வெள்ளிமணி

கூத்தாடி மைந்தனின் சம்ஹாரக் கூத்து!

DIN

முருகப்பெருமான் சூரபதுமனை வெற்றிகொண்டு, தேவர்களைக் காப்பாற்றி, தேவலோகத்தை மீட்டு, தேவேந்திரனை மீண்டும் இந்திரலோகத்திற்கு அரசனாக்கிய நிகழ்ச்சியையும், தேவேந்திரன் தனது மகள் தெய்வயானையை முருகப்பெருமானுக்குத் திருமணம் செய்து கொடுத்த வரலாற்றையும் குறிக்கும் விதமாக அனைத்து முருகன் தலங்களிலும் ஐப்பசி மாதத்தில் ஆறு நாள்கள்கந்தஷஷ்டி விழா சிறப்பாக நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதில் ‘சூரசம்ஹாரம்' என்பது ஒரு தத்துவார்த்தத்தை குறிக்கும் செயலாகும். உண்மையான சம்ஹாரம் அல்ல. அது என்னவென்று தெரிந்து கொள்வோம்.

உயிரைச் சார்ந்துள்ள ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மூன்று மலங்களுள் கன்மம், மாயை இரண்டும் தவத்தால் அழியும். ஆணவம் மட்டும் செம்பில் களிம்புபோல் இருந்து கொண்டே இருக்கும். அதனை ஞானகுருவின் அருட்பார்வை ஒன்றே அழிக்க இயலும். எனவே ஆணவ வடிவாக இருந்த சூரபதுமனை தனது ஞானவேல்கொண்டு ஆணவத்தை அழித்து, ஆனந்தமயமாக்கித் தன்னுடனேயே சேவற்கொடியாகவும், மயில் வாகனமாகவும் வைத்துக் கொண்டார். இதுவே முருகப்பெருமானின் அருட்செயலாகும். ஞான வடிவமான முருகப்பெருமானோடு இச்சா சக்தியாக வள்ளியும் கிரியா சக்தியாக தெய்வயானையும் ஞானசக்தியாக வேலும் உள்ளன.

காஞ்சிக்கு வடமேற்கு திசையில் வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் உள்ளது மேலபுலம்புதூர். இவ்வூரில் உள்ள பழைமையான சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தர் சஷ்டி விழா சற்று வித்தியாசமானது. 

கந்தர் சஷ்டி தொடங்கி 6 ஆவது நாளன்று இரவு 10.00 மணிக்கு சுவாமி புறப்பாடு ஆனபின் அவர் முன்னிலையில் அவரைச் சாட்சியாக வைத்து தெருக்கூத்து (முருகன் பிறப்பு, வளர்ப்பு, சிறப்பைப் பற்றிய நாடகம்) நடைபெற்று கூத்தின் முடிவில் விடியற்காலை 3.00 மணி அளவில் சம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் வழக்கம் காலம்காலமாக பின்பற்றப்படுகின்றது. 

இவ்வாண்டு அக்டோபர் -25 இரவு 10.00 மணிக்கு நாடகம் ஆரம்பித்து மறுநாள் (அக்டோபர்  26) காலை 3.00 மணிக்கு சூரசம்ஹாரத்துடன் நிறைவுபெறும். அன்று மாலை வள்ளி தேவசேனாவுடன் சிவசுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. வாய்ப்புள்ளவர்கள் அவசியம் கண்டுகளிக்க வேண்டிய ஒரு ஆன்மீக நிகழ்வு. (மேலபுலம்புதூர் செல்ல காஞ்சீபுரம், ஆற்காடு, அரக்கோணத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன)
- எஸ்.வெங்கட்ராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT