முகப்பு
வெள்ளிமணி

மஹாலட்சுமி தரிசித்த கௌரி தாண்டவம்!

மாலவன் மிக்க மகிழ்வு கொண்டவராய் ஒருநாள் காணப் பெற்றார். அதற்கான காரணம் கேட்டார்  மகாலட்சுமி.

Updated On : 11 நவம்பர், 2017 at 11:39 AM
பகிர்:

மாலவன் மிக்க மகிழ்வு கொண்டவராய் ஒருநாள் காணப் பெற்றார். அதற்கான காரணம் கேட்டார்  மகாலட்சுமி. திருமாலும் புன்னகை பூத்தவாறே, இன்று சிவபெருமான் அம்பிகை கௌரி மனம் மகிழ உலக உயிர்களைப் பேணவும், காக்கவும்வல்ல கௌரி தாண்டவத்தை ஆடியருளியதே தனது ஆனந்தத்துக்கு காரணம் என்றார்.  அந்த எல்லையில்லா மகிழ்வு தரும் ஆனந்தத் தாண்டவத்தினை தானும் காண வேண்டி அருள்புரிய  கேட்டுக்கொண்டார் அன்னை லட்சுமி தேவி, திருமாலும் மனமகிழ்ந்து  ""நீயும் தென்தமிழகத்தில் உள்ள திருப்புத்தூர் சென்று தவமியற்றி வா! பெருமான் அருள் நடனக் காட்சி கிடைக்கும்!' என திருவாய் மலர்ந்தருளினார்.

அன்னை மஹாலட்சுமியும் திருப்புத்தூர் எழுந்தருளி அங்கே சுயம்புவாய் அருள்பாலிக்கும்  ஈசனை வழிபாடு செய்து தவமியற்றினார். ஈசனும் மனம் மகிழ்ந்து கௌரி தாண்டவத்தை அன்னை மகாலட்சுமிக்காக திருப்புத்தூரில் நடனமாடிக் காட்டினார்.

எதிர்பாராமல் பாம்பு கால்களின் கீழ் வந்து விட்டால் எங்ஙனம் அஞ்சிக் காலைத் தூக்குவோமோ,  அங்ஙனம் இயல்பாகவே காலைத் தூக்கி எம்பெருமான் ஆடிய இந்நடனம் "புஜங்கதிராசம்' எனப் பெற்றது. காத்தல் தொழிலுக்காக ஆடியதால் "ராட்சா தாண்டவம்' எனப் பெயர் பெற்றது. அன்னை லட்சுமிக்காக ஆடியருளியதால் "லட்சுமி தாண்டவம்' எனவும் அழைக்கப் பெறுகிறது.

Advertisement

தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் கற்திருப்பணிகளால் செய்யப் பெற்றதால் "கற்றளி' என அழைப்பதுண்டு. இங்கே திருவே (மஹாலட்சுமியே) வந்து தவம் இயற்றியதால் திருத்தளி என்று அழைக்கப் பெறுவதுடன் ஈசன் திருநாமமும்  "திருத்தளிநாதர்' எனப் போற்றப் பெறுகின்றது.  

இத் திருக்கோயில் ஈசனையும் அம்பிகையையும் வழிபடுவோர் பேறுபெற்றோர். முதல் பிரகாரத்தில்  "அநபாயச் சோழன் காவணம்' என்னும் பெரிய மண்டபத்தினை ஒட்டி  "திருப்புத்தூர் தமிழ்ச் சங்க மன்றம்'  உள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் கொடிமரம், பெரிய  நந்தியம்பெருமான் அருள்பாலிக்கின்றார்.

மேற்கு நோக்கி சூரியனும், அவரை ஒட்டிய பெரிய கல் மண்டபத்தில் ஸ்ரீமஹாலட்சுமி வடக்கு நோக்கி நடராஜப் பெருமானை தரிசித்த வண்ணம் அருள்பாலிக்கின்றார்.  தொடர்ந்து அறுபத்து மூன்று நாயன்மார்கள், இருபத்தேழு நட்சத்திர நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். அருகில் 
ஸ்ரீவீரபத்திரர் சந்நிதி உள்ளது. தொடர்ந்து சப்தமாதர்கள் அமைந்துள்ளனர். பஞ்சமி திதி தோறும் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சப்தமாதர்களுக்கு எதிராக கோஷ்டத்தில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கின்றார். தொடர்ந்து வலம் வரும்போது கன்னிமூலை கணபதி, ஸ்ரீவருண லிங்கேஸ்வரர், காசிவிஸ்வநாதர், 
விசாலாட்சி ஆகியோருக்கு தனிச்சந்நிதி உள்ளது. 

தலவிருட்சமாக சரக்கொன்றை மரம் உள்ளது. வான்மீகி முனிவரின் சிலையும் அமைந்துள்ளது.  தனிச் சந்நிதியில் அகஸ்தீஸ்வரர் அருள்கின்றார். அதே சந்நிதியில் மகாலட்சுமி தெற்கு நோக்கி புடைப்புச் சிற்பமாக உள்ளார்.

தொடர்ந்து வலம் வரும்போது சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கையை காணலாம்.

வெளியே தனிச் சந்நிதியில் தவக்கோலத்தில் பத்மாசனத்தில் தேவியர்கள் உடனுறை யோக நாராயணர் அருள்பாலிக்கின்றார். தனிச்சந்நிதியில் நடராஜப் பெருமானின் கௌரி தாண்டவ அற்புதக் கோலம் எதிரே உள்ள அன்னை ஸ்ரீ மஹாலட்சுமிக்கு அருள்பாலித்த வண்ணம் உள்ளார். மூலவர் சுயம்பு மூர்த்தி கொன்றை வனத்தில் தாமாகத் தோன்றியவர்; யுகங் கடந்தவர். அகத்தியர், வான்மீகி, அன்னை மஹாலட்சுமி, திருஞானசம்பந்தர், அப்பரடிகள் ஆகியோர் தரிசித்து பேறு பெற்ற மூர்த்தி. காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி, ஐந்தெழுத்தினை ஓதி  வழிபடுகின்றோம். 

வெளிப் பிரகாரத்தில் வடக்கு நோக்கி வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமண்ய சுவாமி அருள்பாலிக்கின்றார். மண்டபத் தூண்களில்  பெரிய மருது, சின்ன மருது, ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. இவர்களே இத் திருப்பணியினைச் செய்த பெருமக்கள் ஆவர். 

மண்டபத்தினுள் நுழைந்து உள்ளே சென்றால்  ஸ்ரீயோக பைரவர் சந்நிதி உள்ளது.  மருது பாண்டியர்களின் குல தெய்வமாக விளங்கியவர்.

அந்தாகாசுரன், சம்பகாசுரனை இறைவனின் ஆணைக் கிணங்க போரிட்டு அழித்தவர். சிவபக்தனை கொன்ற சாபம் நீங்கிட பிரம்மஹத்தி தோலிஷம் போக்கிட இங்கு வந்து தவமியற்றி அருள்பெற்றார்.  இவரே ஆதி பைரவர் என்றழைக்கப் பெறுகின்றார்.  சிவபெருமானின் அருளால் எட்டுத் திக்குகளையும் காவல் செய்யவும்,  நவக் கிரகங்களை ஆட்சி செய்யவும் அருள்பெற்றார்.  எனவே, இத்தலம் பைரவத் தலமாகவும் உள்ளது.  இவரை வணங்கினால் நவக்ரக தோலிங்கள் நீங்கவும், பில்லி, சூனியம், ஏவல் போன்றவை அகலவும் அருள்கிடைக்கும். இவருக்கு உரிய  "மேருபீடம்', சந்நிதிக்கு நேராக மூன்றாம் பிரகாரத்தில் உள்ளது. 

சம்பகாசுரனை பைரவர் அடக்கி ஒடுக்கிய கார்த்திகை மாதம் சஷ்டி திதி பைரவரின் வெற்றி நாளாக "சம்பகசஷ்டி'  என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப் பெறுகின்றது.  தேவேந்திரனின் மகன் ஜெயந்தன் இங்கு வழிபட்டு தோலிஷம் நீங்கியதால், சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை ஜெயந்தன் பூஜை வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. சந்நிதியில் ஜெயந்தன் சிலையும் உள்ளது.

மூன்றாம் பிரகாரத்தில் ஈசான்ய மூலையில் கிழக்கு நோக்கிய திசையில் தனிக் கோயிலில் அம்பிகை  சிவகாம சுந்தரி அருள் பொழிகின்றாள். நின்ற திருக் கோலம்! அழகு ததும்பும் புன்னகையுடன் இரண்டு திருக்கரங்கள் என கண் கொள்ளாக் காட்சியாக அம்பிகை அருள்பாலிக்கின்றாள்.  அம்பிகையின் முன்னர் நந்திகேஸ்வரர், வலப்புறத்தில் சண்டிகேஸ்வரி சந்நிதி உள்ளது.

மதுரை - குன்றக்குடி சாலையில் மதுரையிலிருந்து 60 கி. மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.