முகப்பு
வெள்ளிமணி

நீரில் விளக்கேற்றிய நின்மலத் தொண்டர்!

சைவ நாயன்மார்கள் அறுபத்து மூவரும் சித்தத்தை சிவன்பாலே வைத்து ஓவ்வொருவரும் ஒவ்வொரு குறிக்கோளுடன் வாழ்ந்தவர்கள்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:32 PM
பகிர்:

சைவ நாயன்மார்கள் அறுபத்து மூவரும் சித்தத்தை சிவன்பாலே வைத்து ஓவ்வொருவரும் ஒவ்வொரு குறிக்கோளுடன் வாழ்ந்தவர்கள். தாம் மேற்கொண்ட குறிக்கோளைத் தமது உயரினும் மேலாகக் கருதியவர்கள். அந்த அடியார்களின் வரலாறுகள் வழங்குகின்ற செய்திகள் தனிமனித வாழ்க்கையும் சமுதாய வாழ்வும் அமைதியாகவும் லட்சியப் பிடிப்புடனும் அமைய பெரிதும் உதவியாக இருக்கின்றன. அப்படிப்பட்ட அடியார்களை வணங்கி இறைவனே அடி எடுத்துக்கொடுக்க "திருத்தொண்டத் தொகை" எனும் அரிய நூலினை சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளினார்.
இந்த நாயன்மார்கள் வரிசையில் ஆலயத்தில் இறைவனுக்கு திருவிளக்கு ஏற்றும் திருப்பணியை தலையாகக் கொண்டு ஆற்றி சிவபெருமானின் முழு ஆளுமைக்கு உட்பட்டவர்களில் கலியநாயனார், கணம் புல்ல நாயனார், நமி நந்தி அடிகள் நாயனார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் வறுமையின் காரணமாக எண்ணெய் வாங்க வசதியில்லாமல் தமது ரத்தத்தினால் விளக்கேற்றியவர் கலியநாயனார். "கணம்புல்' என்ற புல்லினால் விளக்கேற்றி அதுவும் கிடைக்காத நிலையில் தமது தலை ரோமத்தைக் கொண்டே விளக்கு எரித்தவர் கணம்புல் நாயனார். இனி நமி நந்தியடிகள் எவ்வகையில் இப்பணியினை மேற்கொண்டார் என அறிந்து கொள்வோம்.
திருவாரூலிருந்து திருத்துறைப் பூண்டி செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருநெய்ப்பேர் (ஏமப்பேறூர்) தேவார வைப்புத்தலம். இவ்வூரில் அந்தணர் குலத்தில் அவதரித்தவர் நமி நந்தியடிகள் நாயனார். நாள்தோறும் ஆரூர் அண்ணலைச் சென்று தரிசிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவ்வாறு செல்லுகையில் திருவாரூர் கோயிலின் திருமதிலுக்கு (இரண்டாம் சுற்று) அருகில் உள்ள தனிக்கோயிலில் சந்நிதி கொண்டுள்ள அரநெறியப்பரை தரிசித்து அங்கு சந்நிதியில் தீபம் ஏற்ற விரும்பினார். தனது ஊருக்குச் சென்று விளக்கெரிப்பதற்கு நெய்கொண்டு திரும்பி வருவதனால் பொழுது சாய்ந்து விடும் எனக் கருதினார். எனவே கோயில் அருகேயுள்ள ஒரு வீட்டிற்குச் சென்று "விளக்கேற்ற சிறிது நெய் தாருங்கள்' எனக்கேட்டார். 
