வெள்ளிமணி

பாவத்தை போக்கும் துல்ஜாபூர் பவானியம்மன்!

DIN

ஒரு சமயம் மகிஷன் என்ற அசுரன் அசுரர்களுக்கெல்லாம் அரசனாக இருந்தான். அவன் தேவர்கள் யாவரையும் வெல்ல வேண்டுமென்று மும்மூர்த்திகளையும் வேண்டித் தவம் செய்து யாரும் அடையமுடியாத அளவு பலமும் வரமும் பெற்றான். தேவலோகத்தை வென்று இந்திரனையும் அவனுடன் சேர்ந்த மற்ற தேவர்களையும் அடித்துத் துரத்திவிட்டு தாமே அவர்களின் வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டான். 
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நூறு ஆண்டுகள் போர் நடந்தது. தேவர்கன் மகிஷனுடைய தபோபலத்தின் முன் நிற்க முடியாமல் தோற்று ஓடிவிட்டனர். எனவே தோற்று ஒடிய தேவர்கள் எல்லோரும் தேவேந்திரன் தலைமையில் ஒன்றுகூடி மும்மூர்த்திகளிடம் சென்று முறையிட்டனர். அம்மூவரும் அன்னை ஆதிபராசக்தியை வேண்டவே அவர் அவர்கள் முன்பு தோன்றி சிவபெருமானின் உடலிலுள்ள மாயா சக்தியைப் பிரித்து ஓரிடத்தில் ஜோதியாகத் திகழச்செய்தார். எல்லா தேவர்களுடைய சக்தியும் தேஜோ மயமாக மாறி அந்தத் ஜோதியில் கலக்கவே புதிய பவானி தேவி துர்கா தேவியாகப் பல ஆயிரம் கைகளுடன், அளவற்ற பலமிக்க சிங்க வாகனத்தில் தோன்றினார். 
தேவர்கள் யாவரும் அத்தேவிக்கு அவரவர் ஆயுதங்களையும், நகைகளையும் கொடுத்து வணங்கி நின்றனர். அத்தேவி சண்டி முதலான ஒன்பது தேவிகளை உண்டாக்கி பெரும் முழக்கத்துடன் போருக்குச் சென்றார். தேவி, அசுரர்கள் போடும் சப்தத்தையும் விட பெரியதான சப்தமிட்டு முழக்கம் செய்தார். அன்னையின் இடிபோன்ற ஒலியைக் கேட்ட மகிஷன் அந்த ஒலிக்கேட்ட திசையை நோக்கித் தன்பெரும் படையுடன் வந்தான். தேவியைப் பார்த்து ஏளனமாகக் கூறி போர் செய்தான். 
சகல உலகிற்கும் அதிபதியான மகிஷன் கணக்கிட்டுக் கூறமுடியாத அளவு நால்வகைப் படைகளுடன் வந்து அன்னை பவானியுடன் போர் செய்தான். அன்னை படையை நோக்கிச் சென்றார். புயல் காற்றில் சிக்கிய தூசிபோல் அவ்வளவு படைகளும் அழிந்தன. மகிஷனும் பல வடிவம் எடுத்து அன்னையிடம் போரிட்டான். 
இறுதியில் அன்னை, சண்டி சாமுண்டி தேவிகளுக்கு கீழே விழும் மகிஷன் ரத்தத்தைக் குடித்து செயல் இழக்கச் செய்யும்படிக் கூறி மகிஷனை வெட்டினார். அன்னை கூறியபடியே மகிஷனின் ரத்தம் முழுவதும் இருதேவிகளும் பருகிடவே, மகிஷன் இறந்து விழுந்தான். சகல அண்டங்களும் வெற்றியின் கோஷமிட்டு அன்னைக்கு வாழ்த்தொலி செய்தன. இந்த கோலத்தையே துல்ஜாபூரில் தரிசிக்கலாம்.
