வாழைப்பந்தல் என்ற திருத்தலமாக விளங்குகிறது. உமையும் மற்றவரும் சேயாற்றில் நீராடித் தூய்மையாக திருவண்ணாமலையை அடைந்தனர். அங்கு ஏற்கெனவே தவம்புரிந்து கொண்டிருந்த கௌதம முனிவர் உமையையும் மற்றவர்களையும் மகா அன்புடன் வரவேற்று உபசரித்து உமையம்மை தவம் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளைச் சிறப்புற செய்து தந்தார்.
இங்கும் அன்னை மேற்கொண்ட தவத்திற்கு இடையூறு செய்ய மகிடாசுரன் என்ற அரக்கன் தன் பெருத்த சேனைகளுடன் வந்து கலகம் விளைவித்தான். ஆனால் உமை சிறிதும் கலங்காமல் தன் சொரூபமாக துர்க்கையைத் தோற்றுவிக்க அவள் கடும் ஆவேசத்துடன் பாய்ந்து மகிடாசுரனையும் அவன் சேனைகளையும் துவம்சம் செய்தாள்.
பின்பு நெடுங்காலம் உமை அங்கு தவம் புரிந்தார். கடைசியில் அந்த நாளும் வந்தது. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தன்று நீராடி அண்ணாமலையானைத் தொழுது நின்றார் உமையம்மை. அப்போது மலைமேல் கோடானுகோடி சூரியர்கள் ஒருசேர உதித்தாற்போல் ஒரு பெரும் ஜோதிப்பிழம்பு தோன்றியது. தன்னை வணங்கி நின்ற உமையம்மையை அந்த மலையை வலம் வருமாறு ஓர் அசரீரி பணித்தது. அதுகேட்ட அம்மை தன் பரிவாரங்களுடன் வேதங்கள் முழங்க அண்ணாமலையை வலம் வந்தார். பல திசைகளிலும் பணிந்த பின்னர் இறுதியாகக் கீழ்த்திசை வந்து தொழுதபோது சிவபெருமான் ரிஷபத்தின்மீது வீற்றிருந்தபடி காட்சி தந்து உமையம்மைக்குத் தன் உருவில் பாதியைத் தந்து கலந்தருளினார்.
தொண்டை மண்டலம், வடதிருமுல்லைவாயில் தலத் திருப்புகழ்ப்பாடலான "அணி செவ்வியார் திரை சூழ்'' எனத் துவங்கும் பாடலில் ""குணவில்ல தாமக மேரினை யணிசெல்வி யாயரு ணாசல குருவல்ல மாதவ மேபெரு குணசாத குடிலில்ல மேதரு'' என்ற அடிகளில் இந்த நிகழ்ச்சியை படம்பித்துக் காட்டுகிறார் அருணகிரிநாதர். இந்தப் புராண நிகழ்வு இன்னும் வேறு சில திருப்புகழ்ப் பாடல்களிலும் இடம் பெற்றுள்ளது.
- மயிலை சிவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.