சோழ நாட்டில் உள்ள திருமண்டங்குடியில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் மார்கழி மாதம் சதுர்த்தசி திதியில் செவ்வாய்க்கிழமை கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர் தொண்டரடிப்பொடியாழ்வார். இவரது இயற்பெயர் விப்பிரநாராயணர்.
விப்பிரநாராயணர் திருமணத்தில் விருப்பமற்று, பல தலங்கள்தோறும் சென்று இறைவனை வணங்க எண்ணியவராய் முதற்கண் திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தார். அங்கு பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதனைச் சேவித்து அவரது அழகில் ஈடுபட்டு, பெரியாழ்வார் போன்று நந்தவனம் அமைத்து மலர்களை மாலையாகத் தொடுத்து அளித்தும் திருப்பணியை மேற்கொண்டார்.
தேவதேவி என்னும் நாட்டிய மங்கை அவரை தம் வசப்படுத்த ஏதேதோ முயற்சிகள் செய்தாள். முடிவில் தம் மனதை அத் தேவதேவியிடம் பறிகொடுத்தார் விப்பிரநாராயணர்.
இவ்வாறு சில காலங்கள் கழிந்தன. பணம் இல்லாத விப்பிரநாராயணரை நீங்கினாள் அப்பெண். பின்னர் எம்பெருமான் திருவிளையாடல் புரிந்தார்.
திருக்கோயில் பாத்திரங்களுள் பொன் வட்டில் ஒன்றை எடுத்துச் சென்று விப்பிரநாராயணர் அறியாவண்ணம் தேவதேவியிடம் தந்து ""நான் அழகிய மணவாளதாசன், விப்பிரநாராயணர் அனுப்ப வந்தேன்'' என்று கூற, தேவதேவியும் வாசலில் நின்றிருந்த விப்பிரநாராயணரை உள்ளே அனுப்பும் படியாகக் கூறினாள்.
மறுநாள் ஆலயத்தில் இருந்த பாத்திரங்களில் பொன் வட்டிலைக் காணாத கோயில் காப்போர் அதனை அரசனுக்கு அறிவிக்க, அரசனும் அர்ச்சகர், பரிசாரகர் முதலானவர்களை தண்டித்து வருத்தினான். பின்னர் ஒற்றர் மூலம் தேவதேவியின் இல்லத்தில் பொன் வட்டிலிருப்பதை உணர்ந்து தேவதேவியை அழைத்து வினவ, அவள், விப்பிரநாராயணர் ஏவலாளியாகிய அழகிய மணவாளதாசன் மூலம் விப்பிரநாராயணர் இதனை அனுப்பினார் என்றாள்.
விப்பிரநாராயணரோ, தனக்கு ஒன்றும் தெரியாது என்றார். ""தமக்கு ஏவலாளன் இல்லை'' என்று மறுத்துரைத்தார். அரசனும் களவாடிய பொருளை வாங்கியதற்குரிய அபராதப் பொருளையும் பொன் வட்டிலையும் தேவதேவியிடமிருந்து பெற்றுப் பெருமாளுக்களித்து பின் விப்பிரநாராயணரை சிறையில் இட்டான்.
மீண்டும் அரங்கநாயகி அரங்கநாதனை அருள்புரியுமாறு வேண்டினார் விப்பிரநாராயணர். பெருமாளும் அரசனது கனவில் எழுந்தருளி, "தாசியிடத்துக் காதல் கொண்ட இவ்வந்தணருடைய கருமத்தைக் கழித்தல் பொருட்டு நாமே பொன் வட்டிலைக் கொண்டு போய்த் தந்து இவனைத் தண்டித்தோம். உண்மையில் இவன் கள்வனல்லன்' என்று தெரிவித்தார். அரசன், அமைச்சர் முதலியோரிடம் அறிவித்து அப்பொழுதே விப்பிரரை விடுவித்து உபசரித்து அனுப்பிவிட்டான்.
பிறவிப் பெருங்சிறையினின்றும் விடுபடுவதற்கு ஒரு முதற்குறியாகக் காவலிலிருந்து விடுபெற்ற விப்பிரர் தமது துவளத்தொண்டினை மறந்து பொருட் பெண்டிரின் பொய்ம்மை மயக்கத்தில் ஆழ்ந்திருந்ததற்கு வருந்தி, பெரியோர்களைச் சார்ந்து பிராயச்சித்தம் தமக்குச் செய்யுமாறு வேண்டினார். பெரியோர்களும் பல நூற்பொருள்களை ஆராய்ந்து பாவங்கள் யாவும் நீங்குவதற்கு ஏற்ற பிராயச்சித்தம் பாகவதர்களுடைய திருவடித் தீர்த்தத்தை உட்கொள்வதே என்று உய்யுமாறு கூற, அவர் அங்ஙனமே அதனைப் பெற்றுப் பருகித் தூய்மையாயினர். வைணவர்களுடைய திருவடித் தூளியாய் அவர்களுக்கு கீழ்படிந்து அடிமை பூண்டு ஒழுகி, அதனால் தமக்கு அதுவே பெயராக அவர் "தொண்டரடிப்பொடி' என்று திருநாமம் பெற்றார்.
பின்னர் இறைவனருளால் அர்ச்சாவதாரத்தில் மிக்க ஈடுபாடு கொண்டு, திருவரங்கத்துப் பெருமானுக்கு துளவத்தொண்டு பூண்டு வாழ்ந்து, தமது அனுபவத்தைப் பிரபந்தமூலமாகப் பிறர்க்கு தெரிவிக்க கருதி திருமாலை, திருப்பள்ளியெழுச்சி என்ற திவ்வியப் பிரபந்தங்களை அருளிச் செய்து உலகத்தாரை வாழ்வித்து பல்லாண்டுகள் திருவரங்கத்தில் வாழ்ந்தார். தொண்டரடிரப்பொடியாழ்வாரால் பாடப்பெற்ற தலங்கள், திருவரங்கம், திருவயோத்தி, திருபாற்கடல் ஆகியவை
யாகும்.
தேவதேவியும் தான் உய்வு பெற எண்ணித் தனது பொருளனைத்தையும் அரங்கனுக்கே உரியதாக்கிவிட்டு கோயிலில் திருவலகிடுதல், மெழுகுதல் முதலிய தொழில்களை சிலகாலம் செய்து கொண்டிருந்து முடிவில் நற்கதி அடைந்தாள். தொண்டரடிப்பொடியாழ்வாரின் பாசுரங்கள் அனைத்தும் இன்னிசை உடையனவாய் பக்திச் சுவை நிறைந்து தேனினும் இனிமை பயப்பனவாய் பொலிகின்றன.
இவரின் அவதார நன்னாள் 27.12.2016 இல்
அமைகிறது.
- எம்.என். ஸ்ரீநிவாஸன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.