பவானி அம்மன் திருமாலின் சகோதரி மாயை ஆவார். அவரே பார்வதி தேவியும், சக்தி தேவியும் ஆவார். திருமால் பல அவதாரங்கள் எடுத்தது போல் அன்னை பார்வதிதேவியின் அவதாரங்களில் ஒன்றே பவானி அம்மன். அவரே துர்க்காதேவியும் ஆவார். மதுராவில் கம்சன் தன் சகோதரி தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையினால் கொல்லப்படுவான் என அறிந்து தேவகியையும் அவரது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்து விடுகிறான். பிறந்த ஏழு குழந்தைகளையும் கம்சன் கொன்றுவிடுகிறான். எட்டாவது குழந்தையைக் காப்பாற்ற வசுதேவர் கோகுலத்தில் யசோதைக்குப் பிறந்த பெண் குழந்தையை மாற்றிச் சிறைச்சாலைக்கு எடுத்து வந்து விடுகிறார். அப் பெண்குழந்தையை கம்சன் கொல்லப் போகுமுன் அவன் கைகளிலிருந்து நழுவி, மேலே சென்று துர்காத் தேவியாகத் காட்சி தந்து மறைந்து விடுகிறார். அந்த துர்காதேவியே பவானி அம்மன் என்று கூறுகின்றனர். 
பெரிய பாளையம் என்னும் ஊரில் உள்ள அம்மனும் இந்த பவானி அம்மனே என இதே வரலாறு கூறுகின்றனர். துல்ஜாபூர் பெரியபாளையம் ஆகிய ஊர்களிலுள்ள இரு பவானி அம்மன்களுக்கும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. 
இத்தலம் சிவாஜியால் கட்டப்பட்ட மலைக்கோட்டை என்கின்றனர். சிவாஜி மகாராஜாவின் குலதெய்வம்தான் இந்த பவானி அம்மன்! இத்தலம், சக்திதலம், இந்துக்களின் புனிதயாத்திரை தலம். கோயிலின் சிம்மதுவார் சர்தார் நிம்பால்கர் துவார் என்றழைக்கப்படுகிறது. மற்ற இரண்டு வாயில்களும் சிவாஜி மகாராஜாவின் தாய், தந்தையர் பெயரால் ராஜா சாஹாஜி துவார் மற்றும் ராஜமாதா ஜிஜாபாய் துவார் என்றழைக்கப்படுகின்றன. 
கோயிலைச் சுற்றி சித்திவிநாயகர் , மகாதேவர், நரசிம்மர், தத்தாத்ரேயர், சித்ரேசுவரர் லிங்கம், நாராயணர், லட்சுமி ஆகியோர்க்கு தனி சந்நிதிகள் உள்ளன. அன்னை பவானியின் உருவச்சிலை 3 அடி உயரம், எட்டுக் கைகளையுடைதாக வலது பாதத்திற்கு அடியில் மகிஷாசூரனை மிதித்தப்படி உள்ளார். பெண்கள் மிகவும் விரும்பி வேண்டுதல் நேர்த்திக்கடன் செய்யும் தலம். மலைச்சிகரங்களுக்கு இடையே மலைப்பகுதியில் உள்ள தலம். மிகவும் சக்திவாய்ந்தவராக துர்காதேவி விளங்குகிறார். பாவத்தையும், நோயையும் போக்கக் கூடிய சிறந்த தீர்த்தங்கள் இங்கே உள்ளன. மராட்டிய மக்கள் மிகவும் விரும்பி வழிபடும் தலம் இது. 
வழித்தடம்: இக்கோயில் மகாராஷ்டிரா மாநிலம், உஸ்மானாபாத் மாவட்டத்தின் தென் பகுதியில் உள்ளது. தெற்கே சோலப்பூரில் இருந்து சாலை வழியாக துல்ஜாபூரை அடையலாம். அருகே உள்ள ரயில் நிலையம் சோலாப்பூர். 
- பொ.ஜெயச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT