வெள்ளிமணி

திருமால் வாமனராய் உலகளந்த வரலாறு!

பக்த பிரகலாதனின் பேரனான "மகாபலி' அசுர குருவான சுக்ராச்சாரியார் ஆசியாலும் வழிகாட்டுதலாலும் பலரும்

தினமணி

பக்த பிரகலாதனின் பேரனான "மகாபலி' அசுர குருவான சுக்ராச்சாரியார் ஆசியாலும் வழிகாட்டுதலாலும் பலரும் போற்றும் வண்ணம் ராஜ்யத்தை ஆண்டு வந்தான். குலகுருவாய் விளங்கிய சுக்ராச்சாரியாரிடம் அவன் கற்ற மந்திர, தந்திரங்கள், யுத்தப் பயிற்சிகள் மூலம் மூவுலகையும் வென்று வாகை சூடினான். இந்த மகாபலி சிவபெருமானிடம் வரம் பெற்றவன்! ஆமாம், அவனது முற்பிறவியில் ஒரு எலியாகப் பிறப்பு எடுத்தவன். சிவன் கோயிலில் அலைந்து திரிந்து கிடைத்ததை உண்டு திரிந்த அந்த எலி, ஒருநாள் இரவு கோயிலின் திருவிளக்கின் திரி அணைந்து போகும் தருவாயில் இருந்தபோது அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது. தன் கோயிலில் விளக்கை அணைய விடாமல் சிவத்தொண்டு செய்த எலியின் சேவையை நோக்கிய சிவபெருமான், ""உனது அடுத்த பிறப்பில் "பலி' என்னும் நாமத்துடன் அரசகுலத்தில் பிறந்து மூவுலகையும் வென்று ஆளும் வல்லமை பெறுவாய்' என்று வரமளிக்க, இந்தப் பிறவியில் பிரகலாதனின் பேரனாய் அவதரித்து மகாபலிச் சக்ரவர்த்தியாய் திகழ்ந்தான்.

மகாபலியின் முற்பிறப்பு ரகசியத்தைத் தன் ஞான திருஷ்டியால் அறிந்திருந்த சுக்ராசாரியார் அவனுக்குப் பலவிதத்திலும் உதவிபுரிந்து அதற்கு கைமாறாக தேவர்களை ஒழித்துக் கட்ட அவன் உதவ வேண்டும் என்று வாக்கு கேட்கிறார். மகாபலியும் தன் குருவின் கட்டளையை சிரமேற்கொண்டு பெரும் சேனையுடன் சென்று இந்திரலோகத்தைக் கைப்பற்றி இந்திரனையும் இதர தேவர்களையும்

அங்கிருந்து துரத்தியடித்துவிட்டு மூவுலகையும் கைப்பற்றிச் சிறப்பாக ஆண்டு வந்தான்.மகாபலி மற்ற எல்லோரும் மிக நல்லவனாக, உத்தமனாக, சகலருக்கும் தான தர்மங்களை அள்ளி வழங்கும் வள்ளலாக இருந்தாலும் தேவர்களை மட்டும் மிகத் துன்புறுத்தினான். அதற்கு காரணம் அவன் தன் குல குருவுக்கு அளித்த வாக்குறுதிதான்.

இதற்கிடையே தேவலோகத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்ட இந்திரன் முதலான தேவர்கள் தங்கள் குருவாகிய பிரகஸ்பதியிடம் போய் முறையிட, அவர் ஸ்ரீமன் நாராயணனை அணுகும்படி கூறுகிறார். சரி, தங்கள் தந்தையாகிய காஸ்யப முனிவரிடம் போய் முறையிடலாம் என்று அவரிடம் செல்ல, அவர் பிரம்ம தேவரையும் அழைத்துக் கொண்டு மகாவிஷ்ணுவிடம் சென்று அனைத்து

விருத்தாந்தங்களையும் கூறித் தங்களை காப்பாற்றும்படி வேண்டுகிறார்கள். அவரும் தேவர்களின் நிலையை அறிந்து மனமிரங்கி, தான் காஸ்யபர், அதிதி தம்பதிகளுக்கு மகனாக வாமன அவதாரம் எடுத்து மகாபலியை அடக்குவதாக வாக்களித்திருக்கிறார். அதன்படி அதிதி ""பயோவிரதம்'' எனப்படும் விரதத்தை அனுஷ்டிக்க வேண்டிய முறைகளை விவரமாக ஸ்ரீமன் நாராயணன் எடுத்துரைக்கிறார். அதன்படியே அதிதியும் அந்த விரதத்தை மிகுந்த பக்தி சிரத்தையுடன் மேற்கொள்ள புரட்டாசி மாதம், சுக்லபட்ச துவாதசி திதியில் திருவோண நட்சத்திரத்தில் ஸ்ரீமன் நாராயணன் வாமனனாகத் திருஅவதாரம் செய்தார்.

மிகக் குள்ளமான வடிவுடன் (வாமன வடிவமாக) ஸ்ரீஹரி அவதரித்தபோது இந்த உலகமே மகாப்பிரகாசமாக விளங்கியது. தேவர்கள் தங்களுக்கு வெகு விரைவில் நல்ல காலம் பிறந்து விடும் என்று பெருமகிழ்ச்சி கொண்டார்கள்.

காஸ்யபரும் அதிதியும் தங்கள் செல்வனை மிக்க அன்புடன் வளர்க்க, அவனுக்கு உபநயனம் செய்விக்க வேண்டிய நேரம் வந்தது. அப்போது பூமாதேவி வாமனருக்கு மான்தோலும் பிரகஸ்பதி பூணூலும் மரீசி முனிவர் தண்டக்கோலும் பிரம்ம தேவர் கமண்டலமும் சப்தரிஷிகள் தர்ப்பைப் புல்லையும் வழங்க பிட்சை பாத்திரத்தில் அன்னை பார்வதி முதன் முதலாக அன்னமிட பரத்வாஜர் உபநயனம் செய்வித்தார். சாஷாத் சூரிய பகவானே வந்து காயத்ரி மந்திரத்தை உபதேசித்தார்!

ஆயிற்று. உபநயனம் முடிந்தது. வாமனர் பிரம்மச்சரிய நிலையை அடைந்து பிட்சை ஏற்கும் பொருட்டு, மகாபலி சக்ரவர்த்தி அப்போது ஒருபெரும் யாகம் செய்வதைக் கேள்விப்பட்டு அங்கு செல்கிறார்.

அப்போது, மகாபலி தேவேந்திர பதவியைப் பெறும் பொருட்டு குலகுரு சுக்ராச்சாரியார் தலைமையில் மிகப் பெரும் யாகம் ஒன்றைச் செய்து கொண்டிருந்தான். தனது யாகசாலைக்கு வந்து கேட்பார் எல்லோருக்கும் அவர்கள் யாசித்தது எல்லாம் மனமுவந்து தானம் செய்து கொண்டிருந்தான் மகாபலி. அவனுக்கு வாமனரது குள்ள உருவத்தைக் கண்டு சிரிப்பு வந்தது. ஆனால் அதேநேரம் அவரது முகத்தில் ஜொலித்த அபார தேஜஸ் அவனைத் தடுமாற வைத்தது. வாமனரை வரவேற்று ""உமக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்கிறான். வாமனர், தனக்கு தன் காலால் அளந்து மூன்று அடிநிலம் வேண்டும் என்று கேட்கிறார். இன்னும் யாசித்து நிறைய நிலங்களைக் கேளும். அத்தனையையும் தருகிறேன்'' என்கிறார் மகாபலி.

""இல்லை. இல்லை... தேவைக்குமேல் கேட்பது தர்மமாகாது. அது பேராசை. எனக்கு நான் கேட்டபடி, என் காலால் அளந்த மூன்றடி நிலம் போதும்'' என்கிறார் வாமனர்.

""சரி, உமது இஷ்டம்'' என்று கூறிய மகாபலியை நெருங்கி அவனை ஓர் ஓரமாக அழைத்துச் செல்கிறார் குரு சுக்ராச்சாரியார்.

""மகாபலி! மோசம் போய் விடாதே. இவன் கேட்டபடி அவன் காலால் மூன்றடி நிலத்தையெல்லாம் கொடுத்துவிடாதே. இதில் ஏதோ சூது இருக்கிறது. இவன் மாயத்தை நான் அறிவேன். இவன் ஜெகஜ்ஜால வித்தைக்காரனனான விஷ்ணு. இப்படி வாமனராய் உருவெடுத்து உன் குலத்தை அழிக்க வந்திருக்கிறான். ஜாக்கிரதை!'' என்கிறார் சுக்ராச்சாரியார்.

ஆனால் மகாபலி குருவின் வார்த்தையை கேட்கவில்லை. ""குருவே! என்னை இந்த விஷயத்தில் மன்னியுங்கள். "தருகிறேன்' என்று வாக்குக் கொடுத்து விட்டேன். அதிலிருந்து மாறுபடுவது பெரும் பாவம்.

வந்திருப்பது நீங்கள் சொல்வது போல் மாயக்கார விஷ்ணுவாகவே இருக்கட்டும். அப்பேர்ப்பட்ட விஷ்ணுவே என்னிடம் யாசகம் கேட்கிறார் என்றால் எனக்கு அதைவிட என்ன பெருமை இருக்கமுடியும்?

கேட்கும் அவர்கை கீழும், இடும் என் கை மேலேயும்தானே இருக்கும்? அதனால் என்னைத் தடுக்காதீர்கள்!'' என்று கூறி கமண்டல தீர்த்தத்தால் தாரை வார்க்கத் தொடங்கினான் மகாபலி. கடைசியாக ஒரு

முயற்சி எடுத்துப் பார்த்து விடுவோம் என்று எண்ணிய சுக்ராச்சாரியார் உடனே, ஒரு வண்டு உருவம் எடுத்து கமண்டலத்தில் புகுந்து அதன் நீர் வெளியே வரும் துவாரத்தை அடைத்துக் கொண்டார்! நீர் வெளியே வராவிட்டால் தாரை வார்த்துத் தர முடியாதே!

வாமனருக்கு சுக்ராச்சாரியாரின் தந்திரம் புரிந்து விட்டது. உடனே யாகசாலையில் தர்ப்பைப்புல் ஒன்றை உருவி அதன் அடிக்கட்டையால் கமண்டலத்தின் துவாரத்தில் அழுத்திக் குத்தினார்! உள்ளே வண்டாய் உட்கார்ந்திருந்த சுக்ராச்சாரியாரின் ஒரு கண் குருடாயிற்று! கண் குத்தப்பட்டதும் விருட்டென்று வண்டு வெளியேற நீர் வெளியே வர மகாபலி தாரை வார்த்து தானத்தை வழங்கி முடித்தான்.

தானத்தை வாங்கிய வாமனரின் உருவம் கிடுகிடுவென ஓங்கி உயர்ந்து வளர்ந்து ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் விஸ்வரூபம் எடுத்தது. அந்த உருவம் வாயு, சூரிய, சந்திர மண்டலங்களையெல்லாம் கடந்து நின்றது. அந்த உருவத்தில் அண்ட சராசரம் அனைத்தும் விளங்குவதைக் கண்டு மகாபலி திடுக்கிட்டுத் திகைத்து நின்றான். ஓங்கி உலகளந்த பெருமாள் என்ற பெயருக்கு ஏற்ப திருமால் இந்தப் பூவுலகை ஓரடியாலும் இரண்டாவது அடியால் விண்ணுலகையும் அளந்தார். பின்பு வாமனர், பலியே! எனக்கு மூன்றாவது அடிக்கு நிலம் எங்கிருந்து தருவாய்?'' எனக்கேட்டார்.

மகாபலி தயங்கவில்லை. ""பகவானே! நான் பொய் பேசுவதில்லை. சொன்ன சொல்லையும் தவற மாட்டேன். உங்களது மூன்றாவது அடிக்கு என் சிரசே தங்களுக்குச் சொந்தம். அதன்மீது உங்கள் அடியை வைத்து அளந்து கொள்ளுங்கள்!'' என்றபடி அவர்முன் சிரம் குனிந்து வணங்கி நின்றார்.

உடனே வாமனராய் தன் உருவத்தைக் குறுக்கி அந்தப் பிஞ்சுக் காலால் மகாபலியின் சிரசில் மூன்றாவது அடியையும் அளந்து கொள்கிறார் ஸ்ரீமன் நாராயணன். பின்பு மகாபலிக்கு பாதாள லோகத்தை ஆண்டு வரும் உரிமையை அளித்து உரிய காலத்தில் (எட்டாவது மனுவின் ஆட்சி வரும்போது) இந்திரப் பதவியையும் தருவதாக வாக்களித்து மறைகிறார்.

"கருவினுருவாகி வந்து'' என்று துவங்கும் பழனிப்பதி திருப்புகழ் பாடலில் "" உரகபட மேல் வளர்ந்த பெரியபெரு மாளரங்க ருலகளவு மால் மகிழ்ந்த'' என்ற அடிகளில் திருமாலின் வாமனவதார சிறப்பைச் சுட்டிக் காட்டுகிறார் அருணாகிரிநாதர்.

- மயிலை சிவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணைய பாதுகாப்பு படிப்பு: விஐடி-ஆஸ்திரேலிய பல்கலை. ஒப்பந்தம்

ஏஐ மூலம் குழந்தைகளுக்குத் தீங்கிழைக்கப்படுவதை தடுக்க சட்டங்கள் தேவை: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா

முதல்வா் கோப்பை: டென்னிஸில் தஞ்சாவூா், கோவைக்கு தங்கம்

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்த வாரம் இந்திய குழு அமெரிக்கா பயணம்

கூட்ட நெரிசல் தடுப்புச் சட்டம் அவசியம்

SCROLL FOR NEXT