அது சமணர்கள் வாழும் வீடு. அவர்கள் நமி நந்தியடிகளிடம் "அனலேந்திய சிவனுக்கு விளக்கேன்? தண்ணீர் விட்டு விளக்கை எரியவிடும்" என்று இகழ்ந்து கூறிப்பரிகாசம் செய்தனர். மிகவும் மனவருத்தத்துடன் ஆலயம் திரும்பிய அடிகளார், இறைவன் சோதனையை எண்ணி அவரிடமே முறையிட்டார். அவரைச் சோதிக்க விரும்பாத இறைவன், அசரீரியாக அருகில் உள்ள குளத்து நீரை ஊற்றி விளக்கேற்றப் பணித்தார். அந்த குளம் தேவாசிரிய மண்டபத்திற்கு அடுத்த மேல்புறம் உள்ள சங்கு தீர்த்தமாகும். ஆண்டவன் கட்டளைப்படி அக்குளத்து நீரை கொண்டு சென்று ஐந்தெழுத்து ஓதிய வண்ணம் பக்தியுடன்அகல்விளக்கில் இருந்த திரியின் மீது அந்த நீரை வார்த்து விளக்கு ஏற்றினார். என்ன அதிசயம்?. அந்த விளக்கு சுடர்விட்டு எரிந்தது. உடனே ஆலயம் முழுவதும் பல விளக்குகளில் தண்ணீர் விட்டு எரித்து ஒளி பரப்பினார். ஏளனம் செய்த சமணர்கள் வெட்கம் அடைந்தார்கள். நீரினால் விளக்கிடும் பணியை தொடர்ந்து வரும் நாள்களில் செய்து வரலானார். அடியவர் நிகழ்த்தும் அற்புதத்தின் பெருமையை அறிந்த சோழ மன்னன், திருவாரூர் ஆலயத்தில் தினசரி பூஜைகளுக்கும் உற்சவ நாள்களை முறைப்படி நடத்துவதற்கும் பல நிபந்தங்களைஅமைத்து அதனை நிர்வகிப்பதற்கு நமிநந்தியடிகளையே தலைவராக நியமித்தான். அவ்வாறு நமி நந்தியடிகள் ஏற்படுத்திய விழா நாள்களில் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திர திருவிழா முக்கியமான சிறப்புடையதாகும். நமிநந்தியடிகளை ஆட்கொண்ட இறைவன் மற்றொரு சம்பவத்தின் மூலம் ஜாதி வேறுபாடு பார்ப்பது தவறு என்பதையும், தனக்கு எல்லா குலத்தினரும் ஒன்றே என்பதனையும் இந்த அடியாரைக் கொண்டே உணர்த்தியுள்ளார்.
ஏமப்பேறூர் என்ற ஊர், "நெய்வேண்டி நீரை விளக்கு நெய்யாகப் பெற்றவரது ஊர்' என்ற காரணத்தினால் "திருநெய்ப்பேறு' என்ற காரணப் பெயரால் தற்போது வழங்கப்படுகின்றது. இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவனின் திருநாமம் வன்மீக நாதர். அம்பிகையின் திருநாமம் உமா மகேஸ்வரி அம்பாள். நமி நந்தி நாயனாருக்கு தனி சந்நிதி உண்டு. ஒரு சிவாலயத்திற்குத் தேவையான அனைத்து சந்நிதிகளும் இங்கு உண்டு. ஆனால் நவக்கிரகங்களில் சூரிய, சந்திரர்களுக்கு மட்டும் தான் சந்நிதி உண்டு. 1966 - ஆம் ஆண்டு நடந்த குட முழுக்கிற்குப்பிறகு தற்போது கிராம மக்கள் மற்றும் சேவார்த்திகள் பங்களிப்புடன் பல திருப்பணி வேலைகள் நடந்தேறியுள்ளது. ஆலயம் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. 
மகாகும்பாபிஷேகம் மார்ச் -30 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடைபெறுகின்றது. அன்று மாலை சுவாமி அம்பாள் திருக்கல்யாண உற்சவமும் நமி நந்தி அடிகள் அவதார இல்லத்திலிருந்து நாயனார் புறப்பட்டு, திருக்கோயிலில் விளக்கேற்றும் வைபவமும் நடைபெறுகின்றன. யாகசாலை பூஜைகள் மார்ச்- 28 அன்று ஆரம்பமாகிறது. 
தொடர்புக்கு: 94448 12040.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.